செர்பெரஸ் நடவடிக்கை

செர்பெரஸ் நடவடிக்கை (Operation Cerberes) என்றழைக்கப்படும் கால்வாய் ஓட்டம் (Channel Dash) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கையில் நாசி ஜெர்மனியின் கடற்படை போர்க் கப்பல்கள் ஷார்ன்ஹோஸ்ட், நைசனாவ், பிரின்ஸ் ஆய்கென் மூன்றும் பிரித்தானிய கடற்படையின் கடல் முற்றுகையை முறியடித்து பிரான்சின் பிரெஸ்ட் துறைமுகத்திலிருந்து ஆங்கிலக் கால்வாய் வழியாக ஜெர்மனிக்குத் தப்பிச் சென்றன.

கால்வாய் ஓட்டம்
இரண்டாம் உலகப் போரின் பகுதி

கால்வாய் ஓட்ட நடவடிக்கையின் வரைபடம்
நாள் பெப்ரவரி 11-13 1942
இடம் ஆங்கிலக் கால்வாய்
ஜெர்மனி திட்டம் நிறைவேறியது
பிரிவினர்
 Kriegsmarine  ராயல் கடற்படை
தளபதிகள், தலைவர்கள்
நாட்சி ஜெர்மனி ஓட்டோ சிலியாக்ஸ் ஐக்கிய இராச்சியம் பெர்ட்ராம் ராம்சே
பலம்
2 பேட்டில்குரூசர்கள்
1 ஹெவிகுரூசர்
6 டெஸ்டிராயர்கள்
14 நீர்மூழ்கிக் குண்டு படகுகள்
26 ஈ-போட்டுகள்
32 குண்டுவீசி விமானங்கள்
252 சண்டை விமானங்கள்
6 டெஸ்டிராயர்கள்
3 துணை டெஸ்டிராயர்கள்
32 எந்திர நீர்மூழ்கிக் குண்டு படகுகள்
~450 விமானங்கள்
இழப்புகள்
1 பேட்டில்குரூசருக்கு சேதம்
1 பேட்டில்குரூசருக்கு லேசான சேதம்
2 நீர்மூழ்கிக் குண்டு படகுகளுக்கு லேசான சேதம்
22 விமானங்கள் நாசம்
13 மாலுமிகள் மரணம்
2 மாலுமிகள் காயம்
23 விமானிகள் மரணம்
1 டெஸ்டிராயர் பலத்த சேதம்
41 விமானங்கள் நாசம்
40 பேர் மாண்டவர்
21 பேர் காயம்

பின்புலம்

தொகு

1941ல் அட்லாண்டிக் சண்டை எனப்படும் பிரிட்டன் மீதான ஜெர்மானியக் கடல் முற்றுகை உச்சகட்டத்திலிருந்தது. அமெரிக்காவிலிருந்து பிரிட்டனுக்கு ராணுவ தளவாடங்களை ஏற்றி வரும் நேச நாட்டு சரக்குக் கப்பல் கூட்டங்களை நாசி ஜெர்மனியின் கடற்படை குறி வைத்துத் தாக்கிக் கொண்டிருந்தது. தளவாடங்களின்றி பிரிட்டன் மக்கள் பட்டினி கிடக்க வேண்டும், பிரிட்டனின் படைகள் வலுவிழக்க வேண்டுமென்பதே ஜெர்மனியின் இந்த கடல் முற்றுகையின் நோக்கம். அதற்காக யு-போட்டுகளையே (நீர்மூழ்கிக் கப்பல்கள்) பெரும்பாலும் ஜெர்மானியக் கடற்படை பயன்படுத்தினாலும், சில கடற்பரப்பு போர்க்க்கப்பல்களையும் பயன்படுத்தி வந்தது. 1940ல் பிரான்சு ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்டதனால் அந்நாட்டு அட்லாண்டிக் கடற்கரைத் துறைமுகங்கள் அட்லாண்டிக் போரில் ஈடுபட ஜெர்மன் கடற்படைத் தளங்களாக உபயோகப்படுத்தப்பட்டன. அத்துறைமுகங்களுள் முக்கியமானது பிரெஸ்ட்.

