பிரமிடு

(பிரமிட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கூம்பகம் அல்லது பிரமிடு (pyramid, கிரேக்க மொழி: πυραμίς pyramis[1]) என்பது பட்டைக்கூம்பு வடிவில் அமைந்த ஒரு கட்டிட அமைப்பு ஆகும். இதன் அடி பெரும்பாலும் சதுரமாக அமைந்திருக்கும். எனினும், இது முக்கோணம், வேறுவகைப் பல்கோணங்கள் ஆகிய வடிவங்களிலும் அமையலாம். இக் கட்டிடங்களின் நிறையில் பெரும் பகுதி அடிப்பகுதியில் அமைந்திருப்பதால், இவற்றின் புவியீர்ப்பு மையம் நிலத்துக்கு அண்மையில் அமைந்திருக்கும் இதனால், சில பழங்கால நாகரிக மக்கள் உறுதியான நினைவுச் சின்னங்களை அமைப்பதற்கு இந்த வடிவத்தைத் தேர்ந்தெடுத்தனர்.

காப்ராவின் கூம்பகம், எகிப்து
எகிப்தின் கீசாவில் உள்ள கூம்பகங்களின் காட்சி
நிலவு கூம்பகம், டியோடியூகான்
பிரசாத் தோம் கோவில் , கோ கெர்
குயிமாரின் கூம்பகங்கள், டெனெரைஃப் (எசுப்பானியா)
மட்காசென் அரசரின் கல்லறை கூம்புவடிவ கூம்பகங்கள், தொன்மை அல்சீரியா (நுமிடியா)

பல ஆயிரம் ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய அமைப்புக்கள் பிரமிடுகளாகவே இருந்தன. முதலில் எகிப்தில் தச்சூர் நகரத்தில் உள்ள சிவப்புப் பிரமிட்டும், பின்னர் மன்னர் கூபுவின் பெரிய பிரமிடும் மிகப்பெரிய அமைப்புக்களாக இருந்தன. பழைய ஏழு உலக அதிசயங்களுள் இன்றும் நிலைத்திருப்பது கூபுவின் பெரிய கூம்பகம் மட்டுமே. இது பெரும்பாலும் சுண்ணக்கல்லால் கட்டப்பட்டுள்ளது; சில உள்ளறைகள் சிவப்பு கிரானைட்டு கற்களால் ஆனவை. கட்டிடவியல் அதிசயம் எனப்படும் பெரி கூம்பகத்தில் 2.5 tonnes (5,500 lb) இலிருந்து 15 tonnes (33,000 lb) வரை எடையுள்ள 1,300,000 கற்கள் கொண்டு 13 ஏக்கரா நிலப்பரபில் கட்டப்பட்டுள்ளது. இதன் அடி சதுரத்தின் ஒவ்வொரு பக்கமும் ஏறத்தாழ 230 மீ (755 அடி) நீளமுடையதாக உள்ளது.இதன் உயரம் கட்டப்பட்டபோது 146.5 மீ (488 அடி)யாக இருந்தது. ஆனால் உச்சியில் இருந்த வெண்ணிற துரா சுண்ணக்கற்கள் திருடப்பட்டு கெய்ரோவில் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்டதால் இன்று இதன் உயரம் 137 மீ (455 அடி)யாக உள்ளது. இருப்பினும் இதுவே மிக உயரமான கூம்பகமாக விளங்குகிறது.

உலகில் கட்டப்பட்ட கூம்பகங்களில் கனவளவு அடிப்படையில் மிகப் பெரியது மெக்சிக்கோவில் உள்ள சோலுலாவின் பெரிய பிரமிடு ஆகும். இக் கூம்பகம் இன்னும் அகழப்பட்டு வருகின்றது.

கூம்பகம் வடிவிலான கட்டிடங்கள் எகிப்தியர், மாயர், சுமேரியர் உள்ளிட்ட பல பழம் நாகரிக மக்களால் அமைக்கப்பட்டன.

பாரிசில் உள்ள லூவர் அருங்காட்சியகம் முன்பாகக் கண்ணாடியாலான கூம்பகம் அமைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் நெவாடா மாநில லாஸ் வேகஸ் நகரில் லக்சர் ஓட்டல் எகிப்திய கூம்பகத்தின் வடிவமைப்பில் கண்ணாடியால் கட்டப்பட்டுள்ளது.

