செய்கிந்த் வரலாறு

இந்திய தேசியக் கொடியை ஏற்றியவுடன் மரியாதை செலுத்துவதும் பின்னர் தேசிய கீதம் இசைப்பதும் வழக்கமான வழக்கமாகும்.1942 ஆம் ஆண்டில் தான் சுதந்திர வேட்கையை எழுப்பும் வகையில் வந்தே மாதரம் பாடல் ஒலிக்கத் தொடங்கியது.அதே ஆண்டில் மகாத்மா காந்தியின் தலைமையில் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது செய் அல்லது செத்து மடி என்ற வாக்கியம் சரித்திரப் புகழ் பெற்றது.அதைப் போல் 1945 ஆம் ஆண்டு சுபாசு சந்திர போசு தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்தினர் மீது ஆங்கிலேயர்கள் விசாரணை நடத்தத் தொடங்கிய போது தான் செய்கிந்த் என்ற வார்த்தை உருவாயிற்று.

செண்பகராமன் பிள்ளை

தொகு

உண்மையில் இந்த வார்த்தை திருவனந்தபுரத்தில் பிறந்த செண்பகராமன் பிள்ளை,தன் ரத்தத்தில் ஊறிய சுதந்திர வேட்கையின் காரணமாக இளம் வயதிலேயே தன் நண்பர்களைச் சந்திக்கும் போது செய்கிந்த் என்று கூறுவாராம்.[1] நாளடைவில் இது பிரபலமடையத் தொடங்கியது.1908 ஆம் ஆண்டில் செண்பகராமன் மேற்படிப்புக்காக செர்மனி சென்றார்.வெளிநாட்டில் இருந்தாலும் அவரது மனதில் தாய் நாட்டைப் பற்றிய சிந்தனை தான் மேலோங்கி இருந்தது.பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவுடன் பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினார்.1914 ஆம் ஆண்டில் செப்டம்பர் 22 ஆம் தேதி சென்னை அருகே வந்து சென்ற செர்மனியின் எம்டன் யுத்தக் கப்பலில் கடற்படைத் தளபதியாக செண்பக ராமன் பணியாற்றினார்.

செண்பகராமன் பிள்ளை நேதாசியுடன் சந்திப்பு

தொகு

1933 ஆம் ஆண்டு வியன்னாவில் முதன் முதலாக செண்பகராமன் பிள்ளை நேதாசியை சந்தித்த போது செய்கிந்த் என்று கூறி வணக்கம் தெரிவித்தது நேதாசியை மிகவும் கவர்ந்தது. இந்திய தேசிய ராணுவ வட்டாரத்தில் ராணுவ வீரர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போது செய்கிந்த் என்று கூறுவது வழக்கமாயிற்று. 1941 ஆம் ஆண்டு செர்மனியில் இந்திய ராணுவ கைதிகள் சந்திப்புக் கூட்டத்தில் பேசிய நேதாசி,அவர்களை இந்திய தேசிய ராணுவத்தில் சேர அழைப்பு விடுத்தார்.1941 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி,செர்மனியில் சுதந்திர இந்தியா மையத்தில் நடந்த கூட்டத்தில், இனி நம்முடைய ராணுவ வீரர்களும்,இந்திய சுதந்திரத்திற்காகப் போராட விரும்புகிறவர்களும் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ள ஒருவருக்கொருவர் சந்திக்கும் போது செய்கிந்த் என்று சொல்ல வேண்டும் என்ற தீர்மானத்தை நேதாசி நிறைவேற்றினார்.

செய்கிந்த் பிரகடனம்

தொகு

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா சுதந்திரமடைந்த அன்று செங்கோட்டையில் முதல் இந்திய சுதந்திரக் கொடியை ஏற்றி வைத்த முதலாவது இந்தியப் பிரதமரான சவகர்லால் நேரு தன்னுடைய உரையை முடித்த பின்னர்,செய்கிந்த் என்று உரத்துக் கூறியது,கூடியிருந்தவர்கள் அனைவரையும் பெருங்குரலில் செய்கிந்த் என்று கூற வைத்தது.அப்போது முதல் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் இறுதியில் செய்கிந்த் என்று கூறுவது வழக்கமானது.[2].

மேற்கோள்கள்

தொகு
  1. (6 மார்ச்சு, 2011). "செண்பகராமன் பிள்ளை". தினமணி. (Web link). Retrieved on 11 திசம்பர் 2013.
  2. அ.குமார் (26.01.2014). செய்கிந்த் வரலாறு. மதுரை. {{cite book}}: Check date values in: |year= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=செய்கிந்த்_வரலாறு&oldid=3925055" இலிருந்து மீள்விக்கப்பட்டது