மார்ச் 22, 1941ல் ஜெர்மனியின் புகழ்பெற்ற பேட்டில்குரூசர் வகைக் கப்பல்களான ஷார்ன்ஹோஸ்ட் மற்றும் நைசனாவ் அட்லாண்டிக் போரில் பங்கு கொள்ள ஜெர்மானியக் கடற்படை தலைமையகத்தால் பிரெஸ்ட் துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டன. ஜூன் 1, 1941ல் ஹெவிகுரூசர் வகைக் கப்பல் பிரின்ஸ் ஆய்கென் அவைகளுடன் இணைந்து கொண்டது. அடுத்த சில மாதங்களுக்கு அட்லாண்டிக் கடலில் நேச நாட்டு சரக்குக் கப்பல் கூட்டங்களை இவை வேட்டையாடின. ஆனால் பிரெஸ்ட் துறைமுகம் இங்கிலாந்தில் உள்ள நேச நாட்டு வான்படை விமானங்களின் தாக்குதல் எல்லைக்குள் இருந்ததால், அவை இம்மூன்று கப்பல்களும் பிரெஸ்டுக்கு திரும்பும் போதெல்லாம் அவற்றின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தன. இதனால் இக்கப்பல்களுக்கு அடிக்கடி பழுது ஏற்பட்டது. பிரிட்டானியக் கடற்படையுடன் ஒப்பிடுகையில் ஜெர்மனியின் கடற்படை பலவீனமாக இருந்ததால், இம்மூன்று போர்க்கப்பல்களையும் இழக்கக் கூடாது, மாறாகப் பாதுகாக்க வேண்டுமென்று ஜெர்மனியின் கடற்படைத் தளபதிகள் முடிவு செய்தனர். பெப்ரவரி 1942ல் இம்மூன்று கப்பல்களையும் ஜெர்மனியின் துறைமுகங்களுக்குத் திரும்புமாறு உத்தரவிட்டனர்.

ஓட்டம்

தொகு
 
ஷார்ன்ஹோஸ்ட்

பிரெஸ்ட் துறைமுகத்திலிருந்து ஜெர்மனியின் துறைமுகத்திற்குத் போக இரு வழிகள் இருந்தன. ஜெர்மானியக் கடற்படைத் தளபதிகள் டென்மார்க் நீரிணை வழியாக மூன்று கப்பல்களையும் அனுப்ப விரும்பினர். இது ஒரு சுற்று வழி. அயர்லாந்து தீவைச் சுற்றிக் கொண்டு சில ஆயிரக்கணக்கான கிமீ செல்ல வேண்டும்; ஆனால் பாதுகாப்பானது. நேரடி வழியான ஆங்கிலக் கால்வாயில் பயணம் செய்தால் பயணதூரம் மிகக் குறைவென்றாலும் பயணம் ஆபத்து நிறைந்தது. ஆங்கிலக் கால்வாயில் வலிமையான பிரித்தானிய கடற்படை ஒன்று எந்நேரமும் ரோந்து செய்து கொண்டிருந்தது. மேலும் இங்கிலாந்திலுள்ள பிரித்தானிய வான்படை விமானங்கள் கால்வாயின் வான் பகுதிகளில் ஆதிக்க நிலை கொண்டிருந்தன. ஆனாலும் கப்பல்கள் திரும்ப ஹிட்லர் கால்வாய்ப் பாதையைத் தேர்ந்தெடுத்தார். கப்பல்களைப் பத்திரமாகக் திரும்பக் கொண்டுவரும் நடவடிக்கைக்கு “செர்பெரஸ்” என்று பெயர் சூட்டப்பட்டு வைஸ் அட்மிரல் ஓட்டோ சிலியாக்ஸ் அதன் தளபதியாக நியமிக்கப்பட்டார். ”பிரெஸ்ட் குழுமம்” என்று பெயரிடப்பட்ட இந்த மூன்று கப்பல்களுக்குப் பாதுகாப்பாக பல டெஸ்டிராயர் வகைக் கப்பல்கள் அனுப்பப்பட்டன. ஜெர்மானிய வான்படையான லுஃப்ட்வாஃபே இக்குழுமத்துக்கு உதவ தயார் நிலையில் வைக்கப்பட்டது.

 
நைசனாவ்

பிரிட்டனின் தளபதிகள் ஆங்கிலக் கால்வாயை இக்கப்பல்கள் இரவில் தான் கடக்கும் என்று நம்பியிருந்தனர். ஏனென்றால் கால்வாயின் மிகக்குறுகிய இடமான டோவர்-கலே பகுதி இங்கிலாந்து கடற்கரை பீரங்கிகளின் தாக்கெல்லைக்குள் இருந்தது. அப்பகுதியைக் கடக்க ஜெர்மானியக் கப்பல்களுக்கு இருளின் போர்வை தேவை என்று எண்ணியிருந்தனர். இரவுப் பகுதியில் டோவரைக் கடக்க வேண்டுமெனில் பன்னிரெண்டு மணி நேரம் முன்னரே பகலில் பிரெஸ்டிலிருந்து கப்பல்கள் கிளம்ப வேண்டும். ஆனால் சிலியாக்ஸ் இருளின் பாதுகாப்பை விட பிரித்தானிய படைகளை வியப்பில் ஆழ்த்துவது முக்கியம் என்று முடிவு செய்தார். எனவே பெப்ரவரி 11, 1942 நள்ளிரவில் மூன்று கப்பல்களும் பிரெஸ்ட் துறைமுகத்திலிருந்து புறப்பட்டன. மறுநாள் நண்பகலில் கால்வாயின் மீது ரோந்து செய்து கொண்டிருந்த பிரித்தானிய விமானங்கள் இவற்றைக் கண்டுபிடித்தன. ஆனால் கால்வாய் வழியாக ஜெர்மானியக் கப்பல்கள் பட்டப்பகலில் தப்ப முயற்சி செய்யும் என்று சற்றும் எதிர்பாராத பிரித்தானிய தளபதிகள் வியப்பைச் சமாளித்துக் கொண்டு எதிர்த்தாக்குதலை ஏற்பாடு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. அவர்களால் பிரித்தானிய விமானப்படையின் முழுபலத்தையும் தப்பிச் செல்லும் ஜெர்மானியக் கப்பல்களின் மீது பிரயோகிக்க முடியவில்லை. சொற்ப எண்ணிக்கையில் தாக்கிய விமானங்களின் தாக்குதலில் இருந்து அவை எளிதில் தப்பின.