தொன்மையானக் கட்டிடங்கள்

தொகு

மெசொப்பொத்தேமியா

தொகு

மெசொப்பொத்தேமியர்கள் சிக்குரத்கள் எனப்பட்ட துவக்க கால கூம்பகங்களை முதன்முதலாகக் கட்டினர். இவை சூரிய வெப்பத்தில் உலர்ந்த செங்கற்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்டமையால் அனைத்தும் அழிந்துபட்டன. இத்தகைய சிக்குரத்களை சுமேரியர்கள், பாபேலியர்கள், ஈலாமியர்கள், அக்காடியர்கள், மற்றும் அசிரியர்கள் அவரவர் பகுதிகளில் கட்டினர்.

எகிப்து

தொகு

எகிப்திய கூம்பகங்களே மிகவும் புகழ்பெற்றவையும் அறியப்பட்டவையும் ஆகும். செங்கல் அல்லது பாறைகளால் கட்டப்பட்ட இவற்றில் சில உலகின் மிகப்பெரிய கட்டிடங்களில் ஒன்றாக அமைந்தன. பெரும்பாலான கூம்பகங்களின் மேற்பரப்புகள் வெள்ளைநிற சுண்ணக்கற்களால் மிகவும் எதிரொளிக்குமாறு தீட்டப்பட்டிருந்தன. இதனால் தொலைவிலிருந்து பளபளப்புடன் காணப்பட்டன. முகட்டுக்கல் அல்லது சிகரம் மட்டும் கருங்கல் அல்லது எரிமலைப்பாறையால் ஆனதாகவும் தங்கம், வெள்ளி அல்லது தங்கம்,வெள்ளியின் கலப்பு உலோகத்தினால் பூசப்பட்டும் இருந்தது.[2]

கி.மு 2700க்குப் பிறகு [3] கட்டத் துவங்கிய எகிப்தியர்கள் கி.மு 1700 வரை கூம்பகங்களைக் கட்டினர். மூன்றாம் வம்ச காலத்தில் யோசர் மன்னர் காலத்தில் ஆறு மஸ்தபாக்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி முதல் கூம்பகம் ஒன்றை கட்டினர். எகிப்தின் பெரிய கூம்பகங்கள் கிசா என்றவிடத்தில் உள்ளன. பெரும்பாலான கூம்பகங்கள் நைல் ஆற்றின் மேற்குப் புறத்திலேயே கட்டப்பட்டன.

2008ஆம் ஆண்டுப்படி , இதுவரை 135 கூம்பகங்கள் எகிப்தில் கண்டறியப்பட்டுள்ளன.[4][5] எகிப்தின் மிகப்பெரிய கூம்பகமாகிய கிசாவின் பெரிய பிரமிட்டின் அடித்தளம் 52,600 சதுர மீட்டர்கள் (566,000 sq ft) பரப்பளவில் அமைந்துள்ளது. இது பண்டைய உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது. முகட்டில் பதித்திருந்த சுண்ணக்கற்களும் கடற்சங்குகளும்[6] காலப்போக்கில் விழுந்துவிட்டன அல்லது திருடப்பட்டு கெய்ரோவில் கட்டிடங்களுக்குப் பயன்படுத்தப்பட்டன.

 
எகிப்தின் தொன்மையான கூம்பகங்கள்

பெரும்பாலான கூம்பகங்கள் கெய்ரோவிற்கு அண்மையிலேயே உள்ளன.[7]

சூடான்

தொகு

கூம்பகங்கள் எகிப்துடனேயே அடையாளப்படுத்தப்பட்டாலும் உலகின் மிகக் கூடுதலான கூம்பகங்களை கொண்ட நாடாகச் சூடான் விளங்குகிறது. இங்கு 220 கூம்பகங்கள் இன்றும் உள்ளன.[8] நுபியர்கள் சூடானின் மூன்றிடங்களில் இந்த 220 கூம்பகங்களை அமைத்துள்ளனர். நாப்பட்டா மற்றும் மெரோ அரசர்/அரசிகளின் கல்லறைக் கட்டிடங்களாக இவற்றைக் கட்டினர். இவை எகிப்திய கூம்பகங்களிலிருந்து மாறுபட்டுள்ளன. அவற்றைவிட நுபியப் கூம்பகங்கள் செங்குத்தான கோணங்களில் அமைக்கப்பட்டுள்ளன.[9] சூடானில் கிமு 300 வரை கூம்பகங்கள் கட்டப்பட்டு வந்தன.

