சிறிமா–சாத்திரி ஒப்பந்தம்

சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் என்பது, இலங்கையில் நாடற்றவர்களாக இருந்த 975,000 இந்திய வம்சாவளித் தமிழர்களின் எதிர் காலம் தொடர்பாக, அப்போதைய இலங்கைப் பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்கும், இந்தியப் பிரதமரான லால் பகதூர் சாஸ்திரிக்கும் இடையில் 1964 ஆம் ஆண்டில் அக்டோபர் 30 இல் கையெழுத்தான ஒப்பந்தத்தைக் குறிக்கும். இந்த ஒப்பந்தத்தின்படி மேற் குறிப்பிட்டவர்களில் 525,000 பேரை இந்தியா ஏற்றுக்கொள்வதெனவும், 300,000 பேருக்கு இலங்கைக் குடியுரிமை வழங்குவதெனவும் முடிவானது. மீதி 150,000 பேர் விடுபட்டுப் போயினர். 1967 முதல் அமலாகத் தொடங்கிய இந்த ஒப்பந்தம் அம்மக்களை இந்தியக் குடியுரிமை பெறுவோர், இலங்கை குடியுரிமை பெறுவோர், நாடற்றவர்கள் என மூன்று கூறாகபிரித்தது.[1]

Agreement on Persons of Indian Origin in Ceylon, 1964

வரலாற்றுப் பின்னணி

தொகு

பிரித்தானிய இலங்கை

தொகு

இலங்கையைப் பிரித்தானியர் ஆண்ட காலத்தில், 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் 1820 ஆம் ஆண்டுக்கும் 1840 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில், இலட்சக்கணக்கான இந்தியத் தமிழர் தமிழ் நாட்டிலிருந்து ஒப்பந்தத் தொழிலாளர்களாக இலங்கைக்குக் கூட்டிவரப்பட்டு இலங்கையின் மலையகப் பகுதிகளில் தொடங்கப்பட்ட கோப்பி, தேயிலை, இறப்பர்த் தோட்டங்களில் பணி புரிவதற்காக அமர்த்தப்பட்டனர். கடுமையான சூழ்நிலைகளில் வேலை வாங்கப்பட்ட இவர்களில் உழைப்பினால் உருவான பெருந்தோட்டங்கள் இலங்கையின் வெளிநாட்டு வருமானத்தின் பெரும்பகுதியை ஈட்டிக்கொடுத்தன. ஆனால் அவர்களின் சமூக பொருளாதார சூழ்நிலை கேள்விக்குறியாகவே இருந்தது .டொனமூர் அரசியலமைப்பு தோட்டத்தொழிலாளர்கள் வாக்குரிமை பெறுவதற்கு வழிவகுத்தது . ஆனால் தகுதிபெற்ற மூன்று லட்சம் தொழிலாளர்களில் 1,00,574 பேர் மட்டுமே வாக்குரிமை பெற்றனர். 1931 இலங்கை அரசாங்க சபைத் தேர்தலில் பங்கெடுத்த இவர்களிடையே இடதுசாரி கட்சிகளின் செல்வாக்கை மட்டுப்படுத்தவும், பிரதிநிதி களைக் குறைக்கவும் இவர்களது வாக்குரிமையை பறிக்கும் முயற்சியாக இது பார்க்கப்பட்டது .[1]

இலங்கை

தொகு

பிரித்தானியர் இலங்கையை விட்டு வெளியேறிய போது, சிங்களத்தேசிய வாதிகள், மலையகத் தமிழர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இவர்களது நெருக்குதல்களினால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் 1948 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி இலங்கைக் குடியுரிமைச் சட்டம் இல. 18 நிறைவேற்றப்பட்டது. இச் சட்டத்தின் படி 1948 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் திகதிக்கு முன் இலங்கையில் பிறந்திருப்பதுடன் அவருடைய இரண்டு தலைமுறையினரும் இலங்கையில் பிறந்திருந்தால் மட்டுமே இலங்கைக் குடியுரிமைக்கு ஒருவர் உரித்துடையவர் என்று வரையறுக்கப்பட்டது. இது மலையகத் தமிழ் மக்களுக்குப் பாதகமாக அமைந்தது. இவர்களில் பலர் தமக்கு முன் இரண்டு தலைமுறையினர் இலங்கையில் பிறந்திருந்தாலும் கூட அதை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் அவர்களிடம் இருக்கவில்லை. இதன் காரணமாகச் சுமார் 7 இலட்சம் மலையகத் தமிழர் நாடற்றவர் என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டதுடன், 1949 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்கள் திருத்தச் சட்டம் இல. 48 இன் மூலம் அவர்களது வாக்குரிமையும் பறிக்கப்பட்டது.

நாடற்றவர்கள் பிரச்சினை தொடர்பாக 1949 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட இந்திய, பாகிஸ்தானியர் குடியுரிமைச் சட்டமும், 1954 ஆம் ஆண்டில் கையெழுத்தான நேரு - கொத்தலாவலை ஒப்பந்தமும் இப் பிரச்சினையைத் தீர்ப்பதில் அதிகம் பயன்படவில்லை. இலங்கைக் குடியுரிமைக்குத் தகுதியற்றவர்கள் எல்லோரையும் இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்னும் இலங்கையின் நிலைப்பாட்டை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியக் குடியுரிமை கோருபவர்களை மட்டுமே ஏற்றுக்கொள்ள இந்தியா சம்மதித்தது. நாடற்றவர்களில் பெரும்பாலானோர் இலங்கையிலேயே வாழ விரும்பியதால் இப் பிரச்சினை தீராமலேயே இருந்தது. இந்தப் பின்னணியிலேயே சிறீமா - சாஸ்திரி ஒப்பந்தம் ஏற்பட்டது.

