கோசோ தீவு (Gozo), மத்தியதரைக் கடலில் உள்ள, மோல்ட்டாத் தீவுக் கூட்டங்களைச் சேர்ந்த ஒரு தீவு ஆகும். தென் ஐரோப்பிய நாடான மால்ட்டாவின் ஒரு பகுதியான இத் தீவு, மால்ட்டாத் தீவுக்கு அடுத்தபடியாக இந் நாட்டின் இரண்டாவது பெரிய தீவு ஆகும். மால்ட்டாத் தீவுடன் ஒப்பிடும்போது கோசோ நாட்டுப்புறப் பகுதியாகும். இது அழகான காட்சிகளைக் கொண்ட மலைகளுக்குப் பெயர் பெற்றது. கிரேக்க இலக்கியமான ஹோமரின் ஒடிசியில் வரும் கதை மாந்தர்களில் ஒருவனின் பெயரைத் தழுவி இத் தீவு கலிப்சோத் தீவு எனவும் அழைக்கப்படுவது உண்டு.

கோசோ
Gozo
கோசோ தீவின் அமைவிடம்
தலைநகரம் விக்டோரியா
பரப்பளவு 67 கிமீ²
மக்கள் தொகை (2005)
 - மொத்தம் 31,000
 - அடர்த்தி 462/கிமீ²


மோல்டா நாட்டின் மொத்த மக்கள்தொகையான 402,000 இல் கோசோ 31,000 மக்களைக் கொண்டுள்ளது. இதன் மக்கள் கோசித்தான்கள் எனப்படுகின்றனர். இத்தீவில் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் உள்ளன. கண்டிஜாக் கோயில்கள் இவற்றுள் சிறப்புப் பெற்றவை. உலகின் மிகப் பழைமையான தனித்து நிற்கும் அமைப்புக்களாகவும், மிகப் பழைய சமயம் சார்ந்த கட்டிடங்களாகவும் இக் கோயில்கள் விளங்குகின்றன.


வரலாறு

தொகு

கோசோவில் கிமு 5000 ஆண்டுகளிலிருந்தே மக்கள் குடியிருந்தனர். சிசிலியில் இருந்து கடல் கடந்து வந்த வேளாண்மைச் சமுதாயத்தினரே இங்கு முதலில் குடியேறியவராவர். இவர்கள் சிசிலியின் சிசானி இனக்குழுவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. கார் தலாம் (Għar Dalam) காலப்பகுதியைச் சேர்ந்த மட்பாண்ட ஓடுகள் இரு இடங்களிலும் கிடைத்துள்ளதை வைத்து, கோசோவில் முதலில் குடியேறியவர்கள் சிசிலியின் அக்ரிஜெண்டோ (Agrigento) பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும் இது குறித்துத் தெளிவான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. சிசிலி மால்ட்டாத்தீவிலும், கோசோவுக்கே அண்மையில் இருப்பதால் குடியேறியோர் மால்ட்டாவுக்குச் செல்வதற்கு முன்னர் கோசோவிலேயே குடியேறினர். அவர்கள் இன்று சென் லாரன்ஸ் என அழைக்கப்படும் இடத்தில் புறப் பகுதிகளில் உள்ள மலைக் குகைகளில் வாழ்ந்திருக்கலாம் எனப்படுகின்றது.

கோசோ பண்பாட்டுப் படிமுறை வளர்ச்சியில் ஒரு முக்கியமான இடமாகும். கட்டிடக் கலை வளர்ச்சியில் முக்கியமான படிநிலை ஒன்றைக் குறிக்கும் கண்டிஜாக் கோயில்கள் இங்கே அமைந்துள்ளன. இவை எகிப்தியப் பிரமிட்டுகளுக்கும், இங்கிலாந்தின் ஸ்டோன் ஹெஞ்சுகளுக்கும் முந்தியவை. கோசோவில் உள்ள இன்னொரு புதியகற்காலக் களம், சாக்ரா கல் வட்டம் (Xagħra Stone Circle) ஆகும்.


1551 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஓட்டோமான்களும், பார்பேரியக் கடற் கொள்ளையரும் துர்குத் ரெயிஸ், சினான் பாஷா ஆகியோர் தலைமையில் கோசோவைத் தாக்கிப் 5000 அளவிலான பெரும்பாலான கோசோ மக்களை அடிமைகளாகப் பிடித்துச் சென்றனர். பின்னர் மால்ட்டாவின் பிரபுக்களினால், 1565க்கும், 1580க்கும் இடையில் மால்ட்டாத் தீவில் இருந்து கொண்டு செல்லப்பட்டோரால் குடியேற்றப்பட்டது.


நெப்போலியனால் தன்னாட்சி வழங்கப்பட்ட 1798 அக்டோபர் 28 தொடக்கம், 1800 செப்டெம்பர் 5 வரையான காலப்பகுதி தவிர, கோசோ மால்ட்டாவின் ஆளுகைக்குக் கீழ் உள்ளதால் கோசோவின் அண்மைக்கால வரலாறு மால்ட்டாவில் வரலாற்றுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோசோ&oldid=2916526" இலிருந்து மீள்விக்கப்பட்டது