 
மெரோவில் கட்டப்பட்ட நுபியப் கூம்பகங்கள்.

நைஜீரியா

தொகு

அபுஜாவில் சுடெ கூம்பகங்களை அங்கு வாழ்ந்த குபோ நாகரிகத்தின் கூறாகக் காணலாம். களிமண்ணால் கட்டப்பட்ட பத்து கூம்பகங்கள் இங்குள்ளன. முதல் கட்ட அடிப்பகுதி 60 அடி சுற்றளவையும் 3 அடி உயரத்தையும் கொண்டுள்ளது. அடுத்தப்படியில் 45 அடி சுற்றளவில் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறான அடுக்குகள் வட்டவடிவ ஒன்றன்மேல் ஒன்றாக மேல்வரை கட்டப்பட்டுள்ளன. இவை கடவுளரின் இருப்பிடமாகவும் சிகரத்தில் அவர்கள் வசிப்பதாகவும் நம்பப்பட்டது. இதன் அடையாளமாக ஒரு கம்பு அங்கு நடப்பட்டிருந்தது. இவை ஐந்து குழுக்களாக ஒன்றுக்கொன்று இணையாகக் கட்டப்பட்டன. இவை களிமண்ணால் கட்டப்பட்டமையால் அவ்வப்போது மீளுருவாக்கம் செய்ய வேண்டியிருந்தது.[10]

கிரீசு

தொகு

கிமு இரண்டாம் நூற்றாண்டின் புவியியலாளர் பவுசானியாசு கூம்பகங்களை ஒத்த இரு கட்டிடங்களைக் குறிப்பிடுகிறார்; இவற்றில் ஒன்று ஹெலனிக்கோன் நகரிலிருந்து 19 கிமீ (12 மைல்) தொலைவில் தென்மேற்கே இருந்ததாகவும்[11] அர்கோசு ஆட்சிக்காகப் போராடிய போர்வீரர்களின் நினைவாக இவை கட்டப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவை இரண்டுமே கூம்பகங்களை ஒத்து இருந்ததற்கான எந்தவொரு சான்றும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

 
ஹெலனிக்கோனின் பிரமிடு

இன்றளவும் காணக்கிடைக்கின்ற இரு கூம்பகம் போன்ற இரு கட்டிடங்கள் ஹெலனிக்கோனிலும் லிகுரியோவிலும் உள்ளன. இவை சாய்வான சுவர்களைக் கொண்டிருந்தாலும் எவ்வகையிலும் எகிப்திய கூம்பகங்களை ஒத்திருக்கவில்லை. இவற்றின் உள்ளே பெரிய அறைகள் உள்ளன. ஹெலனிக்கோனிலுள்ள கூம்பகத்தின் அடித்தளம் சதுரமாக இல்லாது செவ்வகமாக,12.5x14மீ, உள்ளது; இதனால் இதன் பக்கவாட்டுச் சுவர்கள் ஒரு புள்ளியில் சந்தித்திருக்க முடிந்திருக்காது.[12]

இந்தியாவில்

தொகு
 
தஞ்சாவூர் கோவிலின் கூம்பகம் வடிவ கோபுரம்.

சோழர்கள் காலத்தில் தென்னிந்தியாவில் கருங்கற்களால் கட்டப்பட்ட கூம்பகம் வடிவ கோபுரங்களுடன் கூடிய பல பெரும் கோவில்கள் இன்றும் சமயப் பயன்பாட்டில் உள்ளன. தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் சிறீரங்கம் வட்டத்திலுள்ள அரங்கநாதசுவாமி கோயில் ஆகியன இவற்றில் சிலவாம். 11ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பிரகதீசுவரர் கோவில் யுனெசுகோவால் உலகப் பாரம்பரியக் களமாக 1987இல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விரிவாக்கமாக 2004 ஆம் ஆண்டு கங்கை கொண்ட சோழபுரம் கோயிலும் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலும் இணைக்கப்பட்டன.[13]

இந்தோனேசியா

தொகு
 
போரோபுதூர், மத்திய சாவா.

