புணர்ச்சி (இலக்கணம்)

இங்க வந்த இந்த புதிய புதிய உலக சுகாதார நிறுவன நிர்வாக இயக்குனராக
(சந்தி (இலக்கணம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இலக்கணத்தில் புணர்ச்சி அல்லது சந்தி என்பது இரண்டு சொற்கள் இணையும்போது உச்சரிப்பில் உண்டாகும் மாற்றமாகும்.[1] இவை சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழிகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆனால் இந்த உச்சரிப்பு மாற்றம் எந்தவொரு மொழியிலும் இயற்கையாக நிகழும். பெரும்பாலான மொழிகளில் எழுத்துவடிவம் சந்தியைப் பயன்படுத்துவதில்லை. ஆனால் தமிழ் மற்றும் சமக்கிருத மொழிகளில் எழுத்திலக்கணத்தில் சந்தி ஒரு விதிமுறையாக உள்ளது.

இரண்டு சொற்கள் இணையும் போது முதலில் உள்ள சொல் நிலைமொழி என்றும் வந்து இணையும் சொல்லை வருமொழி என்றும் கூறுவர். தொல்காப்பியத்தில் இவை நிலைமொழி- குறித்துவரு கிளவி என குறிப்பிடப்படுகின்றன. சொற்கள் புணரும்போதும் ஒரு எழுத்து தோன்றுதல் அல்லது சொல்லின் இறுதி எழுத்து வேறொரு எழுத்தாக மாறுதல் அல்லது ஒரு எழுத்து மறைதல் (கெடுதல்) போன்ற மாறுபாடுகள் தோன்றும். தமிழ்மொழியில் தோன்றும் இந்த மாறுபாடுகளை விகாரம் அல்லது திரிபு என வழங்குகிறோம். மாறுபாடுகள் தோன்றாமல் சொற்கள் புணரும் நிலையை இயல்புப் புணர்ச்சி என்கிறோம்.

இலக்கணத்தில் புணர்ச்சி என்பது சொற்கள் சேர்ந்துவருவதாகும். சொற்கள் தனிச்சொற்களாயிருக்கும்போது அவற்றை தனிமொழிகளென்றும், அவை சேர்ந்திருக்கும்போது அவற்றை தொடர்மொழிகளென்றுஞ்சொல்கிறோம். தொடர்மொழிகளில் இரண்டோ இரண்டுக்குமேற்பட்டசொற்களோ இருந்தாலும், அவற்றை ஒரு தனிச்சொல்லைப்போல ஒன்றாகத்தான்கொள்ளவேண்டுமேயன்றி, புணர்ந்துள்ளசொற்களை தனிச்சொற்களாக பிரித்தெழுதுதல் கூடாது.

அவ்வாறு பிரித்துவிட்டால், பிரிந்தசொற்கள் ஒவ்வொன்றும் தனிமொழிகளாகவேகொள்ளப்படுமேயன்றி, தொடர்மொழியென சொல்லப்படமாட்டா.

தொடர்மொழிகள் பேச்சுவழக்கில் உள்ளவையே. நாம் பேசும்போது சிலசொற்களை தனித்தும் சிலவற்றை சேர்த்தும்பேசுவதை இயல்பாய்ச்செய்வோம். ஒருவருடைய பேச்சை கேட்டுப்பார்த்தாலோ அல்லது இருவர் பேசிக்கொண்டிருக்கும்போது அவர்களதுபேச்சை கேட்டுக்கொண்டிருந்தாலோ அவற்றில் சொற்களுட்சில தனியாகப்பேசப்படுவதையும் சில சேர்த்துப்பேசப்படுவதையும் அறிந்துகொள்ளலாம்.

அவ்வாறு சொற்களை சேர்த்துப்பேசுவது எதற்காகவென்பதை ஆய்ந்துபார்த்தால், அது ஒருவர் சொல்லவரும் பொருளை சரியாகச்சொல்வதற்காகவே அவ்வாறு சேர்த்துச்சொல்கிறாரென்பதை அறிந்துகொள்ளலாம். அதாவது, சேர்த்துச்சொல்லவேண்டியசொற்களை சேர்த்துச்சொல்லாமல், அவற்றை தனிச்சொற்களாய்ச்சொல்லிவிட்டால்,சொல்லவந்த பொருள் வேறாகிவிடும்.

