சிந்தனையாளர் (சிலை)

சிந்தனையாளர் (The Thinker) என்பது ஆகுஸ்ட் ரொடான் (1840–1917) என்னும் புகழ்மிக்க கலைஞரால் செப்பு மற்றும் பளிங்குக் கல் கொண்டு உருவாக்கப்பட்ட கலைப்படைப்பு ஆகும். முதன்முதலாக வார்க்கப்பட்ட "சிந்தனையாளர் சிலை" 1902ஆம் ஆண்டைச் சேர்ந்தது ஆகும். அது பாரிசு நகரில் "ரோடான் கலைக்கூடத்தில்" காக்கப்பட்டு வருகிறது.

"சிந்தனையாளர்"
(The Thinker)
The Thinker, Rodin.jpg
ஓவியர்ஆகுஸ்ட் ரொடான்
ஆண்டு1902
வகைசெப்பு மற்றும் பளிங்குக் கல்
உயரம் 2 மீ.; நீளம் 1.3 மீ.; அகலம் 1.4 மீ.
இடம்ரொடான் கலைக்கூடம், பாரிசு
"சிந்தனையாளர்"
(The Thinker)
Università di louisville, il pensatore di rodin 02.jpg
ஓவியர்ஆகுஸ்ட் ரொடான்
ஆண்டு1902–1904 (1902–1904)
வகைசெப்பு
இடம்லூயிவில், கெண்டக்கி மாநிலம், அமெரிக்கா

இச்சிலையின் மூலநிலைப் பிரதிகள் சுமார் 20 உள்ளன. அவை தவிர இச்சிலையின் தழுவல் சிலைகளும், ஆய்வுக்கான படைப்புகளும், ரோடானின் இறப்புக்குப் பிறகு உருவாக்கப்பட்ட சிலைகளும் பல உள்ளன.

இச்சிலையில் தோன்றும் மனிதன் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருக்கின்றான். அவனது உள்ளத்தில் ஏதோ பெரியதொரு குழப்பம் நிகழ்ந்துகொண்டிருப்பதுபோல் தெரிகிறது.[1]

மெய்யியல் சிந்தனையைக் குறிக்கின்ற அடையாளமாக "சிந்தனையாளர்" சிலையைப் பயன்படுத்துவது வழக்கம்.

வரலாற்றுத் தகவல்தொகு

இச்சிலைக்கு முதலில் கொடுக்கப்பட்ட பெயர் "கவிஞன்" (The Poet) என்பதாகும். அச்சிலை உருவான வரலாறு பின்வருமாறு:

பாரிசு நகரில் அமைந்துள்ள "அணிக் கலைகள் கூடம்" (Musée des Arts Décoratifs) என்னும் கலைக்கூடத்துக்கு ஒரு நுழைவாயில் கலையழகோடு உருவாக்கப்பட வேண்டும் என்று முடிவாயிற்று. அந்த வேலை ரோடானிடம் ஒப்படைக்கப்பட்டது. வரலாற்றுப் புகழ்பெற்ற இத்தாலியக் கவிஞரான தாந்தே அலிகியேரி என்பவர் இயற்றிய "திருவிளையாடல்" (Divine Comedy) என்னும் காப்பியத்தில் அமைந்த "நரக வாயில்கள்" (The Gates of Hell) என்னும் காட்சியைக் கருவாகக் கொண்டு ரோடான் வேலை தொடங்கினார்.

தாந்தேயின் காப்பியத்தில் வருகின்ற பல கதாபாத்திரங்களை ரோடான் உருவாக்க எண்ணினார். தாம் உருவாக்கிய காப்பியத்தைப் பற்றி ஆழ்ந்த சிந்தனையில் தாந்தே இருப்பதாக ரோடான் அச்சிலையை வடித்தார் என்று கருதப்படுகிறது.

ஆயினும், மேற்கூறிய விளக்கத்தில் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. ரோடான் உருவாக்கிய "சிந்தனையாளர்" நிர்வாணமாக உள்ளார். ஆனால் "திருவிளையாடல்" காப்பியத்தில் வரும் தாந்தே எப்போதுமே முழு உடை அணிந்தவராகவே வருகிறார். தாந்தே என்னும் குணச்சித்திரம் மென்மைப்பண்பு கொண்டவர். ஆனால் "சிந்தனையாளர்" உடல்திறன் மேம்பட்ட ஆண்மையோடு விளங்குகிறார்.[2]

சிலைத்தொகுப்பின் இறுதியில் ஒரு சிறு சிலை நுழைவாயிலின் மேல் பகுதியில் அமர்ந்துகொண்டு, கீழே நரகக் கொடுமையை அனுபவிப்போரின் கதியை எண்ணிச் சிந்தித்துக்கொண்டிருக்கிறது. அது ரோடானின் விருப்பப்படியே நிர்வாணமாகவே செதுக்கப்பட்டது. புகழ்பெற்ற கலைஞரான மைக்கலாஞ்சலோவின் கலைமரபைப் பின்பற்றி, மனித பகுத்தறிவையும் கவிதையையும் குறிக்கும் அடையாளமாக கதைத் தலைவன் பாணியில் அது அமைந்தது. அதுவே "சிந்தனையாளர் சிலை".

