சிலுவையின் புனித யோவானின் கிறித்து (ஓவியம்)
சிலுவையின் புனித யோவானின் கிறிஸ்து (Christ of Saint John of the Cross) என்பது எசுப்பானியக் கலைஞரான சால்வதோர் தாலீ (1904–1989) என்பவர் 1951இல் உருவாக்கிய புகழ்மிக்க ஓவியம் ஆகும்.
சிலுவையின் புனித யோவானின் கிறிஸ்து | |
---|---|
ஓவியர் | சால்வதோர் தாலீ |
ஆண்டு | 1951 |
வகை | துணிப்பரப்பகத்தின் மேல் எண்ணெய் ஓவியம் |
இடம் | கெல்வின்க்ரோவ் கலைக்கூடம், கிளாசுகோ, இசுக்காத்துலாந்து |
தனிப் பண்புடைய ஓவியத்தின் பின்னணி
தொகுஇந்த ஓவியம் சிலுவையில் தொங்கும் இயேசு கிறிஸ்துவை ஒரு தனிப் பார்வையில் சித்தரிக்கிறது. இயேசு தொங்குகின்ற சிலுவை மேலே உயர்த்தப்பட்டுள்ளது. அதன் கீழே ஒரு நீர்த்தேக்கம், அதில் மீனவர்களோடு கூடிய ஒரு படகு, மேலே இருண்ட வானம்.
இயேசு சிலுவையில் தொங்குவதைத் தாம் ஒரு கனவில் கண்டதாக தாலீ கூறியுள்ளார். அக்கனவில் அவர் கண்ட இயேசு முழுமையாகத் தமது மனிதத் தன்மையோடு தோன்றியதால், தாலீ இயேசுவின் உடலைச் சிலுவையில் அறைந்துவைக்க ஆணிகள் உள்ளதாகத் தம் சித்திரத்தில் காட்டவில்லை. இயேசு இரத்தம் சிந்துவதாகவோ, அவருடைய தலையில் முள்முடி உள்ளதாகவோ சித்தரிக்கவில்லை.
மேலும், இயேசுவும் அவர் தொங்குகின்ற சிலுவையும் நேரே செங்குத்தாக இல்லாமல் கீழே சாய்ந்து விழுவதுபோன்று மிகைப்படுத்திய ஒரு கோணத்தில் காட்டப்படுவதும் தாலீ கனவில் கண்டதாகக் கூறுகிறார்.
ஓவியத்தின் பெயர்த் தோற்றம்
தொகு16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கார்மேல் சபைத் துறவியான சிலுவையின் புனித யோவான் என்னும் புனிதர், இயேசு சிலுவையில் தொங்குவதை ஒரு வரைபடமாக ஆக்கினார். அதில் இயேசுவின் உடல் சிலுவையோடு ஒட்டியிராமல் தனியே பிரிந்து நிற்பதுபோலக் காட்டப்பட்டது. இதுவே தாலீயின் ஓவியத்துக்கு ஒரு தூண்டுதலாயிற்று.
தாலீ வரைந்த ஓவியத்தில் ஒரு முக்கோணமும் ஒரு வட்டமும் தெளிவாகத் தெரிகின்றன. இயேசுவின் விரிந்த இரு கைகளும் வீழ்கின்ற தலையும் மூன்று கோணங்களைக் காட்டுகின்றன. இயேசுவின் தலை ஒரு வட்டமாக உள்ளது. மூன்று கோணங்கள் கடவுள் மூவொரு இறைவனாக உள்ளார் என்பதை அடையாள முறையில் குறிப்பதாகவும், வட்ட வடிவில் உள்ள இயேசுவின் தலை, பிளேட்டோ குறிப்பிடுகின்ற முழுமையின் அடையாளமான வட்டம் என்னும் வடிவமாக இருக்கக்கூடும் எனவும் ஒரு விளக்கம் உள்ளது.[1]
தாலீ ஓவியமும் அவர் கண்ட கனவும்
தொகுஇந்த ஓவியத்தை உருவாக்குவதற்குத் தூண்டுதலாக அமைந்தவற்றைக் குறிப்பிட்டபோது தாலீ பின்வருமாறு கூறினார்:
"1950இல் நான் ஒரு கனவு கண்டேன். அது ஒரு பிரபஞ்சக் கனவு. அதில் நான் இயேசு சிலுவையில் தொங்குகின்ற காட்சியை நிறங்களில் கண்டேன். அது எனது கனவில் அணுவின் கருவாகத் தோன்றியது. அக்கரு பின்னர் மீஇயற்பு விரிவில் பரந்தது. அதை நான் பரந்து விரிந்த இப்பிரபஞ்சத்தின் ஒன்றிப்பாகக் கண்டேன். அதுவே அகண்ட கிறிஸ்துவாக உருப்பெற்றது"[2]
