சி. ஆறுமுகம்
மதுராந்தகம் சி. ஆறுமுகம் மதுராந்தகத்தார் என்ற பெயரால் பிரபலமானவர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், கொடூர் கிராமத்தில் 1927ல் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன உறுப்பினர் ஆவார். செங்கை அண்ணா மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணாவுடன் பொதுக்குழு உறுப்பினராக இருந்தார். இவர் திமுக சார்பாக மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில், 1971, 1977, 1984 சட்டமன்றத் தேர்தல்களில், போட்டியிட்டு வெற்றிபெற்றார். மதுராந்தகம் நிலவள வங்கி தலைவராக பொறுப்பு வகித்தார்.
1984 நடந்த சட்டமன்ற தேர்தலில் 90 பேரை எதிர்த்து நின்று மிகக் கடுமையாக போராடி வெற்றி பெற்றவர், பின்னர் தலைவரின் ஆணை ஏற்று, இந்திய அரசியலமைப்புச்சட்டத்தை எரித்து தன் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.
இவர் 1971 முதல் 1993 வரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தின் கட்சிச் செயலாளராகப் பணிபுரிந்தார். பேரறிஞர் அண்ணா அவர்களுடன் நெருங்கி பழகியவர். இவர் அக்கட்சித் தலைவர் மு. கருணாநிதியுடன் மிகுந்த நெருக்கமாக இருந்தார். அக்கட்சி அறக்கட்டளையின் உறுப்பினராகவும் இருந்தார்.
2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் தேதி அன்று இயற்கை எய்தினார்.