சாங்கிய யோகம்

சாங்கிய யோகம் கபிலர் (சாங்கியம்) எனும் முனிவர் வகுத்த யோகமே சாங்கிய யோகம் ஆகும். பண்டைய ஆறு வகையான இந்துத் தத்துவங்களில் சாங்கிய யோகம் சிறப்புமிக்கது. சாங்கிய யோகம், முக்குணங்கள், பஞ்ச பூதங்கள், மனம், மற்றும் பிரபஞ்சத்தின் படைப்பு, இருப்பு மற்றும் அழிவு குறித்து விரிவாக எடுத்துரைக்கிறது. பகவத் கீதையின் இரண்டாம் அத்தியாயத்திற்கு சாங்கிய யோகம் என்று பெயர் உள்ளது. சாங்கியம் என்பதற்கு ஞானம் (அறிவு) என்று பொருள்.

சாங்கிய யோகத்தின் சாரம்

தொகு
 • பிரம்மம் இரண்டற்றது. சத்தியமானது; மனமும், சொற்களும் அதனைச் சென்றடைய மாட்டாது. ஆனால் அதே பிரம்மம், மாயை, சீவன் (காண்பவன் – காணப்படுபவன்) என்று இரு கூறுகளாக பிரிந்தது. அவற்றின் ஒன்றின் பெயர், பிரகிருதி; அதுவே உலகத்தில் காரிய-காரண வடிவங்களை ஏற்று நடத்துகிறது. ஞான வடிவான மற்றொரு பொருள், புருஷன் (சீவன்).


 • பிரகிருதியிடமிருந்து சத்வம்-ரஜஸ்- தமஸ் என்ற முக்குணங்கள் தோண்றின. இந்த முக்குணங்களும் அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பதால், அவற்றில் கிரியா சக்தி அதிகமாக உள்ள சூத்ரமும், ஞானசக்தி அதிகமாக உள்ள மஹத்தும் உண்டாயின. மஹத் தத்துவம் மாற்றமடைந்து அகங்காரம் வெளிப்பட்டது. இந்த அகங்காரம்தான் சீவர்களை மாயையில் ( உடலை ஆன்மா எனும் மயக்கத்தில்) தள்ளுகிறது.


 • அகங்காரம் முக்குணங்கள் கொண்டது – சாத்வீகம், ராஜஸம், தாமசம். அதுவே ஐந்து தான்மாத்திரைகள், இந்திரியங்கள், மனம் ஆகியவற்றுக்கும் காரணமாகிறது. எனவே அது சடம், அறிவுவடிவம் என்ற இரு தன்மைகளும் உடையதாக உள்ளது. தாமச அகங்காரத்திலிருந்து தோண்றிய ஐந்து தன்மாத்திரைகளிலிருந்து ஐந்து மகாபூதங்களும், இராஜச அகங்காரத்திலிருந்து புலன்களும், சாத்விக அகங்காரத்திலிருந்து புலன்களின் பதினோறு அதிஷ்டான தேவதைகளும் உண்டாயின (ஐந்து கர்மேந்திரியம், ஐந்து ஞானேந்திரியம், மனம் - ஆக பதினொன்று)


 • பின்பு மஹத் தத்துவத்தில் பிரம்மம் நுழைந்ததால், அவைகள் ஒன்றோடொன்று சேர்ந்து அண்டத்தை படைக்கும் ஆற்றலைப் பெற்றது. அந்த அண்டத்தில் பகவான் நாராயணனாக தோண்றினார். நாராயணின் தொப்புள் கொடி தாமரையிலிருந்து பிரம்மா தோண்றினார்.


 • பிரம்மா நீண்டகாலம் தவமியற்றி பகவானின் அருளால், ரஜோ குணத்தால் பூலோகம், புவர்லோகம், சுவர்க்கலோகம் ஆகிய மூன்று லோகங்களையும், லோக பாலகர்களையும் படைத்து, சுவர்க்கலோகத்தில் தேவர்களும், புவர்லோகத்தில் (ஆகாயத்தில்) பூதப் – பிரேதாதிகளும், பூலோகத்தில் (மண்ணுலகம்) மனிதன் முதலான சீவராசிகளும் வசிக்கத் தொடங்கினர். இம்மூன்று லோகங்களுக்கு மேல் மகர்லோகம், ஜனலோகம், தபோலோகம் மூன்று லோகங்கள் உண்டாயின. அசுரர்களும், நாகர்களும் வசிப்பதற்கு, பூலோகத்திற்கு கீழ் அதலம் முதலிய ஏழு உலகங்களை படைத்தார்.


