சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்

தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு முருகன் கோயில்

சிவன்மலை சுப்பிரமணியர் கோயில், தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், காங்கேயத்துக்கு அருகிலுள்ள சிவன்மலையில் அமைந்துள்ள அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற பெருமை கொண்ட முருகன் கோயில் ஆகும்.

அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், சிவன்மலை
சிவன்மலை சுப்பிரமணியர் கோயில் தீபத்தூண்
ஆள்கூறுகள்:11°02′08″N 77°32′17″E / 11.035686°N 77.538061°E / 11.035686; 77.538061
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருப்பூர்
அமைவு:சிவன்மலை
கோயில் தகவல்கள்
மூலவர்:சுப்ரமணிய சுவாமி
தாயார்:வள்ளி, தெய்வானை
தீர்த்தம்:காசித் தீர்த்தம்
சிறப்பு திருவிழாக்கள்:தைப்பூசத் தேர்திருவிழா
உற்சவர்:சிவாஜலபதி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை

அமைவிடமும் போக்குவரத்தும்

தொகு

காங்கயத்திலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் சிவன்மலை மீது அமைந்துள்ளது.

இக் கோயிலின் அஞ்சல் முகவரி: அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில், சிவன்மலை, காங்கயம் வழி, திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு -638701.

அருகிலுள்ள பேருந்து நிலையம்: காங்கயம்; அருகிலுள்ள ரயில்நிலையம்: திருப்பூர்; வானூர்தி நிலையம்: கோயம்புத்தூர்.

சிவன்மலை மீதுள்ள கோயிலை நடைப்பயணமாக அடைய 496 படிகள் கொண்ட மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மூலம் கோயிலுக்குச் செல்ல தனிப்பாதை உள்ளது. கோயில் நிர்வாகத்தாரால் மலை மீதுள்ள கோயிலுக்கு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. தனியார் வாகனங்களிலும் செல்லலாம்.

பெயர்க்காரணம்

தொகு

சிவவாக்கியம் எனும் நூலை இயற்றிய சிவவாக்கியர் சித்தர் சிவன் மலையில் தங்கி தமது விருப்பதெய்வமான முருகப்பெருமானுக்கு திருக்கோயில் எழுப்பி வழிபட்டார். அவர் பெயரிலேயே மலை ’சிவன் மலை’ என்று வழங்கப்பட்டது.[1]

கற்பந்தல்கள் மற்றும் பூஜைகள்

தொகு

மலைப்படியில் நடந்து செல்லும் போது பக்தர்கள் ஓய்வெடுக்க பல கற்பந்தல்கள் (மண்டபங்கள்) அமைந்துள்ளன.[1]

தினசரி பூஜைகள்

முதல் பூஜை காலை 6 மணி

காலசந்தி காலை 9 மணி

உச்சிகாலம் மதியம் 12 மணி

சாயரட்சை மாலை 6 மணி

அர்த்தசாமம் இரவு 8 மணி

கோயில்

தொகு

சிவன்மலை கோயிலுக்கு வெளியே தீபத்தூண் உள்ளது. அத் தூணின் அடிப்புறத்தில், விநாயகர் (கிழக்கே), சூலம் (தெற்கே), மயில் ((வடக்கே) மற்றும் தண்டபாணி (மேற்கே) வடிக்கப்பட்டுள்ளது. கோயிலின் உள்ளே தெற்குப் பிரகாரத்தில், கைலாசநாதர், ஞானாம்பிகை சன்னிதிகள் கிழக்குமுகமாக உள்ளன. மேற்குப் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் கன்னிமூலை விநாயகரும், வடமேற்கில் தண்டபாணியும், கருவறையின் வெளிச்சுவற்றில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, துர்க்கைக்கு எதிரில் சண்டிகேஸ்வரர் உள்ளனர். சனிபகவானுக்குத் தனி சன்னிதியும் அதுதவிர நவக்கிரக சன்னிதியும் அடுத்து பைரவர் சன்னிதியும் அமைந்துள்ளன.

பிரகாரம் சுற்றிவந்து, கொடிமரம், மயில்வாகனக் குறடு, பலிபீடம் கடந்தால், சுமுகர், சதேகர் துவாரபாலகர்கள். அடுத்து உள்ளே கருவறையில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி சமேதராக இருக்கிறார்.

இக்கோயிலின் தலவிருட்சமாக தொரட்டி மரம் உள்ளது. சிவன்மலை முருகன் கோவில் கி.பி 10ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது இந்த சிவன்மலை முருகன் கோவில்.

மரபு வரலாறு

தொகு

சிவன் திரிபுரத்தை அழிக்க மேருமலையை வில்லாகப் பயன்படுத்தியபோது அதிலிருந்து சிதறிய ஒரு சிறுபகுதியே சிவன்மலை எனப்படுகிறது. இது பார்வதி மற்றும் அகத்தியர் சிவனை நோக்கித் தவம் செய்த தலம் என்றும், வள்ளிமலைக்குச் சென்று வள்ளியை மணம்முடித்த முருகன் வள்ளியுடன் இங்கு குடிகொண்டதாகவும் வரலாறு உள்ளது.

