சுசீந்திரம் தாணுமாலயன் கோயில்
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் எனும் ஊரில் அமைந்துள்ளது தாணுமாலயன் கோயில். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள இக்கோயில் தாணுமாலயன் கோயில் என அழைக்கப்படுகிறது.
தாணுமாலயன் கோயில் | |
---|---|
சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் | |
ஆள்கூறுகள்: | 8°09′17.7″N 77°27′55.1″E / 8.154917°N 77.465306°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கன்னியாகுமரி |
அமைவு: | சுசீந்திரம் |
ஏற்றம்: | 35 m (115 அடி) |
கோயில் தகவல்கள் |
வரலாறு
தொகுஅத்திரி முனிவரும், அவருடைய இல்லத்தரசியும் கற்புக்கரசியுமான அனுசுயாவும் ஞானாரண்யம் எனும் பழம்பெயர்பெற்ற சுசீந்திரத்தில் தவம் செய்தனர். இந்நிலையில், அத்திரி முனிவர் இமயமலைக்குச் சென்றார். அப்போது சிவபெருமான், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் அனுசுயாவின் கற்பை சோதிக்க எண்ணி பிராமணர் வேடம் அணிந்து, அவருடைய ஆசிரமத்திற்கு வந்து உணவு தருமாறு வேண்டினர். அனுசுயாவும் உணவு படைக்கத் தொடங்கினார். அப்போது மூவரும், ”ஆடை அணிந்த ஒருவரால் உணவு பரிமாறப்படுமாயின் உணவு உண்ண ஆகாது” என்று கூறினர். இதைக் கேட்டு திடுக்கிட்ட அனுசுயாதேவி, தன் கணவர் திருவடி கழுவிய நீரை மூவர் மீதும் தெளித்தார். அவர்கள் மூவரும் பச்சிளங்குழந்தைகளாக மாறினர். பின்பு அந்தப் பச்சிளங்குழந்தைகளுக்கு உணவூட்டி, தொட்டிலிட்டு, தாலாட்டித் தூங்கச் செய்தாள். தங்கள் கணவர்கள் பச்சிளங்குழந்தையாக மாற்றப்பட்டதை அறிந்த மூவரின் தேவியரும் அங்கு வந்து அனுசுயாவிடம், தங்கள் கணவர்களை பழைய உருவிற்கு மாற்றித் தர வேண்டினர். தேவியர்கள் வேண்டுகோளுக்கிணங்கிய அனுசுயா முப்பெரும் கடவுளுக்கும் பழைய உருவைக் கொடுத்தாள். அப்போது திரும்பி வந்த அத்திரி முனிவரும் அனுசூயாவோடு சேர்ந்து, மும்மூர்த்திகளின் காட்சியைப் பெற்றார். இந்நிகழ்ச்சியை நினைவூட்டவே சுசீந்திரம் கோவில் கட்டப்பட்டுள்ளது என்கிறது இதன் தல வரலாறு.
அத்திரி முனிவரும், அனுசுயாவும் இங்குள்ள தல விருட்சமான கொன்றை மரத்தினடியில் நின்று வேண்ட மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்தனர். இதைக் குறிக்கும் விதமாக மும்மூர்த்திகளும் ஒரு முகமாய் தாணுமாலயன் என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளனர். சிவன் (தாணு), விஷ்ணு (மால்), பிரம்மா (அயன்) ஆகிய முப்பெருங்கடவுள்களும் சேர்ந்துள்ள இத்தல மூர்த்தி தாணுமாலயன் என அழைக்கப்படுகிறார்.
பெயர்க் காரணம்
தொகுதாணுமாலயன் கோயில் அமைந்துள்ள இடம் சுசீந்திரம் என அழைக்கப்படுகிறது. அகலிகையால் ஏற்பட்ட தேவேந்திரனுடைய சாபம் நீங்க தேவேந்திரன் இத்தலத்துக்கு வந்து மும்மூர்த்திகளை ஒரே சமயத்தில் வழிபட்டு விமோசனம் பெற்ற தலம் இது. சுசீ என்றால் தூய்மை என்று பொருள். இந்திரன் இங்கு தூய்மை பெற்றதால் சுசீந்திரம் என அழைக்கப்படலாயிற்று.
அறம் வளர்த்த அம்மன்
தொகுஇக்கோயிலில் “அறம் வளர்த்த அம்மன்” கருவறை உள்ளது.
மண்டபங்கள்
தொகுஇக்கோயிலில் கலை வேலைப்பாடுகள் மிகுந்த சில மண்டபங்கள் உள்ளன. அவை;
- கலைநயத்துடனான சிற்பங்களுடன் கூடிய செண்பகராமன் மண்டபம்.
- இசைத்தூண்கள் கொண்ட குலசேகர மண்டபம்.
- திருக்கல்யாணம் நடக்கும் ஊஞ்சல் மண்டபம்.
- வேனிற்காலத்தில் மும்மூர்த்திகள் ஓய்வெடுக்கும் வசந்த மண்டபம்.
- பல இறையுருக்களின் சிற்பங்களைக்கொண்ட சித்திர சபை.
விழாக்கள்
தொகுஇங்கு தினசரி வழிபாடுகள் நடத்தப் பெற்றாலும் கீழ்க்காணும் விழாக்கள் இக்கோயிலில் மிகச் சிறப்பாக நடத்தப் பெறுகின்றன.
- சித்திரை தெப்பத்திருவிழா - 1 நாள்
- ஆவணி பெருநாள் திருவிழா - 9 நாள்
- மார்கழி திருவாதிரை திருவிழா- 10 நாள்
- மாசி திருக்கல்யாண திருவிழா - 9 நாள்
அனுமன் சிலை
தொகுமேலக்கோபுர வாயிலுக்கு நிலத்தைத் தோண்டும்போது அனுமன் சிலை ஒன்று கிடைத்தது. 18 அடி உயரமுடைய இந்தச் சிலை 1929 ஆம் ஆண்டில் இராமபிரானின் கருவறைக்கு எதிரில் இருக்குமிடத்தில் நிறுவப்பட்டுள்ளது. இங்கு ஆஞ்சநேயர் வழிபாடு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
சிறப்புகள்
தொகு- இக்கோயில் 5400 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.
- இக்கோயிலின் அரச கோபுரத்தின் உயரம் நூற்று முப்பத்தி நாலரை அடி இருக்கிறது.
- இக்கோயிலில் கணபதியைப் பெண்ணுருவில் செதுக்கியுள்ள சிற்பம் உள்ளது. இதை “விக்கினேசுவரி” என அழைக்கிறார்கள்.
- இக்கோயிலின் நவக்கிரகங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த நவக்கிரகங்களின் சிற்பங்கள் மேற்கூரையில் உள்ளன.
போக்குவரத்து
தொகுநாகர்கோவிலிருந்து கன்னியாகுமரி செல்லும் பாதையில், நாகர்கோவிலில் இருந்து 7 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து 12 கி.மீ. தொலைவிலும் கோயில் அமைந்துள்ளது.
படங்கள்
தொகு-
தாணுமாலயன் கோயில் தெப்பக் குளம்
-
தாணுமாலயன் கோயில் தேர்