சட்ட நூலகம்
சட்ட நூலகம் என்பது, சட்ட மாணவர்கள், சட்ட வல்லுனர்கள், நீதிபதிகள், சட்ட எழுத்தர்கள் போன்றோருக்கும், சட்டம் தொடர்பான பிறருக்கும் உதவும் வகையில் உருவாக்கப்படும் நூலகம் ஆகும். சட்டம் தொடர்பான சிறப்பு வளங்களை வழங்குவதாலும், சிறப்புத்தன்மை கொண்டோரும் வரையறுக்கப்பட்ட அளவினருமான பயன்பாட்டாளர்களைக் கொண்டிருப்பதாலும், சட்ட நூலகங்கள் சிறப்பு நூலகங்கள் என்னும் வகைக்குள் அடங்குகின்றன.
உலகெங்கிலும் உள்ள சட்டக் கல்லூரிகளில் சட்ட நூலகங்கள் உள்ளன. பல்கலைக்கழகங்களின் நூலகங்களில் ஒரு பகுதி சட்டத்துக்காக ஒதுக்கப்படுவது உண்டு.[1] நீதிமன்றங்கள், அரசாங்கத் திணைக்களங்கள், தனியார் சட்ட நிறுவனங்கள் போன்ற இடங்களிலும் சட்ட நூலகங்கள் இருப்பதுண்டு.
உலகின் சட்ட நூலகங்கள்
தொகுஉலகின் மிகப் பெரிய சட்ட நூலகங்கள் ஐக்கிய அமெரிக்காவில் உள்ளன. உலகின் மிகப் பெரிய சட்ட நூலகம் 2.9 மில்லியன் தொகுதிகளைக் கொண்ட அமெரிக்காவில் உள்ள காங்கிரசு சட்ட நூலகம் ஆகும்.[2] 2.0 மில்லியன் தொகுதிகளைக் கொண்ட ஆவார்டு சட்டப் பள்ளி நூலகமே உலகின் மிகப் பெரிய கல்விசார் சட்ட நூலகம். அதேவேளை, ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மிகப் பெரிய சட்ட நூலகம் 550,000 தொகுதிகளோடு கூடிய பாட்லியன் சட்ட நூலகம் (Bodleian Law Library) ஆகும்.[3]
ஐக்கிய அமெரிக்காவில் மூன்று வகையான சட்ட நூலகங்கள் உள்ளன. சட்டப் பள்ளிகளில் உள்ள சட்ட நூலகங்கள், பொதுச் சட்ட நூலகங்கள், தனியார் சட்ட நிறுவன நூலகங்கள் என்பன அவை. அமெரிக்க சட்டக் கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சட்டப் பள்ளிகள் எல்லாவற்றிலும் சட்ட நூலகங்கள் இருக்கும். பல மாநிலங்களில், உள்ளூர் நீதிமன்றங்களில் பொது சட்ட நூலகங்கள் காணப்படுகின்றன. பெரிய தனியார் சட்ட நிறுவனங்கள் அங்கு பணிபுரியும் சட்ட வல்லுனர்களுக்காகச் சட்ட நூலகங்களைப் பேணுகின்றன. பல்கலைக்கழகங்களோடு கூடிய பெரிய நகரங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் தமது ஆய்வுகளுக்காகப் பல்கலைக்கழகச் சட்ட நூலகங்களைப் பயன்படுத்துவதும் உண்டு.
சட்ட நூலகங்களில், பிற நூலகங்களில் காணமுடியாத பெருந்தொகையான ஆக்கங்களைக் காணலாம். பல்வேறு வகையான சட்டம் சார்ந்த அறிக்கைத் தொகுதிகள், மத்திய மாநில அரசுகளின் சட்டங்களும் சட்டவிதிகளும், பல்வேறுபட்ட உடன்படிக்கைகள், தொழில் வழிகாட்டிகள் போன்றவை இவற்றுள் அடங்கும். அண்மைக் காலங்களில் சட்டம் தொடர்பான பல்வேறு வகை அறிக்கைகளும், சட்டத் தொகுப்புக்களும் இணைய வழியாகக் கிடைப்பதால், பல சட்ட நூலகங்கள் இவ்வாறான அச்சுவழியான தொகுதிகளை வைத்திருப்பதைக் குறைத்துக்கொண்டு நூலகத்தில் இணைய வசதிகளைக் கூட்டி வழங்குகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Slinger, M. J. & Slinger, R. M. (2010). "The law librarian's role in the scholarly enterprise: Historical development of the librarian research partnership in American law schools." Journal of Law & Education. 39 (3) 387-410.
- ↑ Law Library of Congress, 'Annual Report Fiscal Year 2016', retrieved 23 February 2017, p. 8.
- ↑ "Bodleian Law Library | About Us". www.bodleian.ox.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 2017-02-23.