செருமானிய மீளிணைவு
செருமானிய மீளிணைவு (இடாய்ச்சு மொழி: Deutsche Wiedervereinigung); (ஆங்:German reunification) என்பது 1990இல் செருமானிய மக்கள் குடியரசு (கிழக்கு செருமனி) செருமனி கூட்டாட்சிக் குடியரசோடு (மேற்கு செருமனி) இணைந்ததையும், பெர்லின் நகரம் ஒரே நகரமாக மீண்டும் இணைந்ததையும் குறிக்கின்ற நிகழ்ச்சி ஆகும்.
இந்த மீளிணைவுச் செயல்பாட்டின் தொடக்கத்தை செருமானியர் "திருப்புமுனை" (இடாய்ச்சு மொழி: die Wende) (ஆங்:The Turning Point) என்று அழைக்கின்றனர். அதன் இறுதி விளைவை "செருமானிய ஒற்றுமை" (இடாய்ச்சு மொழி: Deutsche Einheit) (ஆங்:German unity) என்று கூறி, அதை அக்டோபர் 3ஆம் நாள் கொண்டாடுகின்றனர்.[1]
அங்கேரியின் எல்லை வேலிகள் நீக்கப்பட்டு இரும்புத் திரையில் துளை விழுந்த மே 1989இல் கிழக்கு செருமனியின் ஆட்சி ஆட்டம் கண்டது. பல்லாயிரக்கணக்கான கிழக்கு செருமானியர்கள் அங்கேரி வழியாக ஆத்திரியாவிற்கும் மேற்கு செருமனிக்கும் இடம் பெயரத் தொடங்கினர். கிழக்கு செருமானியர்களின் தொடர்ந்த போராட்டங்கள், அமைதியான புரட்சி, மார்ச்சு 18, 1990இல் கிழக்கு செருமனியில் முதன்முறையாக பொதுத் தேர்தலுக்கு வழி வகுத்தது. இதன் தொடர்ச்சியாக கிழக்கு/மேற்கு செருமனிகளுக்கிடையே ஏற்பட்ட உரையாடல்களின் பயனாக ஒன்றிணைப்பு ஒப்பந்தமும்[1] இரு செருமனிகளுக்கும் அவற்றை ஆக்கிரமித்திருந்த நான்கு அரசுகளுக்குமிடையே இரண்டுடன் நான்கு ஒப்பந்தமும் கையொப்பமாயின. இவை ஒன்றிணைந்த செருமனிக்கு முழு இறையாண்மையை வழங்கின. ஒன்றிணைந்த செருமனி ஐரோப்பிய சமூகத்திலும் (பின்னர் ஐரோப்பிய ஒன்றியம்) நேட்டோவிலும் உறுப்பினராக தொடர்ந்தது.
மீளிணைவு வரலாறும் பெயரும்
தொகு1990இல் செருமனி ஒன்றுபடுதல் குறித்த நிகழ்வுகளை "மீளிணைவு" (reunification) என்று அழைப்பதா "ஒன்றிணைவு" (unification) என்று அழைப்பதா என்பதைப் பற்றி விவாதம் உள்ளது. "மீளிணைவு" என்று அழைப்பதே சரி என்போர் பின்வருமாறு கூறுகின்றனர்: பல பகுதிகளாகச் சிதறிக்கிடந்த செருமனி ஏற்கெனவே 1871இல் "ஒன்றிணைந்தது". மேலும், 1957, சனவரி முதல் நாள் சார்லாந்து பிரதேசம் மேற்கு செருமனியோடு சேர்ந்தபோது, அது "சிறு ஒன்றிணைவு" என்று அழைக்கப்பட்டது. மக்கள் வழக்கில், "மீளிணைவு" என்பதற்கு பெர்லின் நகரை இரண்டாகப் பிரித்த சுவர் தகர்க்கப்பட்டதும், 1945லிருந்து பிளவுபட்டிருந்த அந்த நகர் ஒன்றாக இணைக்கப்பட்டதும் முக்கிய காரணிகள் ஆயின.
மறுதரப்பினரின் வாதம் இது: செருமனி நாட்டு வரலாற்றில் இதுவரையிலும் இந்த அளவிலான "ஒன்றிணைவு" நிகழ்ந்தது கிடையாது. ஆக, 1990இல் நிகழ்ந்த ஒன்றிப்பு நிகழ்வை "ஒன்றிணைவு" என அழைப்பதே பொருத்தம்.
