ஜான் கால்வின்

(சான் கால்வின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜான் கால்வின் (பிரெஞ்சு மொழி: Jean Calvin, (இயற்பெயர்: ஷெஹான் கோவென் [Jehan Cauvin]) (பிறப்பு: சூலை 10, 1509; இறப்பு: மே 27, 1564) புரட்டஸ்தாந்து சீர்திருத்த இயக்க காலத்தைச் சார்ந்த பிரான்சிய கிறித்தவ மேய்ப்பரும், தலைசிறந்த இறையியல் வல்லுநரும் ஆவார்.

ஜான் கால்வின்
பார்சலோனா, எசுப்பானியா(1554)
பிறப்புஷெஹான் கோவென் (Jehan Cauvin)
(1509-07-10)10 சூலை 1509
நோயோன், பிக்கார்தி பிரதேசம், பிரான்சு இராச்சியம்
இறப்பு27 மே 1564(1564-05-27) (அகவை 54)
ஜெனீவா, சுவிட்சர்லாந்து
தொழில்மேய்ப்பர், எழுத்தாளர், இறையியலார்
வழமை அல்லது
இயக்கம்
கால்வினியம் (Calvinism)
குறிப்பிடத்தக்க ஆக்கங்கள்"கிறித்தவ சமயக் கோட்பாடுகள்" (The Institutes of the Christian Religion)
Signature

கிறித்தவ இறையியல் சார்ந்த "கால்வினியம்" (Calvinism) என்னும் அமைப்பு உருவாவதற்கு ஜான் கால்வின் முக்கிய காரணமாக அமைந்தார். கால்வின் மறுமலர்ச்சி மனித நேய இயக்கத்தின் (Renaissance Humanism) பின்புலத்தில் ஒரு வழக்குரைஞராகத் தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனால் அவர் 1536இல் கத்தோலிக்க திருச்சபையினின்று பிரிந்தார்.

பிரான்சு நாட்டில் புரட்டஸ்தாந்து சபையினருக்கு எதிர்ப்பு எழுந்தபோது கால்வின் சுவிட்சர்லாந்தின் பாசல் நகருக்குத் தப்பிச் சென்றார். அங்கு கால்வின் "கிறித்தவ சமயக் கோட்பாடுகள்" (The Institutes of the Christian Religion) என்னும் நூலை 1536ஆம் ஆண்டு வெளியிட்டார்.

ஜெனீவா நகரில் கிறித்தவ சபையைச் சீர்திருத்தி அமைக்க வில்லியம் ஃபாரெல் என்பவர் கால்வினைக் கேட்டுக்கொண்டார். அவர்களுடைய கருத்துகளை ஜெனீவா நகர மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே இருவரும் வெளியேற்றப்பட்டனர். அப்போது மார்ட்டின் பூசெர் என்பவர் கால்வினை ஸ்ட்ராஸ்புர்க் நகருக்கு வருமாறு அழைத்தார். அங்கு கால்வின் பிரஞ்சு அகதிகள் கூடிய ஒரு சபைக்கு மேய்ப்பர் ஆனார். ஜெனீவாவில் திருச்சபைச் சீர்திருத்தம் நிகழ கால்வின் ஆதரவு அளித்தார். இறுதியில், ஜெனீவா சபையை வழிநடத்தும்படி அழைப்புப் பெற்றார்.

ஜெனீவாவில் கால்வின்

தொகு

ஜெனீவாவுக்குத் திரும்பிச் சென்ற கால்வின் அங்கே திருச்சபை ஆளுகையிலும் வழிபாட்டிலும் புதிய முறைகளைக் கையாண்டார். அவருடைய அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஜெனீவா நகரக் குடும்பங்கள் பல இறங்கின. அச்சமயம் மிக்கேல் செர்வேத்துசு (Michael Servetus) என்னும் அறிஞர் கிறித்தவத்தின் மூவொரு கடவுள் கொள்கையை ஏற்க மறுத்தார் என்பதற்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அப்பின்னணியில் கால்வினின் சீர்திருத்தத்துக்கும் எதிர்ப்பு எழுந்தது.

பின்னர், ஜெனீவா நகர மன்றத்தில் புது உறுப்பினர் பதவி ஏற்றனர். மேலும் அதிக பிரஞ்சு அகதிகள் நகரில் குடியேறினார். கால்வினுக்கு அவர்களது ஆதரவு கிடைத்தது.

