கொன்றுண்ணல்
சூழலியலில் கொன்றுண்ணல் அல்லது இரை பிடித்துண்ணல் (predation) என்பது, தாக்கப்படும் உயிரினமான ஒரு இரைக்கும் (prey), தாக்கும் உயிரினமான ஒரு இரை பிடித்துண்ணி அல்லது கொன்றுண்ணிக்கும் (predator) இடையிலான உயிரியல் தொடர்பு என விளக்கப்படுகின்றது[1]. கொன்றுண்ணிகள் உண்பதற்கு முன் இரையைக் கொல்லலாம் அல்லது கொல்லாமலும் விடலாம். ஆனாலும் இரை பிடித்துண்ணும் செயல் முறையில் இரையானது இறுதியில் இறப்புக்குள்ளாகி, அவற்றின் இழையங்கள் இரை பிடித்துண்ணியினால் உட்கொள்ளப்பட்டுவிடும்[2].
இன்னொரு வகை இறந்த உயிர் எச்சங்களை உண்ணுதல் (பிணந்தின்னல்) ஆகும். இவ்விரு உண்ணும் நடத்தைகளையும் வேறுபடுத்துதல் சில சமயங்களில் கடினமானது. எடுத்துக் காட்டாகச் சில ஒட்டுண்ணிகள் ஓம்புயிர்களில் உணவைப் பெற்றுக்கொண்டபின் அவற்றின் இறந்த உடல்களில் இளம் ஒட்டுண்ணிகள் உணவு பெறுவதற்காக அங்கேயே முட்டைகளையும் இடுகின்றன. கொன்றுண்ணலின் முக்கியமான இயல்பு, இரை உயிர்களில் கொன்றுண்ணிகள் ஏற்படுத்தும் தாக்கம் ஆகும். பிணந்தின்னிகள், கிடைப்பதை உண்கின்றனவேயன்றி உண்ணப்படும் உயிரினங்களில் நேரடியான தாக்கங்கள் எதையும் ஏற்படுத்துவது இல்லை.
கொன்றுண்ணிகளின் வகைப்பாடு
தொகுகொன்றுண்ணி வகைப்பாடுகள் எல்லாவற்றினதும் பொது அம்சம், கொன்றுண்ணிகள், இரை உயிரினத்தின் வாழ்திறனைக் குறைக்கின்றன என்பதாகும். அதாவது கொன்றுண்ணல், இரையுயிர்களின் வாழுவதற்கான வாய்ப்புக்களையோ, இனம் பெருக்குவதற்கான வாய்ப்புக்களையோ அல்லது இரண்டையுமோ குறைக்கின்றது.
செயற்பாட்டு வகைப்பாடு
தொகுஎந்த அளவுக்குக் கொன்றுண்ணிகள் தமது இரையுயிர்கள் மீது உணவுக்காகத் தங்கியுள்ளன, அவற்றுடன் எவ்வாறான தொடர்புகளைக் கொண்டுள்ளன என்னும் அடிப்படையில் அவற்றை வகைப்படுத்துவது சூழலியலாளருக்குப் பயன்படக்கூடியது. கொன்றுண்ணிகள் எதை உண்கின்றன என்பதில் கவனம் செலுத்துவதை விட அவை எந்த முறையில் உணவு பெறுகின்றன என்பதும், அவற்றுக்கும், இரையுயிர்களுக்கும் இடையில் உள்ள தொடர்புகளும் இவ் வகைப்படுத்தல் முறைக்கு அடிப்படையாக அமைகின்றன.
உண்மையான கொன்றுண்ணல்
தொகுஉண்மையான கொன்றுண்ணலில் ஒரு உயிரினம் இன்னொரு உயிரினத்தைக் கொன்று உண்கின்றது. இதில், இரையுயிர் உடனடியாகவே இறந்துவிடுகிறது. சில கொன்றுண்ணிகள் இரைக்காக அவற்றைத் தேடிச் சென்று வேட்டையாடுகின்றன. வேறு சில, மறைந்து தாக்கும் கொன்றுண்ணிகள் போல, இரைகள் தாக்கும் தொலைவில் வரும்வரை ஒரே இடத்தில் காத்திருக்கின்றன. சில கொன்றுண்ணிகள், உண்பதற்கு முன் இரையைத் துண்டுதுண்டாகப் பிய்த்து விடுகின்றன. வேறு சிலவோ முழு இரையையும் முழுதாகவே விழுங்குகின்றன. முதல் வகைக்குச் சிங்கம் போன்றவற்றையும் இரண்டாவது வகைக்குப் பாம்பையும் எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம். சில முறைகளில், இரை, கொன்றுண்ணியின் வாயில் அல்லது சமிபாட்டுத் தொகுதியிலேயே இறக்கிறது.
அடிக்குறிப்புகள்
தொகு- ↑ Begon, M., Townsend, C., Harper, J. (1996). Ecology: Individuals, populations and communities (Third edition). Blackwell Science, London. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86542-845-X, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-632-03801-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-632-04393-8.
- ↑ Encyclopedia Britannica: "predation"