வேறாய்ச்சொல்வதானால், சொற்களை சேர்த்துச்சொல்லும்போது என்னபொருள்வருமோ அந்த பொருளானது, அவற்றை பிரித்துச்சொல்லும்போது வராது! ஆகையால், சேர்த்துச்சொல்லவேண்டும்போது சேர்த்துச்சொல்வதும், பிரித்துச்சொல்லும்போது பிரித்துச்சொல்வதும் தேவையானதாகும்.

நம்மைப்போலவே குழந்தைகளும் சிறுவர்களுங்கூட பேச்சில் இதை சரியாகச்செய்வரென்பதை அவர்களது பேச்சை கவனித்துப்பார்த்தால் எவரும் அறிந்துகொள்ளலாம். இது எதனால் இவ்வாறு நடக்கிறதென்றால், நம் மொழியை பேசத்தொடங்கும்போதே, அது சொல்லும் பொருள் என்னவென்பதை நாம் அறிந்துகொள்வதனாலேதான். ஒரு குழந்தை 'அத்தைவீடு' எனச்சொல்கிறதென்றால், அந்த குழந்தைக்கு அது 'அத்தையினுடையவீடு' என்னும் பொருள் புரிந்திருக்கிறதென்பது பொருள்.

இதை சொல்லும்போது, 'அத்தை வீடு' என இரண்டுசொற்களாக அந்த குழந்தை பிரித்துச்சொல்லாதென்பதை எண்ணிப்பாருங்கள். அதேகுழந்தை, 'அத்தை வீடுவரைந்தார்' எனச்சொல்வதானால், 'அத்தை 'வீடு' ஆகியசொற்களுக்கிடையில் இடம்விட்டுப்பேசும். இங்கே 'அத்தைவீடுவரைந்தார்' என்று சேர்த்துச்சொல்வது பொருந்தாதென்பதை அந்த குழந்தை அறியும். அதேநேரத்தில், 'வீடுவரைந்தார்' என்பதில், 'வீடு' 'வரைந்தார்' ஆகிய இவையிரண்டும் சேர்த்துச்சொல்லப்படுவதைப்பாருங்கள்.

'அத்தைவீடு' 'வீடுவரைந்தார்' ஆகியவற்றில் இரண்டுசொற்கள் சேர்த்துச்சொல்லப்பட்டதால், இவை தொடர்மொழிகள். 'வீடு' என்றசொல்லானது, முதலில் 'அத்தை' என்றசொல்லுடன்சேர்ந்தும் பிறகு 'வரைந்தார்' என்றசொல்லுடன்சேர்ந்து தொடர்மொழியானது. 'அத்தைவீடு' என்பதில் இது 'அத்தை' என்னும் சொல்லுக்கு பின்னால்வந்துசேர்ந்தது, 'வீடுவரைந்தார்' என்பதிலோ முன்னாலேநின்று, 'வரைந்தார்' என்னுஞ்சொல்லை தன்னையடுத்து சேர்த்துக்கொண்டது.

இவ்வாறு ஒரு தொடர்மொழியில் இரண்டுசொற்களிருக்குமானால், முதற்சொல்லை 'நிலைமொழி' என்றும், அடுத்தசொல்லை 'வருமொழி' என்றும் இலக்கணம் பெயர்வைத்தழைக்கிறது. இப்போது, 'அத்தை வீடுவரைந்துதந்தார்' என்பதைப்பாருங்கள். இதில், 'அத்தை' என்பது ஒரு தனிமொழி. 'வீடுவரைந்துதந்தார்' என்பது தொடர்மொழி. இந்தத்தொடர்மொழியில், மூன்றுசொற்களுள்ளன. இவற்றுள், முதற்சொல் நிலைமொழியென்பதும் இறுதிச்சொல் வருமொழியென்பதும் நாம் அறிந்ததே. அப்படியானால், நடுவிலிருக்குஞ்சொல்லை நாம் என்னவென்றழைப்பது?

'வரைந்து' என்னும் இந்த சொல்லானது, 'வீடு' என்றசொல்லுக்கு வருமொழியாகவும், 'தந்தார்' என்றசொல்லுக்கு நிலைமொழியாகவுமுள்ளது. இவ்வாறு, ஒரு நிலைமொழியையடுத்து எத்தனைச்சொல்வந்தாலும், இறுதிச்சொல்லுக்குமுன்னிருப்பவை தமது முன்னிற்குஞ்சொல்லுக்கு வருமொழியாகவும், பின்னிற்குஞ்சொல்லுக்கு நிலைமொழியாகவுமாகுமென்பது எண்ணிக்கொள்ளத்தக்கதாகும்.

