பண்டைய நூல்களில், பாடல் கொண்டிருக்கும் கருத்தைப் பாடலின் முடிவில் தொகுப்பாசிரியர்கள் அல்லது உரையாசிரியர்கள் குறிப்பிடும் பகுதியைக் கொளு என்பது வழக்கம். கொளு என்பது கொண்டிருக்கும் செய்தி என விளங்கிக்கொள்ள வேண்டும். கொளுக்குறிப்பு எனவும் இதனைக் குறிப்பிடுவர். இத்தகைய குறிப்பு நூலுக்கு அமையுமாயின் அதனைப் பாயிரம் என்பர். இது நூலிலுள்ள ஒவ்வொரு பாடலுக்கும் தரப்படும் குறிப்பு.

எருமை அன்ன கருங் கல் இடை தோறு,
ஆனின் பரக்கும் யானைய, முன்பின்,
கானக நாடனை! நீயோ, பெரும!
நீ ஓர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்:
அருளும் அன்பும் நீக்கி, நீங்கா
நிரயம் கொள்பவரொடு ஒன்றாது, காவல்,
குழவி கொள்பவரின், ஓம்புமதி!
அளிதோ தானே; அது பெறல் அருங் குரைத்தே.

இது புறநானூறு 5 ஆம் பாடல்.

திணை பாடாண்திணை; துறை செவியறிவுறூஉ; பொருண்மொழிக் காஞ்சியும் ஆம்.
சேரமான் கருவூர் ஏறிய ஒள் வாட் கோப் பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட ஞான்று, நின் உடம்பு பெறுவாயாக!' என, அவனைச் சென்று கண்டு, தம் உடம்பு பெற்று நின்ற நரிவெரூஉத்தலையார் பாடியது.

இவை இந்தப் பாடலுக்கு அமைந்த கொளுக் குறிப்புகள்.

புறநானூற்றில் ஒவ்வொரு பாடலுக்கும் தரப்பட்டுள்ள கொளுக்குறிப்பைப் போல பதிற்றுப்பத்து நூலில் 10 பாடல்களுக்கும் தொகுப்பாகக் கூறப்பட்டுள்ள குறிப்பைப் பதிகம் என வழங்குகின்றனர். இதில் ஒவ்வொரு பாடலுக்கும் சூட்டப்பட்டுள்ள பெயரைக் 'கொளு' எனலாம்.

புறப்பொருள் வெண்பாமாலை நூலில் திணை, துறை விளக்க நூற்பாக்களை அந்நூல் 'கொளு' எனக் குறிப்பிடுகிறது.

கலவார் முனைமேல்
செலவு அமர்ந்தன்று.

இது வெட்சிப்படலத்தில் வரும் 'வெட்சி அரவம்' என்னும் துறைக்குத் தரப்பட்டுள்ள கொளு.

அடிக்குறிப்பு

தொகு
  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 262. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. திருக்குறள் 385 பரிமேலழகர் உரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொளு&oldid=1470646" இலிருந்து மீள்விக்கப்பட்டது