சதீஷ் குமார்
சதீஷ் குமார் (பி. 9 ஆகத்து 1936)[1] என்பவர் இந்திய களச்செயற்பாட்டாளரும், இதழாசிரியரும் ஆவார். 1962-இல் அணு ஆயுதம் தரித்திருந்த நான்கு நாடுகளின் தலைநகர்களான வாஷிங்டன், இலண்டன், பாரிஸ், மாஸ்கோ ஆகியவற்றை உள்ளடக்கிய 8000 மைலுக்கும் மேற்பட்ட தொலைவை "அமைதி நடை" பயணமாக நண்பர் ஒருவரோடு சேர்ந்து சுற்றிவந்தவர்.[3] சமணத்துறவியாகவும், அணு ஆயுத எதிர்ப்பாளராகவும், அமைதிவாதியாகவும் திகழ்ந்த இவர்,[4] தற்பொழுது ரீசர்ஜன்ஸ் & ஈகாலஜிஸ்ட் என்ற இதழின் ஆசிரியராக இருந்துவருகிறார். இயற்கையின் மீதான பெருமதிப்பே எந்தவொரு சமூக அரசியல் விவாதத்தின் மையமாகவும் திகழவேண்டும் என்று வலியுறுத்துபவர்.
சதீஷ் குமார் | |
---|---|
2009 | |
பிறப்பு | 9 ஆகத்து 1936 ஸ்ரீ டூங்கர்கர், இராஜஸ்தான், இந்தியா[1] |
இருப்பிடம் | ஹார்ட்லாந்து, தெவொன், இங்கிலாந்து |
பணி | இதழ் ஆசிரியர் |
அமைப்பு(கள்) | Resurgence & Ecologist |
அறியப்படுவது | நிறுவனர், ஷூமாக்கர் கல்லூரி & தி ஸ்மால் ஸ்கூல் |
அரசியல் இயக்கம் | அணுஆயுதக் கைவிடல்; சூழலியல் வளங்குன்றாமை |
இயக்குநராக உள்ள நிறுவனங்கள் | RSPCA[2] |
துணைவர் | ஜூன் மிச்செல் |
பிள்ளைகள் | முக்தி குமார் மிச்செல், மாயா குமார் மிச்செல் |
விருதுகள் | ஜம்னாலால் பஜாஜ் பன்னாட்டு விருது, பிளிமவுத் பல்கலைக்கழகத்திலிருந்து கல்விக்கான மதிப்புறு முனைவர் பட்டம், லங்காஸ்டர் பல்கலைக்கழகத்திலிருந்து இலக்கியத்திற்கான மதிப்புறு முனைவர் பட்டம்; எக்சடர் பல்கலைக்கழகத்திலிருந்து சட்டத்திற்கான மதிப்புறு முனைவர் பட்டம்[2] |
இளமைக் காலம்
தொகுசதீஷ்குமார் இராஜஸ்தானிலுள்ள டூங்கர்கரில் பிறந்தவர். 9 வயதில் வீட்டைவிட்டு வெளியேறி சமணத் துறவியானவர்.[5] 18 வயதில் மகாத்மா காந்தியின் நூல் ஒன்றைப் படித்துவிட்டு இரந்துண்ணும் துறவு வாழ்வை விடுத்து, காந்தியின் சீடரும் அவரது அகிம்சை மற்றும் நிலச்சீர்திருத்தக் கருத்துக்களை முன்னெடுத்தவருமான வினோபா பாவேயிடம் சேர்ந்தார்.[6]
அமைதி நடை
தொகுபெர்ட்ரண்டு ரசலின் அணு ஆயுதத்துக்கு எதிரான ஒத்துழையாமைக் கருத்தால் உந்தப்பட்டு, 1962 ஆம் ஆண்டு சதிஷ்குமாரும் அவரது நண்பருமான இ. பி. மேனோனும் அமைதிக்கான புனித நடைப்பயணம் மேற்கொள்வதென முடிவெடுத்தனர். இந்தியாவிலிருந்து அப்போதைய அணு ஆயுத நாடுகளின் தலைநகர்களான மாஸ்கோ, பாரிஸ், இலண்டன், வாசிங்டன், டி. சி. ஆகியவற்றுக்கு கையில் காசு எதுவும் வைத்துக்கொள்ளாமல் பயணிக்கத் தீர்மானித்தனர். இவ்விரு இளைஞர்களுக்கும் வினோபா பாவே இரண்டு கட்டளைகள் இட்டார்: கையில் காசு வைத்துக் கொள்ளக்கூடாது என்பது ஒன்று; சைவ உணவையே உட்கொள்ள வேண்டும் என்பது மற்றொன்று.