"நரக வாயிலில்" அமைந்த மேற்கூறிய சிலைக்கும் மைக்கலாஞ்சலோ என்னும் கலைஞர் லொரேன்சோ தே மேதிச்சி என்பவரின் சாயலாக உருவாக்கியதும் "சிந்தனை செய்வோன்" (இத்தாலியம்: Il Penseroso) என்று பெயர்பெற்றதுமான சிலைக்கும் இடையே இருந்த ஒற்றுமையைச் சிலை வார்ப்பு வேலை செய்தோர் கவனித்தனர். எனவே, அச்சிலை உருவாக்கத்தில் ஈடுபட்ட அத்தொழிலாளர்கள் அதற்கு "சிந்தனையாளர்" என்று பெயர்கொடுத்தனர்.[3]அப்பெயரே நிலைத்துவிட்டது.

சிலையின் பல பிரதிகள்தொகு

 
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் பிலடெல்பியா நகர் "ரோடன் கலைக்கூடத்தில்" காக்கப்படுகின்ற "சிந்தனையாளர்" சிலை

செப்பில் வார்க்கப்பட்ட பேரளவுகொண்ட "சிந்தனையாளர் சிலைகள்" 20 என்ற எண்ணிக்கையில் உலகெங்கும் உள்ள கலைக்கூடங்களில் காக்கப்பட்டு வருகின்றன. அவை தவிர, பேரளவு கொண்டவையும், ஆய்வுக்காக ஆக்கப்பட்டவையுமாக அமைந்த "சிந்தனையாளர் சிலைகள்" பல உள்ளன. இவற்றுள் சில வெவ்வேறு அளவைகளில் ஆக்கப்பட்டுள்ளன. சில சுண்ணக்கலவையால் செய்யப்பட்டுள்ளன. வேறு சில "சிந்தனையாளர் சிலைகள்" சிற்பி ரொடானின் மரணத்துக்குப் பின் உருவாக்கப்பட்டவை. அவை அசல் சிலைகளாக அன்றி, மாதிரி சிலைகளாகவே கருதப்படுகின்றன.

ரொடான் 1880இல் முதல் மாதிரியைச் சுண்ணக்கலவையால் சிறு அளவையில் செதுக்கினார். அதன் உயரம் 71.5 செ.மீ. அச்சிலை 1888இல் டென்மார்க் நாட்டின் கோப்பன்ஹேகன் நகரில் பார்வைக்கு வைக்கப்பட்டது.

அதன்பின் ரொடான் செப்பு உலோகத்தில் பேரளவை கொண்டு சிந்தனையாளர் சிலையை 1902இல் உருவாக்கினார். அது 2 மீ. உயரம், 1.3 மீ. நீளம், 1.4 மீ. அகலம் என்னும் அளவையில் ஆக்கப்பட்டது. அச்சிலை 1904இல் தான் பொதுமக்களின் பார்வைக்குக் கொணரப்பட்டது.

செப்பால் ஆக்கப்பட்ட சிந்தனையாளர் சிலையைக் கண்டு வியந்த ரொடான் ஆதரவாளர்கள் நன்கொடை திரட்டி, அச்சிலையைப் பாரிசு நகர உடைமையாக ஆக்கிட வழிசெய்தனர். இவ்வாறு அச்சிலை 1906இல் பாரிசு நகரில் அமைந்ததும், இன்று பிரான்சு நாட்டின் தலைசிறந்த குடிமக்களின் நினைவகமாகவும் விளங்குகின்ற "பாந்தியோன்" (Panthéon) என்னும் நினைவுமண்டபத்தின் முன் வைக்கப்பட்டது.

1922ஆம் ஆண்டில் சிந்தனையாளர் சிலை வேறொரு கட்டடத்திற்கு மாற்றப்பட்டு, அக்கட்டடம் "ரொடான் கலைக்கூடம்" (Musée Rodin) என்னும் பெயர் பெற்றது.

ரொடான் உயிரோடிருந்தபோதே 20க்கும் மேலான சிந்தனையாளர் செப்பு வார்ப்புச் சிலைகள் செய்யப்பட்டு உலகத்தின் பல பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அவற்றுள் சில மூலச் சிலையின் அளவைவிட சிறிதாகவோ பெரிதாகவோ வார்க்கப்பட்டன.

2011ஆம் ஆண்டு, சிந்தனையாளர் சிலையின் ஒரு வார்ப்பு மாதிரி சிக்காகோ பல்கலைக்கழகத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது. அது இப்போது ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உள்ளது.[4]

மெழுகு வார்ப்புரு முறையைப் பின்பற்றி உருவாக்கப்பட்ட சிந்தனையாளர் சிலை பாரிசு நகரில் வார்க்கப்பட்டு, 1904இல் உலகக் கண்காட்சியின்போது செயின்ட் லூயிஸ் நகரில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின் அந்நகருக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது. அச்சிலை இன்று அமெரிக்காவின் கெண்டக்கி மாநிலத்தில் லூயிவில் நகரில் வைக்கப்பட்டுள்ளது.[5]

மேலும் காண்கதொகு

குறிப்புகள்தொகு

  1. Statues — The Thinker
  2. Elsen, Albert L., ‘’Rodin’s Gates of Hell’’, University of Minnesota Press, Minneapolis MN, 1960 p. 96
  3. Elsen, Albert L., ‘’Rodin’s Gates of Hell’’, University of Minnesota Press, Minneapolis MN, 1960 p. 77
  4. "The Thinker, one of the most famous works of art in the world, comes home to Stanford's Cantor Arts Center". Stanford University. 2012. 26 January 2012 அன்று பார்க்கப்பட்டது.
  5. "U of L Belknap Campus Tour, page 2". University of Louisvile. 2000. 15 November 2010 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Le Penseur
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்தனையாளர்_(சிலை)&oldid=3650392" இருந்து மீள்விக்கப்பட்டது