கால்வின் கிறித்தவ சீர்திருத்தத்தை ஜெனீவாவிலும் ஐரோப்பா முழுவதிலும் பரப்பும் செயலில் தமது இறுதிக்காலத்தைக் கழித்தார்.

கால்வினின் சீர்திருத்தம்

தொகு

கால்வின் கிறித்தவ சமயக் கொள்கைகளை விளக்கி உரைப்பதில் சிறந்தவராக விளங்கினார். அவரது கருத்துகள் பல சர்ச்சைகளையும் எழுப்பின. பிற சீர்திருத்தவாதிகளான பிலிப்பு மெலன்க்டன் (Philipp Melanchthon), ஹைன்ரிக் புல்லிங்கர் (Heinrich Bullinger) போன்றோரோடு கால்வின் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.

கால்வின் தமது சீர்திருத்த கருத்துகளை விளக்கி பல நூல்களை வெளியிட்டார். "கிறித்தவ சமயக் கோட்பாடுகள்" என்னும் நூல் தவிர, அவர் ஏறக்குறைய விவிலியம் முழுவதற்கும் விரிவுரை எழுதினார். மேலும் இறையியல் நூல்களை உருவாக்கினார். நம்பிக்கை அறிக்கைகளையும் படைத்தார்.

கால்வின் போதித்த முக்கிய கருத்துகளுள் ஒன்று "முன்குறிப்புக் கொள்கை" (predestination) என்று அழைக்கப்படுகிறது. உலகில் பிறக்கும் மனிதருள் யார்யார் மீட்புப் பெறுவர், யார்யார் அழிவுக்கு உள்ளாவர் என்பதைக் கடவுள் முன்கூட்டியே தீர்மானித்துள்ளார் என்பதே "முன்குறிப்புக் கொள்கை" ஆகும். கடவுள் எல்லாம் வல்லவர் என்பதிலிருந்து கால்வின் இக்கொள்கையை ஒரு முடிவாகப் பெற்றார். மேலும் தமது கொள்கை நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித அகுஸ்தீன் என்பவரின் படிப்பினையைப் பின்பற்றியது என்றும் கால்வின் விளக்கம் அளித்தார்.

கால்வினியத்தின் தோற்றுநர்

தொகு

கால்வினியம் என்னும் இறையியல் பிரிவுக்கு அடிப்படை வகுத்தவர் கால்வின் ஆவார். அவருடைய கொள்கையின் மேல் எழுந்த புரட்டஸ்தாந்து சபைகள் "சீர்திருத்தம் பெற்ற சபைகள்" (Reformed churches) என்று அழைக்கப்படுகின்றன. மேலும் பிரெஸ்பிட்டேரியன் (Presbyterianism) சபையும் கால்வினின் கொள்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

இச்சபைகள் இன்று உலகின் பல பகுதிகளில் வேரூன்றியுள்ளன.

 
இளமைப் பருவத்தில் கால்வின். கால்வின் முதலில் கிறித்தவ மத குருவாகப் பணிபுரிய எண்ணினார். ஆனால் தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு, சட்டவியலில் பயிற்சி பெற்றார். ஓவியம் காப்பிடம்: ஜெனீவா நூலகம்.
 
கால்வினுக்கு ஊக்கம் அளித்த சீர்திருத்தவாதி வில்லியம் ஃபாரெல்.
 
ஜெனீவாவில் கால்வின் போதித்த புனித பேதுரு பெருங்கோவில்.
 
கால்வின் எழுதிய முதன்மை நூல்: "கிறித்தவ சமயக் கோட்பாடுகள்".
 
கால்வினின் கையெழுத்து. கால்வின் சமயத் தலைவர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் பல மடல்கள் எழுதினார். இங்கே கால்வின் இங்கிலாந்து மன்னன் நான்காம் எட்வர்டுக்கு எழுதிய மடல்.

ஆதாரங்கள்

தொகு
 
ஜான் கால்வின் (John Calvin), நினைவுப் பதக்கம். ஆக்கியோன்: லாசுலோ சுலாவிக்சு (László Szlávics, Jr.). ஆண்டு: 2008

மேலும் அறிய

தொகு

Tamburello, Dennis E. (2007), Union with Christ: John Calvin and the Mysticism of St. Bernard, Louisville, Kentucky: Westminster John Knox Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-664-22054-1 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-664-22054-9

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_கால்வின்&oldid=3435028" இலிருந்து மீள்விக்கப்பட்டது