 • யோகம், தவம், சந்நியாசம் இவைகளை கடைப்பிடிக்கும் தூய்மை அடைந்த சித்தர்கள், மஹர்லோகம், ஜனலோகம், தபோலோகங்களை அடைகிறார்கள். பக்தியோகத்தை கடைப்பிடிப்பவர்கள் உறுதியாக பகவானை அடைகிறார்கள்.


 • இந்த அண்டங்களுக்கு உபாதான காரணம் பிரகிருதி; நிமித்த காரணம் பரமாத்மா. இதை வெளிப்படுத்துவது ’காலம்’ எனும் பகவானே. விவகார காலத்தில் பயன்படும் இம்மூன்றும் உண்மையில் பிரம்ம வடிவமே. அந்த சுத்தப் பிரம்மமான பகவானே.


 • பரமாத்மாவின் சங்கல்பம் உள்ள வரையில், உலகப்படைப்புகளும், பரிபாலனமும் தொடர்ந்து நடைபெறும்.


 • இந்த விராட்புருஷன்தான் உலகங்களை உண்டாக்குதல், நிர்வாகம் செய்தல், அழித்தல் (தன்னுள் லயப்படுத்தி கொள்வது) எனும் செயல்களுக்கு நிலைக்கலன். கால வடிவான பகவான், பிரளயத்தை நடத்த வேண்டும் என்ற சங்கல்பத்துடன் உலகங்களைத் தழுவிக் கொள்ளும் போது, அந்த பேரழிவில் இதுவும் மறைந்து போகிறது.


 • சீவராசிகளின் உடல் அன்னத்திலும்; அன்னம், விதையிலும்; விதை, பூமியிலும்; பூமி, கந்தத்திலும்; கந்தம், நீரிலும்; நீர், தன் குணமாக ரசத்திலும்; ரசம், தேஜஸ்ஸிலும்; தேஜஸ், உருவத்திலும் லயமடைகிறது. உருவம், வாயுவிலும்; வாயு, தொடுவுணர்விலும்; தொடுவுணர்வு ஆகாயத்திலும்; ஆகாயம், ஏழு தன்மாத்திரைகளிலும் லயமடைகிறது. இந்திரியங்கள் தங்கள் அதிஷ்டான தேவதைகளிடமும்; இறுதியில், ராஜஸ அகங்காரத்திலும் சேர்ந்து விடுகிறது.


 • ராஜஸ அகங்காரம், தன் தலைவனான, சாத்விக அகங்கார வடிவான மனதிலும்; சப்த தன்மாத்திரைகள், பஞ்சபூதங்களுக்குக் காரணமான தாமஸ அகங்காரத்திலும்; எல்லா உலகங்களையும் மயக்கும் வல்லமை படைத்த இம்மூவகை அகங்காரம், மஹத் தத்துவத்திலும் லயம் அடைகிறது.


 • ஞானம் மற்றும் கிரியாசக்தியை முக்கியமாக உடைய மகத் தத்துவம், தனக்கு காரணமான குணங்களில் ஒடுங்குகிறது; குணம், அவ்யக்த பிரகிருதியிலும்; பிரகிருதி, அழிவற்ற காலம் எனும் தத்துவத்திலும் ஒடுங்குகிறது.


 • விவேகத்துடன் இவ்வுலகை பார்ப்பவனுக்கு, உலகம் அழிவற்றது என்ற மயக்கம் ஏற்படாது.


 • ஈசுவரன் காரண – காரியங்களுக்கு சாட்சியாக மட்டும் இருப்பவன். படைப்பிலிருந்து பிரளயம் வரையிலும், பிரளயத்திலிருந்து படைப்பு வரையிலும் கூறப்பட்ட சாங்கியயோகத்தை அறிந்து கொள்வதால், மனிதனுடைய சந்தேகங்கள் வெட்டித் தள்ளப்படுகின்றது. ஈசுவரன் தன் வடிவத்தில் நிலையாக நிற்கிறான்.


ஆதார நூல்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாங்கிய_யோகம்&oldid=3913710" இலிருந்து மீள்விக்கப்பட்டது