இலக்கணநூல்கள் என்ன சொல்கின்றன?

இலக்கணநூல்களில் இருபத்தாறுவகையாகாகச்சொல்கின்றன. அதுமட்டுமன்றி, எவ்வகைச்சொற்கள் எவ்வகைச்சொற்களோடு புணருமென்பதையுஞ்சொல்கின்றன. இவற்றைக்கொண்டு சிலவகைச்சொற்கள் சிலவகைச்சொற்களோடு புணரமாட்டாவென்பதை நாம் கண்டுகொள்ளலாம். எடுத்துக்காட்டாக, வினையெச்சமும் வினைமுற்றும் புணரும். அவ்வாறு அவை புணர்ந்துவரும் தொடரானது, 'வினையெச்சத்தொடர்' எனப்படும். இந்த தொடரில் வினையெச்சத்துடன் வினைமுற்று புணருமென்பது சொல்லப்படும்போது, அதனுடன் ஒரு பெயர் புணராதென்பது சொல்லப்படவில்லை.

பெயர் புணராதென்பதை நாம் எவ்வாறறிந்துகொள்ளலாமென்றால், வினையெச்சமும் பெயரும் புணர்ந்ததாக சொல்லப்பட்டுள்ள இருபத்தாறுவகைகளுள் ஒரு தொடர் சொல்லப்படவில்லையென்பதிலிருந்தேயறிந்துகொள்ளலாம்.

இதேபோல், இரண்டாம்வேற்றுமையின்முன் வினைமட்டுமேபுணருமென்பதும் பெயர் புணராதென்பதும் அறிந்துகொள்ளத்தக்கதாகும்.

புணர்ச்சிப் பாங்குகள்

இயல்புப் புணர்ச்சி

    • முருகன் வந்தான்

விகாரப்புணர்ச்சி

  • திரிபு - தோன்றல்
    • பார்த்துப் படி
  • திரிபு - கெடுதல்
    • மர(ம்) வேர்
  • திரிபு - திரிதல்
    • பால் சோறு = பாற்சோறு (நிலைமொழியில் திரிபு)
    • கண் நன்று = கண்ணன்று (வருமொழியில் திரிபு)
    • கள் நன்று = கண்ணன்று (இருமொழியிலும் திரிபு
  • சாரியைப் புணர்ச்சி
    • ஆ பால் = ஆவின் பால் (இன்-சாரியை பெற்றது)

எடுத்துக்காட்டு

1. வாழை+பழம்= வாழைப்பழம்.
இங்கு ப் எனும் ஓர் எழுத்துப் புதிதாக வந்துள்ளதைக் காணலாம். இவ்வாறு வருவதைத் தோன்றல் / மிகல் என்று கூறுவர், இலக்கணத்தில்.
2. பால்+சோறு= பாற்சோறு.

இங்குப்புணர்ச்சியில் ல்>ற் ஆக மாறி உள்ளது. அதாவது, திரிந்துள்ளது. இதைத் திரிதல் என்பர்.

ஆனால், இன்று பால்சோறு என்றே எழுதுவதைக் காணலாம். ஆனால், பற்பொடி என்பதில் (பல்+பொடி=பற்பொடி) இந்தப் புணர்ச்சி நிகழ்ந்துள்ளது. மேலும், சொற்பெருக்கு, கற்குவியல், மற்போர், கற்போர் (கல்>கற்)போன்றவை இவ்வகைப் புணர்ச்சியே.

3. மனம்+விகாரம்= மனவிகாரம்.

இங்கு மனம் என்றசொல்லின் இறுதி எழுத்தான ம் விடுபட்டுள்ளது, புணர்ச்சியில். அதனைக் கெடல் என்பர் இலக்கணநூலார்.

இவ்வாறு இல்லாமல், அதாவது எந்த மாற்றமும் இல்லாமல் வருவதும் உண்டு.

4. பாடல்+ பாடினான்= பாடல் பாடினான்.

இங்கு எந்த ஓர் எழுத்தும் புதிதாக வரவில்லை. இச்சொற்கள் சேரும்போது-புணரும்போது- எந்தமாற்றமும் இல்லை. இயல்பாகவே உள்ளது. இதனை இயல்பு என்பர்.