 
பிரின்ஸ் ஆய்கென்

டோவர் பகுதி கடற்கரை பீரங்கிகளுக்கு அதி வேகமாக (மணிக்கு 56 கி.மீ) பயணம் செய்து கொண்டிருந்த ஜெர்மானியக் கப்பல்களின் மீது குண்டு வீச குறைந்த கால அவகாசமே கிடைத்தது. மொத்தம் 33 சுற்றுகளே அவைகளால் சுட முடிந்தது. ஆனால் சுடப்பட்ட அனைத்து குண்டுகளும் குறி தவறின. ஜெர்மானியக் கப்பல்களுக்கு இதனால் எந்த சேதமும் ஏற்படவில்லை. வழக்கமாக கால்வாய்ப் பகுதியில் ரோந்து செய்து கொண்டிருக்கும் பிரித்தானிய கப்பல்கள் அன்று வட கடல் பகுதியில் போர்ப்பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தன. ஜெர்மானியக் கப்பல்கள் தப்பிய செய்தி கேட்டதும் தெற்கு நோக்கி விரைந்தன. ஆனால் இதற்குள் ஜெர்மானியக் கப்பல்கள் கால்வாயைப் பெரும்பாலும் கடந்து விட்டிருந்தன. அவற்றை நோக்கி ஒரே ஒரு சுற்று நீர்மூழ்கிக் குண்டு குண்டுகளை வீச மட்டுமே பிரிட்டானியக் கப்பல்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அனைத்து குண்டுகளும் குறி தவறின. நைசனாவ் மற்றும் பிரின்ஸ் ஆய்கென் திருப்பி சுட்டதில் ஹெச். எம். எஸ் வொர்சஸ்டருக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. ஜெர்மானியக் கப்பல்கள் வெற்றிகரமாக தாயகம் திரும்பின. பெப்ரவரி 13 காலையில் அட்மிரல் சிலியாக்ஸ் செர்பெரஸ் நடவடிக்கை வெற்றி பெற்று விட்டதாக தனது மேலதிகாரிகளிடம் அறிவித்தார்.

விளைவுகள்

தொகு
 
தப்பிய ஹார்ன்ஹோஸ்ட் ஜெர்மனியின் கீல் துறைமுகத்தில் பழுதுபார்க்கப்படுகிறது (வானத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம். வெள்ளை அம்புக்குறி கப்பலை குறிக்கிறது)

இந்த நடவடிக்கை ஜெர்மனிக்குப் பெருத்த வெற்றியாக முடிவடைந்தது. பிரிட்டானியப் படைகள் ஆதிக்கம் செலுத்தும் ஆங்கிலக் கால்வாயின் வழியாக வெற்றிகரமாக மூன்று ஜெர்மானியக் கப்பல்களும் பெரிய இழப்புகளின்றி சிறு சேதங்களுடன் மட்டும் தப்பி விட்டன. இது கீழ்நிலை உத்தியளவில் நாசி ஜெர்மனிக்குப் பெரும் வெற்றியாகக் கருதப்பட்டாலும் மேல்நிலை உபாய அளவில் தோல்வியாகக் கருதப்படுகிறது. ஏனெனில் ஜெர்மனி திரும்பிய மூன்று கப்பல்களும் மீண்டும் அட்லாண்டிக் போரில் ஈடுபடவேயில்லை. அட்லாண்டிக் கடல் முற்றுகையை அமல்படுத்த வேண்டிய இந்த போர்க்கப்பல்கள் அடுத்த சில ஆண்டுகளை நார்வே நாட்டு கடற்பகுதிகளில் ரோந்து செய்து கழித்தன. இவை தப்பிய சில வாரங்களுக்குள்ளாக நடந்த சென் நசேர் திடீர்த்தாக்குதல் ஜெர்மானிய போர்க்கப்பல்கள் வட அட்லாண்டிக் கடல் முற்றுகையில் ஈடுபடும் வாய்ப்பை அறவே அழித்து விட்டது. இதனால் அட்லாண்டிக் போரில் யு-போட்டுகளை மட்டும் பயன்படுத்தும் கட்டாயநிலை ஜெர்மனிக்கு ஏற்பட்டது.

அடிக்குறிப்புகள்

தொகு
  1. Roskill "The German Naval Staff, however, summarised the outcome as a 'tactical victory, but a strategic defeat'" pg. 425

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்பெரஸ்_நடவடிக்கை&oldid=3924354" இலிருந்து மீள்விக்கப்பட்டது