இந்த வரலாறு ’சிவமலைக் குறவஞ்சிப் பாடலில்’ கூட குறிப்பிடப்படுகின்றது.[1]

அந்த மேரை ஈசன் திரிபுர சம்ஹாரம்
செய்ய வளைக்குங் காலை
முந்து கொடுமுடியுள் ஒன்று சிந்தி இங்கு
வந்த சிவமலை இம்மலையே!’

உத்தரவுப் பெட்டி

தொகு
 
உத்தரவுப் பொருட்கள் வைக்கப்படும் பெட்டி

இந்தக் கோயிலில் ஆண்டவன் உத்தரவின் பெயரில், ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்வது வழக்கமாக உள்ளது. பூசைக்குப் பின்னர், அப் பொருள் ’உத்தரவுப் பெட்டி’ என்றழைக்கப்படும் கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது.

உத்தரவுப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருளின் தேர்வு முறை

ஏதாவது ஒரு பக்தரின் கனவில் வந்து சிவன்மலை முருகன் ஒரு குறிப்பிட்ட பொருளை வைத்து பூஜை செய்ய உத்தரவிட, அந்த பக்தர் அப் பொருளை இக்கோயிலுக்குக் கொண்டு வருகிறார். அதன் நம்பகத்தன்மைக்காக கடவுள் முன் பூப்போட்டுப் பார்த்து உறுதி செய்யப்பட்ட பின்னர் அப் பொருள் கடவுளின் முன் வைத்துப் பூசைசெய்யப்பட்டு, மக்கள் பார்வைக்காக முன்மண்டபத்திலுள்ள உத்தரவுப் பெட்டிக்குள் வைக்கப்படுகிறது. வேறொரு பக்தரின் கனவில் மற்றொரு பொருளுக்கான உத்தரவு வரும்வரை பழைய பொருளே உத்தரவுப் பெட்டியில் நீடிக்கிறது. நடக்கப்போகும் நிகழ்வுகளின் முன்னறிவிப்பாக இப்பொருள்கள் முக்கியத்துவம் பெற்றவவை என்பது பக்தர்களின் நம்பிக்கை[2][3][4][5].

சித்தர்கள்

தொகு

சிவன்மலையில் இன்றும் ஏராளம் சித்தர்கள் தவம் செய்துகொண்டிருக்கின்றனர். புண்ணியம் செய்தோர் கண்களில் அவ்வப்போது சில சித்தர்கள் புலப்படுவதுண்டு.[1]

காசித் தீர்த்தம்

தொகு

இத்தல முருகரின் பக்தையான ஒரு பெண் காசி சென்று நீராட விரும்பியும் காசி செல்ல வசதியில்லாததால் மனம் வருந்த, தம் பக்தைக்காக முருகப்பெருமான் காசித் தீர்த்தத்தை இத்தலத்திற்கே வரவழைத்தார்.[1]

மற்ற சிறப்புகள்

தொகு
  • சிவன்மலை சிறப்பு மலையைச் சுற்றிலும் அட்ட துர்க்கை இருப்பதாகக் கூறுவர். ஆலாம்பாடி வனசாட்சி (காட்டம்மை) பாப்பிணி அங்காளபரமேஸ்சுவரி, காங்கயம் ஆயி அம்மன், வலுப்பூரம்மன், தங்கம்மன், அத்தனூரம்மன், கர்யகாளியம்மன், செல்வநாயகி என்று எட்டு அம்மன் பெயர்களைக் சூழ்ந்துள்ள எட்டு இடங்களுக்குக் கூறுகின்றனர்.[6]
  • மற்ற திருத்தலங்கள் போலன்றி இங்கு முதல் வழிபாடு முருகப்பெருமானுக்கே. மற்ற திருத்தலங்களில் முதல் வழிபாடு பிள்ளையாருக்கே.
  • நவக்கிரகங்கள் அனைத்தும் சூரியபகவானைப் பார்த்து நிற்கின்றன.[1]

சிவபெருமான் சன்னதி

தொகு

ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ கைலாசநாதர் சன்னதியும் உள்ளது. சிவபெருமான், உமையம்மைக்கும் நவகன்னியருக்கும் தரிசனம் தந்தருளியதாக தலவரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

கருணை இல்லம்

தொகு

1997 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் முதல் இக்கோயில் நிர்வாகத்தின்கீழ் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ’கருணை இல்லம்’ ஒன்று இயங்கி வருகிறது. இத் திட்டத்தில் 25 குழந்தைகளுக்கு உணவு, உடை, உறைவிடம் மற்றும் கல்வி வழங்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 குமுதம் ஜோதிடம்; 6.12.2013; சித்தர்கள் தவமியற்றும் சிவன் மலை! கட்டுரை; பக்கம் 4,5,6;
  2. http://www.tamilolli.com/?p=10910[தொடர்பிழந்த இணைப்பு]
  3. http://www.dinamani.com/edition_coimbatore/tirupur/2013/05/18/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/article1595283.ece
  4. http://temple.dinamalar.com/news_detail.php?id=18425
  5. http://tamil.oneindia.in/news/2013/05/20/tamilnadu-sivanmalai-hints-another-tsunami-175632.html
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-06-22. பார்க்கப்பட்ட நாள் 2020-06-22.

வெளி இணைப்புகள்

தொகு