கோத்தர் (Kotas) என்போர் நீலகிரி மாவட்டத்தில் வாழும் பழங்குடி இன மக்கள் ஆவர். இவர்கள் நீலகிரி மாவட்டத்தில் ஏழு இடங்களில் வாழ்கின்றனர்.

கோத்தர்
1870 ஆம் ஆண்டுகளில் கோத்தர் பெண்களின் கலாச்சார உடை.
மொத்த மக்கள்தொகை
(1203(1974))
மொழி(கள்)
கோத்தர் மொழி, தமிழ் ,
சமயங்கள்
இந்துமதம் மற்றும் கலாச்சாரமற்ற நம்பிக்கைகள்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
தமிழர்கள்,

இவர்கள் தாங்கள் வாழுமிடத்தைக் கோகால் என்றழைக்கின்றனர். வீட்டை அவர் மொழியில் பய் என்றழைப்பர். தாம் வாழும் தெருக்களை கேரி என்றழைப்பர். இராகிப் பிட்டு இவர்கள் விரும்பும் முக்கிய உணவு. கருமார்த் தொழில் (இரும்புக் கருவிகள் செய்தல்), மட்பாண்டம் செய்தல் ஆகியவற்றில் வல்லவர்கள்.

கோத்தர் பேசும் மொழி கோத்தர் மொழி ஆகும். இது தென் திராவிட மொழிப்பிரிவைச் சேர்ந்தது. இம்மொழி வரிவடிவம் அற்றது.

கோத்தர் இறந்தோரை எரிக்கும் வழக்கம் கொண்டவர். இறந்த அன்று பச்தாவ் (பச்சைச் சாவு) என்றும் ஓராண்டு கழித்து வர்ல்தாவ் (காய்ந்த சாவு) என்றும் இரு சடங்குகள் நடத்துவர்.

இவர்கள் மைசூரில் உள்ள கொல்லிமலே எனும் இடத்திலிருந்து வந்தவர்கள் என்றும், தோடர்கள் இவர்களை உடன் உழைப்பதற்காக சமவெளிப் பகுதியிலிருந்து அழைத்து வந்தனர் என்றும் கருத்துகள் இருந்தாலும் இவர்களது பூர்வீகம் சரிவரத் தெரியவில்லை. இவர்கள் கலையார்வம் மிக்கவர்கள்.[1]

சமயவாழ்வு தொகு

கோத்தர்கள் வழிபடும் கடவுளரில் முதன்மையானவர் காமட்டராயன் ஆவார். காமட்டராயன் மனைவியின் பெயர் 'காசிகை. கோத்தர்கள் தங்களுக்குப் பிறக்கும் முதற் குழந்தை ஆணாக இருந்தால், அதற்குக் 'காமட்டன்' என்று தங்கள் கடவுள் பெயரையே பெரும்பாலும் இடுவர். பெண்களுக்கு ‘மாடி' என்ற பெயரே அதிகமாக வழங்குகிறது. மாடி என்பது இவர்கள் வழிபடும் ஒரு சிறு தெய்வத்தின் பெயர் ஆகும். கோதர்கள் வாழும் ஒவ்வோர் ஊரிலும் காமட்டராயனுக்கு கோயில் உண்டு. காமட்டராயனுக்கு ஆண்டுதோறும் பெரு விழா ஒன்று நடைபெறும். சனவரித் திங்களில் உவா நாள் கழிந்து, முதல் திங்கட்கிழமையன்று இவ் விழா துவங்கும். பிறகு பதினைந்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும். இப்பதினைந்து நாட்களையும், ஒவ்வோர் ஆண்டிலும் ஓய்வு நாட்களாக இவர்கள் கருதுகின்றனர். இத் திருவிழாவின் போது, ஆண்களும் பெண்களும் ஒன்றாகக் கூடி ஆடும் ஆட்டம் ஆடுவர். காமட்டராயன் விழா நடைபெறும் அப்பதினைந்து நாட்களும், கோயிலின் முன்னால் மூட்டிய தீ அணையாமல் எரிந்துகொண்டே இருக்கும். கோயிலின் பழைய கூரையை நீக்கிவிட்டு, மூங்கிலினால் புதிய கூரை வேய்வார்கள். இறைவனுக்குச் சிறப்பான ஆடைகளும், தலைப்பாகையும் அணிவித்து அலங்காரம் செய்வர். திருவிழாக் காலங்களில் எல்லாரும் சேர்ந்து வேட்டைக்குச் செல்வார்கள். கோதர்களின் சமயகுரு 'தேவாதி' என்று அழைக்கப்படுகிறார். சமய குருவின் பதவி பரம்பரை உரிமையுடையது. விழாவின்போது தேவாதி ஓர் இரும்புத் துண்டை நெருப்பில் போட்டுப் பழுக்கக் காய்ச்சுவார். பூசாரி அவ்விரும்புத் துண்டைச் சுத்தியால் அடிப்பார். இவ்வாறாகப் பலவிதச் சடங்குகள் விழாவின்போது நடைபெறுகின்றன.[2]

உசாத்துணை தொகு

  • முனைவர் சு.சக்திவேல், தமிழ்நாட்டுப் பழங்குடி மக்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108, முதற்பதிப்பு: 1998

மேற்கோள்கள் தொகு

  1. நீலகிரி சுற்றுலா மலர்; ஆசிரியர் வெ.நிர்மலா; மாஸ் மீடியா குரூப்; 1987
  2. "தமிழகத்தில் குறிஞ்சி வளம், நூல், கவிஞர் முருகு சுந்தரம், பக்கம், 95-208". பழனியப்பா பிரதர்ஸ். பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2020.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோத்தர்&oldid=3063181" இலிருந்து மீள்விக்கப்பட்டது