சம்பாதி (வடமொழி:सम्पाति, sampāti) இந்து இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தில் இடம்பெறும் கழுகு வடிவிலான ஒரு பாத்திரம் ஆகும். இவன் கருடனின் தம்பியான அருணனின் மகன், ஜடாயுவின் அண்ணன்.

சீதையை தேடும் வேளையில் சம்பாதியை சந்தித்த அனுமன், ஜாம்பவான் மற்றும் அங்கதன்

சம்பாதியும் ஜடாயுவும், சிறு வயதில் தாம் பெற்ற அபார சக்தியை அநுபவித்துக் கொண்டு ஒரு நாள் ஆகாயத்தில் போட்டி போட்டுக் கொண்டு உயரக் கிளம்பினார்கள். சூரியனை நெருங்க நெருங்க வெப்பம் அதிகரித்து ஜடாயுவைக் கொளுத்தி விடும் போல் இருந்தது. சம்பாதி தன் சிறகுகளை விரித்து ஜடாயுவைக் காப்பற்றினான். ஆனால் சம்பாதியின் சிறகு எரிந்து போயிற்று. சம்பாதி பறக்க முடியாமல் கீழே மலை மேல் விழுந்தான். அன்றிலிருந்து அவன் பறக்க முடியாமல் துன்பப்பட்டுக் கொண்டிருந்தான்.

இராவணனால் கடத்தப்பட்ட சீதையைத் தேடிச் சென்ற வானரர் படைகள் சம்பாதியைக் கண்டு அவனது தம்பி ஜடாயு இராவணனால் கொல்லப்பட்டது பற்றிக் கூறுகின்றனர். கவலையடைந்த சம்பாதி, இலங்கையில் சீதை சிறையிருப்பதைத் தான் இங்கிருந்தே பார்ப்பதாகக் கூறித் தான் காணும் காட்சியையும் விவரமாகச் சொன்னான். "ராம காரியத்தில் நீ உதவுவாய். அப்படி உதவியபோது உன் சிறகுகள் மறுபடி முளைக்கும்" என்று முன்னர் அவன் பெற்ற வரம் அப்போது பலிக்கலாயிற்று. பேச்சு நடக்கும் போதே இளஞ்சிறகுகள் முளைக்க ஆரம்பித்தன. சம்பாதிக்கு ஏற்பட்ட துன்பமும் நீங்கியது. சிறகுகளைப் பெற்ற சம்பாதி, ஜடாயுவுக்குக் கடலில் கிரியைகள் செய்து திருப்தி அடைந்தான்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. சம்பாதிப் படலம்

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பாதி&oldid=3832496" இலிருந்து மீள்விக்கப்பட்டது