இந்தியாவில் நிலவிய சூழல்

தொகு

இலங்கையில் இருந்து யாரையும் கட்டாயப்படுத்தி இந்தியாவுக்கு திருப்பியனுப்பக்கூடாது என்கிற நிலைப்பாடு கொண்டிருந்த நேரு 1964ல் காலமானதையடுத்து இந்தியப் பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி பொறுப்பேற்றார். சீனாவுடனான எல்லைப்போருக்குப் பிறகு, அண்டை நாடுகளை தனக்குச் சாதகமாக திரட்டிக் கொள்ளும் தேவையும் இந்தியாவுக்கு ஏற்பட்டிருந்தது.

ஒப்பந்தம் குறித்த கருத்துக்கள்

தொகு

இலங்கையும், இந்தியாவும் தமது முன்னைய நிலைப்பாடுகளை ஓரளவுக்கு விட்டுக்கொடுத்து ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தது சிறீமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் ராஜதந்திர வெற்றியாகச் சிலரால் கருதப்பட்டது. ஆனாலும், தமிழர் தரப்பினர் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியக் குழுவில் சென்னையிலிருந்து முதல்வரது பிரதிநிதியாக பங்கெடுத்த ஒரே தமிழரான வி.ராமையா எவ்வித கருத்துகளையும் முன்வைக்கவில்லை.[1] 1964 ஆம் ஆண்டில் இது குறித்துப் பேசிய இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம், இதை அதிகார அரசியலுக்காக அரை மில்லியன் மக்களைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்திக் கொண்டது பன்னாட்டு அரசியலில் முன்னெப்பொழுதும் இல்லாத நடவடிக்கை என விபரித்தார்.

ஒப்பந்த அம்சங்கள்

தொகு
  1. இலங்கைக் குடியினராகவோ இந்தியக் குடியினராகவோ ஏற்றுக்கொள்ளப்படாமல் இலங்கையில் உள்ள அனைவரும் இலங்கையின் அல்லது இந்தியாவின் குடிமக்கள் ஆகவேண்டும் என்பதே இவ்வொப்பந்தத்தின் வெளிப்படுத்தப்பட்ட நோக்கம்.
  2. இவ்வாறானவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலையில் 975,000 ஆகும். இது, சட்டவிரோதமாகக் குடியேறியவர்களையும், இந்தியக் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களையும் உள்ளடக்கவில்லை.
  3. இவர்களில் 300,000 பேருக்கு அவர்களுடைய இயற்கையான அதிகரிப்பையும் சேர்த்து, இலங்கை அரசாங்கத்தால் இலங்கைக் குடியுரிமை வழங்கப்படும்; 525,000 பேரையும், அவர்களுடைய இயற்கையான அதிகரிப்பையும் சேர்த்து, இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவதை இந்திய அரசு ஏற்றுக்கொள்ளும். இந்திய அரசு இவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும்.
  4. மீதமாக உள்ள 150,000 பேர் தொடர்பாக இரு அரசாங்கங்களாலும் இன்னொரு ஒப்பந்தம் செய்யவேண்டும்.
  5. திருப்பி அனுப்பப்பட உள்ளவர்கள், 15 ஆண்டு காலத்துள், கூடிய வரையில் சமநிலை ஒழுங்குக்கு உட்பட்ட வகையில் அனுப்பப்படுவதை இந்திய அரசு ஏற்கும்.

ஒப்பந்த நிறைவேற்றம்

தொகு

இந்த ஒப்பந்தம் மற்றும் இதன் பின்னர் 1974 இல் நிறைவேற்றப்பட்ட சிறீமா - காந்தி ஒப்பந்தங்களின் அடிப்படையில் 506,000 பேர் இந்தியக் குடியுரிமைக்கும், 470,000 பேர் இலங்கைக் குடியுரிமைக்கும் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதில் மிகுந்த தாமதம் நிலவியது. ஆனாலும், 1982 இல், 86,000 விண்ணப்பங்கள் இந்திய உயர்தானிகரகத்தில் முடிவு எதுவும் இன்றியும், இந்தியக் கடவுச் சீட்டு வழங்கியோரில் 90,000 பேர் இன்னும் இலங்கையில் தங்கியிருந்த நிலையிலும், நிறைவேற்றுக்காலம் கழிந்துவிட்டதால், இவ்வொப்பந்தங்கள் இனிச் செல்லுபடியாகாது என இந்தியா அறிவித்தது. 1984 இல் இலங்கையில் இன முரண்பாடுகள் உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில், தலைமன்னார்இராமேஸ்வரம் படகுச் சேவையும் நிறுத்தப்பட திருப்பியனுப்பும் நடவடிக்கைகள் முற்றாகவே நிறுத்தப்பட்டன. தமிழ்நாட்டுக்கு வந்த அவர்களுக்கு தினப்படி 39 காசு. விருப்பப்படி வெளியூருக்கு வேலைக்குப் போக முடியாது. தினம் காலை, மாலை ஆஜர்பட்டியல் எடுக்கிறார்கள்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 ஆதவன் தீட்சண்யா (30 அக்டோபர் 2014). "நரியூரிலிருந்து புலியூருக்கு... ஸ்ரீமாவோ - சாஸ்திரி ஒப்பந்தத்தின் 50வது ஆண்டு". தீக்கதிர் தமிழ் நாளிதழ். பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "ஏனென்றால் அவர்கள் தலித் தொழிலாளர்கள்!". ஆர்.கிருஷ்ணன். தீக்கதிர் தமிழ் நாளிதழ். 23 சூலை 2014. Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 23 சூலை 2014.

இவற்றையும் பார்க்கவும்

தொகு