அதாவது தோன்றல், திரிதல், கெடுதல் என்ற எந்தமாற்றமும் இல்லாமல் வருவதனை இயல்பு என்று கூறுவர்.

விதி

இனிப் புணர்ச்சிக்குரிய சிறப்புவிதிகளுள் ஒன்றைக் காண்போம்.

பாடல் பாடினான் என்பது சரி.ஆனால்,
பாடலை பாடினான் என்று எழுதுவதா? பாடலைப் பாடினான் என்று எழுதுவதா? எது சரி?
இவ்விடத்தில்தான் இலக்கணம் நமக்குக் கைகொடுக்கின்றது.
1. பாடலை+பாடினான் என்பது, பாடலைப்பாடினான் என்றே புணரும். பாடலை பாடினான் என்று எழுதுவது பிழை.

இருவழிகளில் இதனை நாம் உணரலாம். 1. ஒலித்துப்பார்ப்பது/உச்சரித்துப்பார்ப்பது. 2. இலக்கணவிதி அறிந்துகொள்வது.

ஆனால், பலரும் இவ்வாறு பிழையாகவே (பாடலை பாடினான் என) எழுதிவருவதைக் காணலாம். அதன்காரணம் புணர்ச்சி இலக்கணம் அறியாததுதான். இலக்கணத்தோடு எழுதவே பலரும் விரும்புகின்றனர்; ஆனால், அதை அறிந்துகொள்ள எளியவழி இன்னும் அனைவருக்கும் கிட்டவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அடுத்து ஏன் அவ்வாறு எழுதவேண்டும் காரணமென்ன? என்பதையும் தெளிவாக யாரும் விளக்குவதில்லை.

இலக்கணம் அறியாத நிலையில் சுருக்கமான வழி, அதனை ஒலித்துப் பார்ப்பதுதான். இயல்பாக ஒலித்துப் பார்ப்பதுதான். இயல்பாக என்பதைக் கவனத்திற்கொள்ளவும். பாடலைப்பாடினான், என்பதே இயல்பான ஒலிப்புமுறை. பாடலைபாடினான் என்று இப்பை விட்டுச் சொல்வதில்லை. தனியாக அதனைத் தவிர்த்து உச்சரித்துப் பார்த்தால் அது தெரியும்.

இனி இலக்கண விதியை அறிந்து எழுதுவது
விதி 1.
இரண்டாம் வேற்றுமை விரியில் (ஒற்று -புள்ளிவைத்தஎழுத்து, இங்கு -ப்-) ஒற்று மிகும் என்பது இலக்கணம்.

பாடலை என்பதில் வரும் இரண்டாம் வேற்றுமை உருபு ஆகும். எனவே பாடலை+பாடினான் என்ற புணர்ச்சியில் ஒற்று மிகுந்து பாடலைப்பாடினான் எனப் புணர்ந்தது.

விதி 2.
இரண்டாம் வேற்றுமைத்தொகையில் ஒற்றுமிகாது என்பது புணர்ச்சி விதி.
எடுத்துக்காட்டு:
பாடல் பாடினான்,
இங்குப் பாடல் பாடினான் என்பது பாடலைப்பாடினான் என்ற பொருளிலேயே வந்துள்ளது. இங்கு இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து்ள்ளது.
மறைந்துள்ளது என்பதனைத் தொகை என்று குறித்தனர் நம்முன்னோர்.

இந்தச் சிறப்பிலக்கணத்தை ஒருவர் தெரி்ந்து கொண்டால், அதாவது 1. இரண்டாம் வேற்றுமை விரியில் ஒற்றுமிகும். 2. இரண்டாம் வேற்றுமைத்தொகையில் மிகாது என்ற இலக்கணத்தைத் தெரிந்துகொண்டால், ஒருவர் எழுதும்போது பிழையின்றி எழுதமுடியும்.

இவ்வாறு பல இலக்கண விதிகள் உள்ளன. அவை எளிமையானவைதாம். சற்றுக்கூடுதல் முயற்சிதான் தேவை.

மேற்கோள்கள்

  1. "சந்தி இலக்கணம்". பார்க்கப்பட்ட நாள் 16 திசம்பர் 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புணர்ச்சி_(இலக்கணம்)&oldid=4101298" இலிருந்து மீள்விக்கப்பட்டது