மேற்கு மற்றும் கிழக்கு செருமனி இணைந்ததை செருமன் மக்கள் "திருப்புமுனை" (die Wende = The Turning Point) என்கின்றனர். இணைப்புக்கான முயற்சிகள் நடந்த காலகட்டத்தில், அரசியல் மற்றும் அரசு உறவுக் காரணங்களுக்காக மேற்கு செருமனி நாட்டு அரசியல்வாதிகள் "மீளிணைவு" என்ற சொல்லை மிகுந்த கவனத்தோடு தவிர்த்துவந்தார்கள். மாறாக, "செருமன் ஒற்றுமை" (German unity) என்னும் சொற்றொடரைப் பயன்படுத்தினர்.[1] 1990இல் பன்னாட்டு செய்தியாளர்கள் "செருமனி மீளிணைவு" பற்றிக் கேள்வி கேட்ட போது பதிலளிக்கையில் மேற்கு செருமனியின் துணைத் தலைவரும் வெளியுறவு அமைச்சருமாக இருந்த கான்சு டீட்ரிச் கென்ஷெர் "செருமன் ஒற்றுமை" பற்றியே குறிப்பிட்டார்.
1990க்குப் பிறகு, "திருப்புமுனை" என்னும் சொல் மக்களிடையே புழக்கத்தில் வந்தது. இச்சொல், மேற்கு செருமனியும் கிழக்கு செருமனியும் "மீண்டும்" இணைவதற்கு இட்டுச் சென்ற நிகழ்ச்சிகளை (குறிப்பாக, கிழக்கு செருமனியில் நிகழ்ந்தவற்றை) குறிக்கிறது. செருமனியில் (குறிப்பாக கிழக்கு செருமனியில்) ஒரு பெரிய "திருப்பம்" நிகழ்ந்தது. ஆனால், "திருப்பம்" என்ற சொல்லைக் கிழக்கு செருமனியைச் சேர்ந்த அரசியல்வாதி ஏகோன் கிரென்சு (Egon Krenz) என்பவர் அறிமுகப்படுத்தியதால், அந்நாட்டைச் சார்ந்த குடிமைசார் உரிமைப் போராளிகள் அச்சொல்லை ஏற்க மறுத்தனர்.[2]
மீளிணைவுக்கு முன்னோடிகளாக அமைந்தவை
தொகு1945ஆம் ஆண்டில், இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தபோது நாசி செருமனி தோல்வியடைந்தது. நேச நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட செருமனி இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. கிழக்குப் பகுதி பொதுவுடைமைக் கட்சி நிலவிய சோவியத் கூட்டோடு சேர்ந்த நாடாகவும், மேற்குப் பகுதி முதலாளித்துவ ஐரோப்பியப் பகுதியைச் சேர்ந்த நாடாகவும் உருவாக்கப்பட்டன. மேலும், கிழக்கு செருமனி வார்சா உடன்பாடு என்னும் இராணுவக் கூட்டமைப்பின் கீழும், மேற்கு செருமனி நேட்டோ (NATO) என்னும் இராணுவக் கூட்டமைப்பின் கீழும் வந்தன.
தலைநகராகிய பெர்லின் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, சோவியத் யூனியன், ஐக்கிய அமெரிக்க நாடுகள், ஐக்கிய இராச்சியம், பிரான்சு ஆகிய நாடுகளின் கட்டுப்பாட்டுக்கு அமைந்து செயல்பட்டது. பனிப்போர் காலம் முழுவதும் செருமானியர் இத்தகைய கட்டுப்பாடுகள் அடங்கிய பிரிவுக்கு உட்பட்டு வாழ்ந்துவந்தனர்.
1980களில் சோவியத் யூனியனில் பொருளாதார மற்றும் அரசியல் தேக்கநிலை ஏற்பட்டது. அதன் விளைவாக, சோவியத் யூனியன் கிழக்கு ஐரோப்பிய அரசியல் விவகாரங்களில் தன் தலையீட்டைக் குறைத்துக்கொண்டது. 1987ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ரானல்டு ரேகன் பெர்லின் நகரத்து ப்ராண்டன்புர்க் வாயிலில் ஒரு பேருரை ஆற்றினார். அதில் அவர் சோவியத் அதிபர் மிக்காயில் கோர்பசோவுக்குச் சவால் விடுத்து, பெர்லின் நகரைப் பிளவுபடுத்திய "இச்சுவரை இடித்துத் தள்ளுக!" என்று கூறினார்.