கிறிஸ்து தொங்கும் வீழ்கோணம்
தொகுதாலீ உருவாக்கிய கிறிஸ்து சிலுவையிலிருந்து கீழே விழுவதுபோன்று தொங்குகிறார். தாம் கண்ட கனவுக்காட்சி அதுவே என்று தாலீ கருதியதால் அந்த வீழ்கோணத்தைச் சரியாகக் கற்பனை செய்வதற்காக ஹாலிவுட் வீரசாகச நடிகர் ரசல் சோண்டர்சு (Russell Saunders) என்பவரின் உதவியை நாடினார். தலைக்குமேல் உயர்த்தி எழுப்பப்பட்ட உத்தரத்தில் மேலிருந்து கீழ்நோக்கி அந்த நடிகர் தொங்கவிடப்பட்டார். அவ்வாறு தொங்கிய மனித உருவத்தைப் பொருத்தமான கோணத்திலிருந்து நோக்கிய தாலீ அந்தக் கோணத்திலேயே இயேசு சிலுவையில் தொங்குவதாக ஓவியத்தில் காட்டுகிறார்.[3]
ஓவியத்தின் பின் வரலாறு
தொகுதாலீ வரைந்த கிறிஸ்து ஓவியத்தையும் அதற்கான உடைமை உரிமையையும் கிளாசுகோ நகரக் கலைகூடத்தின் இயக்குநர் டாம் ஹனிமேன் (Tom Honeyman) என்பவர் 1950களில் வாங்கினார். அதற்கு அவர் கொடுத்த விலை 8,200 பவுண்டுகள் ஆகும். பட்டியலில் குறிக்கப்பட்ட விலையாகிய 12,000 பவுண்டை விடவும் அவர் கொடுத்த விலை குறைவாக இருந்த போதிலும், அது அதிகமாகவே கருதப்பட்டது. ஆனால், உடைமை உரிமையும் கூடவே வாங்கப்பட்டதால், பின்வந்த ஆண்டுகளில் கிளாசுகோ கலைக்கூடம் செலவழித்த பணத்தைவிட பன்மடங்கு பணத்தை இலாபமாக ஈட்டியது.[4]
தாலீயின் ஓவியம் விலைக்கு வாங்கப்பட்டது சர்ச்சைக்கு உள்ளாகியது. கிளாசுகோ நகர் கலைப் பள்ளியைச் சார்ந்த மாணவர்கள், அந்த ஓவியத்தை வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தைத் தமது பகுதியைச் சார்ந்த கலைஞர்களின் படைப்புகளைக் காட்சிப்படுத்தப் பயன்படுத்துவதே முறை என்று கூறி புகார் கொடுத்தார்கள்.[5]
இதனால் எழுந்த சர்ச்சை தொடர்பாக ஹனிமேனும் தாலீயும் கடிதத் தொடர்புகொண்டு நண்பர்கள் ஆனார்கள். அக்கடிதத்தொடர்பு ஓவியச் சர்ச்சைக்குப் பிறகு பல ஆண்டுகளாக நீடித்தது.[3]
கிளாசுகோ நகரில் கெல்வின்க்ரோவ் கலைக்கூடத்தில் தாலீயின் கிறிஸ்து ஓவியம் 1952, சூன் 23ஆம் நாள் முதன்முறையாகக் காட்சிப்படுத்தப்பட்டது.
1961இல் ஓவியத்தைப் பார்வையிடச் சென்ற ஒருவர் அதைக் கல்லால் தாக்கி, ஓவியம் வரையப்பட்டிருந்த துணிப்பரப்பைக் கையால் கிழித்துவிட்டார். கலைக்கூடக் கைவினைஞர்கள் அந்த ஓவியத்துக்கு ஏற்பட்ட சேதத்தை மிகக் கவனமாகச் சரிசெய்தனர். பல மாதங்களுக்குப் பிறகு தாலீயின் கிறிஸ்து ஓவியம் மீண்டும் பார்வைக்கு வைக்கப்பட்டது.[6] I
1993இல் தாலீயின் கிறிஸ்து ஓவியம் "புனித மங்கோ சமய வாழ்வு மற்றும் கலை சார்ந்த காட்சியகம்" (St Mungo Museum of Religious Life and Art) என்னும் கலைகூடத்துக்குச் சென்றது. 2006, சூலை மாதம் கெல்வின்க்ரோவ் கலைக்கூடம் மீண்டும் திறக்கப்பட்டபோது தாலீயின் கிறிஸ்து ஓவியம் திரும்பி வந்தது.