வரலாற்றுரீதியாக இந்தியாவுக்கு எதிரான எதிர்ப்புணர்வு நிலவியதாகக் கருதப்பட்ட பாகிஸ்தானுக்கு முதலில் சென்ற அவர்களுக்கு அன்பான வரவேற்பு கிடைத்தது. ஆப்கானிஸ்தான், இரான், ஆர்மீனியா, ஜார்ஜியா, காக்கசஸ் மலைத்தொடர், கைபர் கணவாய் வழியாகப் பயணித்து மாஸ்கோ, பாரிஸ், இலண்டன், வாஷிங்டன் டி.சி ஆகிய இடங்களுக்குச் சென்றனர். பணம் இன்றி, கால்நடையாகச் சென்ற அவர்கள் உணவும், உறைவிடமும் எவர் தந்தாலும் ஏற்றுத் தங்கினர்.
மாஸ்கோ செல்லும் வழியில் ஒரு தேயிலைத் தொழிற்சாலைக்கு வெளியே இரு பெண்களைச் சந்தித்தனர். தமது பயணத்தின் நோக்கத்தை இவர்கள் விளக்கக் கேட்ட அப்பெண்களுள் ஒருவர் நான்கு தேயிலைப் பொட்டலங்களை இவர்களிடம் கொடுத்து அணு ஆயுத நாடுகளின் தலைவர்களிடம் அவற்றை ஒப்படைக்கக் கோரினார். ஒப்படைத்துவிட்டு அவர்களிடம் "நீங்கள் அணு ஆயுதங்களை ஏவுவதற்கான பொத்தானை அழுத்துமுன் ஒரு நிமிடம் தாமதியுங்கள்; கொஞ்சம் தேநீர் அருந்துங்கள்" என்று சொல்லும்படி வேண்டினார். அந்தப் பெண்மணியின் இச்செயல் நடை பயணத்துக்கு மேலும் ஊக்கமளிப்பதாக அமைந்தது. சொன்னவாறே அவர்கள் நான்கு அணு ஆயுத நாடுகளின் தலைவர்களுக்கும் "அமைதித் தேயிலை"யைப் பரிசளித்தனர்.[7] இந்தப் பயணம் சதீஷ் குமாரின் நோ டெஸ்டினேஷன் என்ற நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.
நூல்கள்
தொகு- No Destination: Autobiography of a Pilgrim (2014) [2004] [1978], Green Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0857842619
- You Are, Therefore I Am: A Declaration of Dependence (2002), Green Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1903998182
- Images of Earth and Spirit: A Resurgence anthology Edited by John Lane and Satish Kumar (2003), Green Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1903998298
- The Intimate and the Ultimate Vinoba Bhave, Edited by Satish Kumar (2004), Green Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1903998397
- The Buddha and the Terrorist: The Story of Angulimala (2006), Algonquin Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1565125209
- Spiritual Compass: The Three Qualities of Life (2008), Green Books/Finch Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1876451943
- Earth Pilgrim in conversation with Echann Deravy and Maya Kumar Mitchell (2009), Green Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1900322577
- Soul, Soil, Society: a new trinity for our time (2013), Leaping Hare Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1782400448
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Kumar, Satish. 2000. "Path without destination: The long walk of a gentle hero", Belief.net. பார்த்தநாள்: 20 ஜூலை 2012.
- ↑ 2.0 2.1 "About Satish", Resurgence. Accessed: 16 June 2012.
- ↑ Vidal, John (16 January 2008). "Soul man". The Guardian (London). http://www.guardian.co.uk/environment/2008/jan/16/activists. பார்த்த நாள்: 23 May 2010.
- ↑ Cullen, Tom A. (19 May 1969). "Indian Pacifist Preaches Guerrilla War on Violence". Star-Banner (Ocala, Florida, United States: Halifax Media Group): p. 8. http://news.google.com/newspapers?nid=1356&dat=19690516&id=2T0xAAAAIBAJ&sjid=_wUEAAAAIBAJ&pg=6823,2947808.
- ↑ Kumar 2000, ப. 18–19
- ↑ "Walking the World for Peace," Context Institute. பார்த்த நாள்: 15 செப்டெம்பர் 2012.
- ↑ BBC World Service radio broadcast, BBC Outlook, 2015 October 25, 0830-0900 GMT, United Kingdom.
வெளி இணைப்புகள்
தொகு- ரீசர்ஜென்ஸ் தளத்திலுள்ள வாழ்க்கைக் குறிப்பு
- இன் கான்டெக்ஸ்ட் தளத்திலுள்ள நேர்காணல்
- பிரித்தானிய கட்டிடக் கலைஞர்களுக்கான அரசவைக் கழகத்தின், கட்டிடக்கலையும் பருவநிலை மாறுபாடும் என்பது பற்றிய பன்னாட்டுக் கலந்துரையாடலில் சதீஷ் குமாரின் முன்வைப்பு
- தெமெனோஸ் அகாடமியில் ஷூமாக்கர் நூற்றாண்டு உரை பரணிடப்பட்டது 2016-04-20 at the வந்தவழி இயந்திரம், 13 செப்டம்பர் 2011.