சக்குளத்துக்காவு பகவதி கோயில்

கேரளத்தின், ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயில்

நீரேற்றுபுரம் சக்குளத்துதுக்காவு பகவதி கோயில் (Chakkulathukavu Temple) என்பது கேரளத்தின், ஆலப்புழை மாவட்டதின், தலவாடி ஊராட்சி, நீராட்டுபுரத்தில் அமைந்துள்ள ஒரு இந்து கோவில் ஆகும். இது துர்கைக்கு அமைக்கப்பட்ட ஒரு கோயிலாகும். இது கேரள மாநிலத்தில் மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றாகும்.

துர்க்கை இப்பகுதியில் மிகவும் பிரபலமான தெய்வங்களில் ஒன்றாகும். தென்னிந்தியா முழுவதிலும் இருந்து வரும் பயணிகள் தேவியைக் கண்டு வழிபடுகின்றனர். சில தசாப்தங்களுக்கு முன்னர் இந்த கோயிலானது புதுப்பிக்கப்பட்டது. அதற்கு முன்பு இக்கோயில் குறித்து உள்ளூர்வாசிகளுக்கு கூட அவ்வளவாக தெரியாது. அப்போது இது உள்ளூர்வாசிகளின் குடும்ப கோயிலாக மட்டுமே இருந்தது.

புனித பம்பை ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த கோயில் கேரளம் முழுவதும் உள்ள பக்கர்களை ஈர்த்ததுடன், மாநிலத்தின் மிகவும் பிரபலமான யாத்ரீக மையமாகவும் திகழ்கிறது. இக்கோயிலில் எட்டு கரங்களுடன் தேவி உள்ளார். இயற்கையோடு இணைந்திருக்கும் தேவியாதலால் கோயில் கருவறைக்கு மேற்கூரை கிடையாது. கோயிலில் சிவன் பிள்ளையார், முருகன், மகாவிஷ்ணு, ஐய்யப்பன், நாகர், யட்சி, ஆனை மருதா ஆகிய தெய்வங்களும் உள்ளனர்.

இக்கோயிலின் முக்கிய திருவிழாவானது பொங்கல், இது விருச்சிகம் மாதத்தில் (நவம்பர் / திசம்பர்) நடைபெறுகிறது. விழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்பே இலட்சக்கணக்கான பெண் பக்தர்கள் கோயிலைச் சுற்றி வருகிறார்கள். கோவில் வளாகம் நிரம்பி வழிகிறது, பக்தர்கள் பிரதான வீதிகளின் இருபுறமும் பொங்கல் வைக்க இடங்களை ஆயத்தம் செய்வார்கள். பொங்கல் வைப்பவர்களின் வரிசையின் நீளமானது ஆச்சரியப்படத்தக்க அளவில் 20 கி.மீ வரை நீண்டுவிடும். அரிசி, தேங்காய், வெல்லம் ஆகியவை பெண் பக்தர்களால் பொங்கல் பொங்க மண் பானைகளுடன் கொண்டு வரப்படுகின்றன. கோயிலின் தலைமைப் பூசாரி கருவறைக்குள் உள்ள தீபத்தில் இருந்து நெருப்பை எடுத்து பிரதான அடுப்பை பற்றவைக்கிறார். இந்த தீ ஒரு அடுப்பிலிருந்து அடுத்ததடுத்த அடுப்புக்குகளுக்கு எடுத்து பற்றவைக்கப்படுகிறது.

கோயிலில் கொண்டாடப்படும் மற்றொரு திருவிழா பந்திரண்டு நொயம்பு . இது சக்குலதம்மாவின் நித்திய ஆசீர்வாத்த்துக்காக பக்தர்கள் மேற்கொள்ளும் உண்ணா நோன்பு மற்றும் பிரார்த்தனை ஆகும். இந்த உண்ணாவிரதமானது ஒவ்வொரு ஆண்டும் மலையாள மாதமான தனு முதல் நாள் முதல் பன்னிரண்டாம் தேதி வரை மேற்கொள்ளப்படும். மற்ற திருவிழாக்களாக நாரீ பூஜை, தரிக்கர்த்தக்கா ஆகியவை ஆகும்.

நாரீ பூஜையானது ஒவ்வொரு ஆண்டும் மாகழி மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று நடக்கிறது. அபோது ஆயிரக்கணக்கான பெண்கள் இங்கு கூடுகின்றனர். தலைமைப் பூசாரி ஒவ்வொரு பெண்ணையும் பீடத்தில் அமரவைத்து தேவியாக பாவித்து பாத பூசை செய்வார்.

வெளி இணைப்புகள் தொகு