சி. சிவஞானசுந்தரம்

சி. சிவஞானசுந்தரம் (சுந்தர், மார்ச் 3, 1924 - மார்ச் 3, 1996) சுமார் 45 ஆண்டுகளாக இலங்கையில் கேலிச்சித்திரத்துறையில் தனது ஆளுமையைச் செலுத்தியவர். பல்லாயிரக்கணக்கான சித்திரங்களைத் தீட்டியுள்ளார். அவர் 1964 ஆம் ஆண்டில் தொடங்கிய சிரித்திரன் என்ற மாத இதழ் அவரது மறைவு வரை ஏறத்தாழ 32 ஆண்டு காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது.

சி. சிவஞானசுந்தரம்
சிரித்திரன் சுந்தர்
பிறப்பு(1924-03-03)மார்ச்சு 3, 1924
கரவெட்டி, யாழ்ப்பாணம், இலங்கை
இறப்புமார்ச்சு 3, 1996(1996-03-03) (அகவை 72)
கரவெட்டி, இலங்கை
பணிபத்திரிகையாளர், பதிப்பாளர், கேலிச்சித்திர ஓவியர், எழுத்தாளர்
வாழ்க்கைத்
துணை
கோகிலம் சிவஞானசுந்தரம்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

யாழ்ப்பாணம், கரவெட்டியில் பிறந்த சிவஞானசுந்தரத்தின் தந்தை இலங்கையின் முதலாவது அஞ்சல் மாஅதிபர் வி. கே. சிற்றம்பலம். சுந்தரைக் கட்டிடக்கலை கற்பதற்கு இந்தியாவுக்கு அனுப்பினார் தந்தை. தந்தையின் விருப்புக்கு மாறாக அங்கு கார்ட்டூன் கலையைக் கற்றுக் கொண்டு ஒரு கேலிச்சித்திர விற்பன்னராக நாடு திரும்பினார். ஆரம்பத்தில் தினகரன், வீரகேசரி, மித்திரன் நாளிதழ்களில் கேலிச் சித்திரங்கள் வரைய ஆரம்பித்தார். அன்றைய தினகரனில் வெளிவந்த சவாரித்தம்பர் கார்ட்டூன் மிகப் புகழ் பெற்றது.

சிரித்திரன் சஞ்சிகை

தொகு

முதன்முதலில் கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள சென் பெனடிக்ற் மாவத்தையில் பல சிரமங்களுக்கு இடையில் 1964 இல் சிரித்திரனை வெளியிடத் தொடங்கினார். ஏழு ஆண்டுகள் கொழும்பில் இயங்கிய பின்பு யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் இருந்து வெளியிட்டார். வெறும் சிரிப்புச் சஞ்சிகையாக மட்டுமல்லாமல் சிரிப்புடன் சிந்தனையையும் தூண்டும் பல சிறந்த ஆக்கங்களைச் சிரித்திரனில் பதிப்பித்தார்.

சுந்தரின் நூல்கள்

தொகு

சிரித்திரன் சுந்தரின் கருத்தோவியங்கள் நூலாக சிரித்திரன் சித்திரக் கொத்து என்னும் நூலாக வெளிவந்திருக்கின்றன. கார்ட்டூன் உலகில் நான் என்று சுந்தரின் தன்வரலாற்று நூலாக வெளிவந்திருக்கிறது. மகுடி பதில்கள் நூலாக வெளிவந்தது.

காலம், சுவைத்திரள் போன்ற சஞ்சிகைகள் சிரித்திரன் சுந்தர் சிறப்பிதழ்களை வெளியிட்டன.

இறுதிக் காலம்

தொகு

1987 ஆம் ஆண்டில் இந்திய அமைதிப் படையினருடன் நிகழ்ந்த போரின் போது இடம்பெற்ற சம்பவங்களில் சிரித்திரன் அச்சகத்தின் சொத்துகள், அச்சகப் பொருட்கள் அனைத்தும் சூறையாடப்பட்டன. அத்துடன் அவரைப் பாரிசவாத நோய் பற்றிக் கொண்டது. வலது கரம் இயங்க மறுத்த நிலையில் இடது கரத்தால் எழுதி மீண்டும் சிரித்திரன் இதழை வெளியிட்டு வந்தார். 1995 மூன்றாம் ஈழப்போரின் போது இடம்பெற்ற வலிகாம இடப்பெயர்வின் போது மீண்டும் கடுமையான நோய்க்கு ஆளானார். வடமராட்சியிலேயே 1996 மார்ச் 3 ஆம் நாள் காலமானார். மிகக் குறுகிய காலத்தில் அவரது மனைவியும் காலமானார்[1].

மாமனிதர் விருது

தொகு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் மாமனிதர் விருது வழங்கிப் பெருமைப்படுத்தப்பட்டார்.

மேற்கோள்கள்

தொகு
  1. இலக்கணமாய் வாழ்ந்த இலக்கிய மனிதர், இரா. சிவசக்தி, வீரகேசரி, மார்ச் 3, 2012.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._சிவஞானசுந்தரம்&oldid=3243862" இலிருந்து மீள்விக்கப்பட்டது