இந்தோனேசியாவின் ஆத்திரேலேசிய பாறைக் கட்டமைப்பு பண்பாட்டில் குத்துக்கல், கல் மேடைகள், கற்சிலைகளுக்கு அடுத்ததாகப் புந்தென் பெருந்தக் எனப்பட்ட மண்,கற்களாலான அடுக்கு கூம்பகம் கட்டமைப்புகள் இருந்தன. இவை மேற்கு சாவாவின் குனுங் படாங் பகுதியிலும் சிசுலோக் பங்குயங்கன் பகுதிகளிலும் காண்டறியப்பட்டன. மலைகளிலும் உயர்ந்த இடங்களிலும் மூதாதையரின் ஆவி வாழ்வதாக உள்ளூர் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே இக்கற்கட்டிடங்கள் கட்டப்பட்டன.

மத்திய சாவாவில் உள்ள போரோபுதூரில் 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த சமய கூம்பகம் ஒன்று உள்ளது. பிந்தையக் கால சாவா கட்டமைப்புக்கள் இந்திய கட்டிடக்கலையின் தாக்கத்துடன் கட்டப்பட்டன.

காட்சிக்கூடம்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்சான்றுகள்

தொகு
  1. πυραμίς, Henry George Liddell, Robert Scott, A Greek-English Lexicon, on Perseus Digital Library
  2. Redford, Donald B., Ph.D.; McCauley, Marissa. "How were the Egyptian pyramids built?". Research. The Pennsylvania State University. பார்க்கப்பட்ட நாள் 11 December 2012.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  3. "Egypt Pyramids-Time Line". National Geographic. 2002-10-17. Archived from the original on 2011-08-10. பார்க்கப்பட்ட நாள் 2011-08-13.
  4. Slackman, Michael (2008-11-17). [http://www.nytimes.com/2008/11/17/world/middleeast/17cairo.html Some Egyptologists, notably Mark Lehner, state that the பண்டைய எகிப்து word for pyramid was mer. "In the Shadow of a Long Past, Patiently Awaiting the Future"]. The New York Times. http://www.nytimes.com/2008/11/17/world/middleeast/17cairo.html Some Egyptologists, notably Mark Lehner, state that the பண்டைய எகிப்து word for pyramid was mer.. பார்த்த நாள்: 2010-04-12. 
  5. Lehner, Mark (2008-03-25). Mark Lehner (2008). The Complete Pyramids: Solving the Ancient Mysteries. p. 34. Thames & Hudson. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-500-28547-3.
  6. Viegas, J., Pyramids packed with fossil shells, ABC News in Science, <www.abc.net.au/science/articles/2008/04/28/2229383.htm>
  7. Filer, Joyce (16 January 2006). Pyramids. Oxford University Press. pp. 38–39. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-530521-0.
  8. Pollard, Lawrence (2004-09-09). "Sudan's past uncovered". BBC News. http://news.bbc.co.uk/1/hi/world/africa/3641516.stm. பார்த்த நாள்: 2010-04-12. 
  9. Necia Desiree Harkless (2006). Nubian Pharaohs and Meroitic Kings: The Kingdom of Kush. AuthorHouse. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4259-4496-5.
  10. Basden, G. S(1966). Among the Ibos of Nigeria, 1912. Psychology Press: p. 109, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7146-1633-8
  11. Mary Lefkowitz (2006). "Archaeology and the politics of origins". In Garrett G. Fagan (ed.). Archaeological Fantasies: How Pseudoarchaeology Misrepresents the Past and Misleads the Public. Routledge. p. 188. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-30593-8.
  12. Mary Lefkowitz (2006). "Archaeology and the politics of origins". In Garrett G. Fagan (ed.). Archaeological Fantasies: How Pseudoarchaeology Misrepresents the Past and Misleads the Public. Routledge. pp. 189–190. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-30593-8.
  13. http://whc.unesco.org/archive/2004/whc04-28com-inf14ae.pdf

உசாத்துணைகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பிரமிடுகள்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • Patricia Blackwell Gary and Richard Talcott, "Stargazing in Ancient Egypt," Astronomy, June 2006, pp. 62–67.
  • Fagan, Garrett. "Archaeological Fantasies." RoutledgeFalmer. 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரமிடு&oldid=3945949" இலிருந்து மீள்விக்கப்பட்டது