சித்தம் (யோகம்)
இந்திய சோதிடத்தில் சித்தம் என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் இருபத்தோராவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 266° 40' தொடக்கம் 280° 00' வரை "சித்தம்" யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் "சித்தம்" ஆகும். இந்த நேரத்தில் பிறக்கும் ஒருவர் "சித்தம்" யோகத்தைத் தனது பிறந்த யோகமாகக் கொண்டிருப்பார்.
சமசுக்கிருத மொழியில் சித்த (Siddha) என்பது நிறைவானது என்னும் பொருள் அமைந்தது. மங்கலமானது எனச் சோதிட நூல்கள் குறிப்பிடும் யோகங்களுள் இதுவும் ஒன்று. இதன் ஆட்சிக் கோள் கேது. ஆட்சித் தேவதை கார்த்திகேயன்.[1]