திருமணம் கே. செல்வகேசவராய முதலியார்

எழுத்தாளர்
(செல்வகேசவராய முதலியார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருமணம் செல்வக் கேசவராய முதலியார் (1864-1921) இலக்கியம், திறனாய்வு, மொழியியல், வரலாறு ஆகிய துறைகளில் அறிஞராகத் திகழ்ந்தார். அவர், தமிழ் தனித்தியங்கும் தன்மை உள்ள செம்மொழி என்பதனை நிறுவிய அறிஞர்களுள் ஒருவர் ஆவார்.[1] இவர் பழமொழிகள் கலந்த கட்டுரைகள் எழுதித் தமிழ் உரைநடைக்கு ஆழமும் மெருகும் தந்தவர் ஆவார். 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழின் உரைநடை வளம் செழிக்க பாடுபட்டவர்களுள் ஒருவர்.

திருமணம் கே. செல்வகேசவராய முதலியார்

பிறப்பும் இளமையும்

தொகு

சென்னைக்கு அருகிலுள்ள திருமணம் எனும் சிற்றூரில் 1864 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பெற்றோர் கேசவ சுப்பராய முதலியார் - பாக்கியம். இவருக்குப் பெற்றோர் இட்டபெயர் செல்வகேசவராயன் என்பதாகும். இவர் பச்சையப்பன் கல்லூரியில் இண்டர்மீடியட் படிக்கும்போதே, தமிழை விருப்பப் பாடமாக ஏற்றுப் படித்தார். படிப்பின்போது ஆங்கில இலக்கியங்களையும் தமிழ் இலக்கியங்களையும் ஒப்பீடு செய்து படித்தார். இருமொழி புலமைப்பெற்ற இவரைப் பச்சையப்பன் கல்லூரி ஆசிரியராக ஏற்றுக் கொண்டது. கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் பல திறமைமிக்க தமிழ் அறிஞர்களை உருவாக்கினார். இவர் உருவாக்கியவர்களுள் தெ. பொ. மீனாட்சிசுந்தரம், ரா. பி. சேதுப்பிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

தொகுத்துப் பதிப்பித்தவை

தொகு

செல்வகேசவர் தமிழ்ப் பழமொழிகள் பலவற்றைத் தொகுத்து அவற்றுக்கு இணையான ஆங்கிலப் பழமொழிகளையும் தொகுத்து இணைப் பழமொழிகள் என்னும் நூலை 1898 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.

பதிப்பாசிரியர்

தொகு

இவர் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான முன்றுறையரையனாரால் இயற்றப்பட்ட பழமொழி என்னும் நூலைப் பழைய உரையோடு சந்தி பிரித்துப் பதிப்பித்தார். மேலும் பெருவாயின் முள்ளியார் இயற்றிய ஆசாரக்கோவை, சமண மதத்தைச் சார்ந்த முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம், வீர கவிராயர் இயற்றிய அரிச்சந்திர புராணம், குசேலோபாக்கியம் ஆகிய நூல்களையும் பதிப்பித்தார்.

எழுதிய நூல்கள்

தொகு
  1. கம்பநாடர் (1902)
  2. கண்ணகி சரித்திரம் (1905)
  3. குசேலர் சரித்திரம்
  4. தமிழ் (1904
  5. திருவள்ளுவர் (1904)
  6. வியாசமஞ்சரி
  7. தமிழ்
  8. அக்பர்
  9. இராபின்சன் குருசோ
  10. மாதவ கோவிந்தரானடே
  11. பஞ்ச லட்சணம். முதலிய பல நூல்களை எழுதியுள்ளார்.

மொழியியற் கட்டுரைகள்

தொகு

செல்வகேசவர் தமிழ்மொழி வரலாறு என்னும் தலைப்பில் 15 கட்டுரைகளை சுதேசமித்திரன் இதழில் எழுதியிருக்கிறார்.

இலக்கணம்

தொகு

பஞ்சலட்சணம் என்னும் தமிழ் இலக்கண நூலை 1903ஆம் ஆண்டில் மாணவர்களுக்குப் புரியும் வண்ணம் எளியநடையில் இயற்றி இருக்கிறார்.[1]

தமிழின் முதற்சிறுகதை

தொகு

இலக்கியத்தில் மேனாட்டுமுறைகளை பரிசோதித்துப் பார்க்கும் புதுமைக் குணம் உடையவராக இருந்த இவர் வ. வே. சு. ஐயர் குளத்தங்கரை அரசமரம் என்னும் சிறுகதையை எழுதுவதற்கு முன்னரே சிறுகதை எழுதினார்.[1] அதுவே தமிழின் முதற்சிறுகதை என்கிறார் கமில் சுவெலபில். இவருடைய சிறுகதைகள் அபிநவக் கதைகள் என்னும் நூலாக வெளிவந்துள்ளன.

புதினம்

தொகு

சுப்பிரமணிய பாரதியார் ஆசிரியராக இருந்த வார இதழான இந்தியா இதழில் கற்பலங்காரம் என்னும் புதினத்தைச் செல்வகேசவர் எழுதி இருக்கிறார்.

குடும்பம்

தொகு

செல்வகேசவருக்கு பரிமேலழகர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் என்னும் மூன்று மகன்கள் இருந்தனர்.

மறைவு

தொகு

தமிழில் பெரும்புலமைப் பெற்றுத் திகழ்ந்த செல்வகேசவராயர் அவர்கள் 1921 ஆம் ஆண்டு மறைந்தார்.

உசாத்துணைகள்

தொகு
  • மு.வரதராசன், 'தமிழ் இலக்கிய வரலாறு'-சாகித்திய அகாதெமி வெளியீடு 1994, பக்கம் 322.
  • கழகப்பைந்தமிழ் இலக்கிய வரலாறு - திருநெல்வேலி சைவசித்தாந்தக் கழகம் வெளியீடு.
  • குன்றக்குடி பெரியபெருமாள், 'தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள்- மதிநிலையம்.
  • தமிழ் (தமிழ் மொழி, தமிழர் நிலை) - T. செல்வக்கேசவராய முதலியார் https://www.noolulagam.com/product/?pid=12393
  • கம்பர் Kambar: An Essay - செல்வக்கேசவராய முதலியார், T https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZIy&tag=%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D#book1/
  • கம்பர் Kambar: An Essay - செல்வக்கேசவராய முதலியார், T https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZY6juIy
  • கேட்கலாம் திருமணம் செல்வக்கேசவராய முதலியார் http://tamilonline.com/mobile/article.aspx?aid=7972
  • திருமணம் செல்வக்கேசவராய முதலியார் - படைப்புத்திறன் http://anichchem.blogspot.com/2020/08/blog-post_0.html?m=1
  • அபிநவக் கதைகள் (Tamil Edition) by செல்வக்கேசவராய முதலியார் https://www.amazon.in/dp/B088T6Q2ZQ/ref=cm_sw_r_wa_awdo_PQZPG18Z9DKMXWHGE4YR
  • திருமணம் செல்வக்கேசவராய முதலியார் https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZY9kZIy#book1/
  1. 1.0 1.1 1.2 வைத்தியநாதன் கே, தினமணி செம்மொழிக்கோவை 2010, சென்னை, பக்.277