இசுக்காத்துலாந்தின் மிகப்புகழ்பெற்ற ஓவியம் தாலீயின் கிறிஸ்து ஓவியமே என்று 2006இல் 29% பேர் தீர்ப்பளித்தனர்.[7]
ஓவியம் பற்றிய விமரிசனங்கள்
தொகுசால்வதோர் தாலீ வரைந்த "சிலுவையின் புனித யோவானின் கிறிஸ்து" என்னும் ஓவியம், கிறிஸ்துவைச் சிலுவையில் சித்தரிக்கின்ற மரபு ஓவியங்களிலிருந்து மாறுபட்டது என்பதால் அதுபற்றிப் பல விமரிசனங்கள் எழுந்தன. தாலீ ஏற்கெனவே அடிமன வெளிப்பாட்டியம் (Surrealism) என்னும் கலைப்பாணியில் நீங்கா நினைவு போன்ற பல ஓவியங்களை உருவாக்கியிருந்ததால், அவர் சமயம் தொடர்பான ஒரு படைப்பை உருவாக்கியது அதிர்ச்சியாக இருந்ததாக சில கலை விமர்சகர்கள் கூறினர்.[4]
2009இல், "கார்டியன்" (The Guardian) என்னும் இலண்டன் நகர நாளிதன் கலை விமர்சகரான ஜானத்தன் ஜோன்சு (Jonathan Jones) என்பவர் தாலீயின் கிறிஸ்து ஓவியம் "கீழ்த்தரமான, கலையழகற்ற" படைப்பு என்றார். ஆயினும், "நல்லதாயினும் தீயதாயினும், அந்த ஓவியம் கிறிஸ்து சிலுவையில் தொங்கும் காட்சியாக 20ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஓவியங்களுள் நீடித்த புகழ்கொண்டதாக உள்ளது" என்று கூறினார்."[8]
ஓவியத்தை விலைக்கு வாங்க எசுப்பானிய முயற்சி
தொகுஎசுப்பானியக் கலைஞராகிய சால்வதோர் தாலீயின் தலைசிறந்த படைப்பாகிய கிறிஸ்து ஓவியம் மீண்டும் எசுப்பானிய நாட்டுக்குத் திரும்புவதே முறை என்று எண்ணிய எசுப்பானிய அரசு அந்த ஓவியத்தை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டது.
127 மில்லியன் டாலர் கொடுத்து ஓவியத்தை விலைக்குக் கேட்டது எசுப்பானிய அரசு. ஆனால் எசுக்காத்துலாந்து நாட்டுக் கலைக்கூடம் அதை விற்க முடியாது என்று கூறிவிட்டது.[9]
ஆதாரங்கள்
தொகு- ↑ Gaultier, Alyse. The Little Book of Dali. Paris: Flammarion, 2004.
- ↑ Descharnes, Robert. Dali. New York: Harry N. Abrams, Inc., 2003.
- ↑ 3.0 3.1 Davies, Gill Davies (23 June 2011). "Scotland's favourite painting: Dali's Christ of St John of the Cross". BBC Scotland.
- ↑ 4.0 4.1 "Salvador Dali's 'Christ of St John of the Cross' Scotland's Favorite". Art Knowledge News. Archived from the original on 1 டிசம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 6 April 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Controversy". Glasgow Museums. Archived from the original on 20 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 6 April 2012.
- ↑ Polly Smith, Senior Conservator (8 Jul 2011). "How to Restore a Salvador Dali Masterpiece". Glasgow Museums. பார்க்கப்பட்ட நாள் 6 April 2012.
- ↑ "Salvador Dali's 'Christ of St John of the Cross' Wins Herald Poll" பரணிடப்பட்டது 2006-04-21 at the வந்தவழி இயந்திரம், GlasgowMuseums.com, August 30, 2005.
- ↑ Jones, Jonathan (27 January 2009). "Kitsch and lurid but also a glimpse of a strange soul". The Guardian. http://www.guardian.co.uk/artanddesign/2009/jan/27/salvador-dali-art-design-scotland1.
- ↑ Ross, Peter (July 2, 2006). Palace of dreams — That's how Kelvingrove was described …. The Herald (Glasgow). http://findarticles.com/p/articles/mi_qn4156/is_20060702/ai_n16532511. பார்த்த நாள்: நவம்பர் 11, 2012