பெர்லின் சுவர் மேற்கு நாடுகளுக்கும் கிழக்கு நாடுகளுக்கும் இடையே நிலவிய அரசியல்-பொருளாதாரப் பிளவைப் பறைசாற்றிய குறியீடு போல அமைந்திருந்தது. அப்பிளவைத் தான் வின்ஸ்டன் சர்ச்சில் இரும்புத் திரை என்று குறிப்பிட்டிருந்தார்.
1989ஆம் ஆண்டுத் தொடக்கத்தில், சோவியத் யூனியனின் அரசியல்-பொருளாதார அணுகுமுறையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. அதிபர் கோர்பசோவ் திறந்த அணுகுமுறை (glasnost - உருசியம்: гла́сность), சீரமைப்பு (perestroika - உருசியம்: перестройка) என்னும் கொள்கைகளை அறிமுகம் செய்தார். அதன் பின்னணியில் சோவியத் கூட்டமைப்போடு சேர்ந்த போலந்து நாட்டில் "சாலிடாரிடி" இயக்கம் (Solidarity movement) தொழிலாளர்களிடையே சுதந்திர வேட்கையைத் தட்டி எழுப்பியது. போலந்து நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக, திருத்தந்தையாக இரண்டாம் யோவான் பவுல் பதவி ஏற்று, போலந்துக்கு பயணமாகச் சென்று உரைகள் ஆற்றியதும் சாலிடாரிடி இயக்கத்துக்கு ஊக்கமளித்தது.
மேற்கூறியவை தவிர, சுதந்திரத்தைக் கட்டுப்படுத்திய பொதுவுடைமை ஆட்சிக்கு எதிராக ஆங்காங்கே எதிர்ப்புப் போராட்டங்களும் கிளர்ச்சிகளும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் 1989இல் நிகழலாயின. 1989, மே மாதம் அங்கேரி நாடு தன் எல்லை வேலியை அகற்றியது. உடனே, ஆயிரக்கணக்கான கிழக்கு செருமனி மக்கள் மேற்கு செருமனிக்குத் தப்பியோடினர்.
இந்த விழிப்புணர்வில் "திருப்புமுனை" (இடாய்ச்சு மொழி: die Wende), (ஆங்:The Turning Point) என்று அமைந்தது அமைதியாக நிகழ்ந்த ஒரு புரட்சி. அப்புரட்சி பெர்லின் நகரச் சுவரை இடித்துத் தள்ள வழிகோலியது. கிழக்கு செருமனியும் மேற்கு செருமனியும் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தம்மேல் திணிக்கப்பட்டிருந்த பிளவுகளையும் வேறுபாடுகளையும் ஒழித்திட உரையாடலில் ஈடுபட்டன.
மீளிணைவுச் செயல்பாடு
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Vertrag zwischen der Bundesrepublik Deutschland und der Deutschen Demokratischen Republik über die Herstellung der Einheit Deutschlands (Einigungsvertrag) Unification Treaty signed by the Federal Republic of Germany and the German Democratic Republic in Berlin on 31 August 1990 (official text, in German).
- ↑ "Krenz speech of 18 October 1989 in the German radio archive". Archived from the original on 18 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 12 மார்ச் 2012.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help)
மேல் ஆய்வுக்கு
தொகு- Charles S. Maier, Dissolution: The Crisis of Communism and the End of East Germany (Princeton University Press, 1997).
- Philip Zelikow and Condoleezza Rice, Germany Unified and Europe Transformed: A Study in Statecraft (Harvard University Press, 1995 & 1997).
முதன்மை வளங்கள்
தொகு- Jarausch, Konrad H., and Volker Gransow, eds. Uniting Germany: Documents and Debates, 1944–1993 (1994), primary sources in English translation
வெளி இணைப்புகள்
தொகு- Germany's Eastern Burden: The Price of a Failed Reunification
- Problems with Reunification from the Dean Peter Krogh Foreign Affairs Digital Archives
- The End of East Germany
- German Embassy Publication, Infocus: German Unity Day[தொடர்பிழந்த இணைப்பு]
- The Unification Treaty (Berlin, 31 August 1990) website of European navigator
- An Inside Look at the Reunification Negotiations