சேந்தன் அமுதன் (கதைமாந்தர்)

பொன்னியின் செல்வனில் வரும் கதாபாத்திரம்

சேந்தன் அமுதன் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற வாணி அம்மையின் மகன் ஆவார். கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிவபக்தியிலும் சிறந்தவனாக விளங்குவதாகவும், கதாநாயகன் வல்லவரையன் வந்தியத்தேவனின் நண்பனாகவும், பூங்குழலி எனும் படகோட்டி பெண்ணை காதல் செய்பவனாகவும் சேந்தன் அமுதனின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சேந்தன் அமுதன்
பொன்னியின் செல்வனின் கதை மாந்தர்
சேந்தன் அமுதனுக்கு மன்னர் மகுடம் சூட்டும் அருள்மொழிவர்மன் (ஓவியம்:மணியம்)
உருவாக்கியவர் கல்கி
வரைந்தவர்(கள்) மணியம், வினு, மணியம் செல்வன்
தகவல்
தொழில்சிவ கைங்கரியம்
குடும்பம்கண்டராதித்தர். சேந்தன் அமுதன் வாணி அம்மை செம்பியன் மாதேவி
துணைவர்(கள்)பூங்குழலி
மதம்சைவம்
தேசிய இனம்சோழ நாடு

பொன்னியின் செல்வனில் சேந்தன் அமுதன்

தொகு

முதல் பகுதியான புது வெள்ளத்தில் வாய் பேச இயலாத வாணி அம்மையின் மகனாக, சிவ கைங்கரியங்கள் செய்பவராக சேந்தன் அமுதன் வருகிறார். வல்லவராயனுடன் சந்திப்பு ஏற்பட்டு அவன் தங்குவதற்கு இடம் தருகிறார். அவனிடம் தன் அத்தை மகள் பூங்குழலி பற்றி விவரிக்கிறார்.

இரண்டாம் பகுதியான சுழல்காற்றில் பழுவேற்றரையர் காவல் ஆட்கள் சேந்தன் அமுதனை வல்லவராயனுக்கு தங்குமிடம் தந்து உதவியதற்காக கைது செய்து சிறையில் அடைக்கின்றார்கள். வைத்தியரின் மகனை விடுவிக்க வரும் குந்தவையும், வானதியும் சேந்தன் அமுதனை சந்தித்து வல்லவரையன் இலங்கைக்கு சென்றதை அறிகின்றார்கள். அத்துடன் சேந்தன் அமுதனையும் விடுதலை செய்கிறார்கள். இலங்கையிலிருந்து பூங்குழலி அழைத்துவருகின்ற இளவரசரை நாகப்பட்டினத்திற்கு அழைத்து செல்ல குந்தவை சேந்தன் அமுதன் மூலம் சொல்லியனுப்புகிறாள். பூங்குழலியும், சேந்தன் அமுதனும் சூடாமணி விகாரத்தில் அருள்மொழியை சேர்க்கின்றார்கள். அவர் குணமடைந்ததும் நந்தி மண்டபத்திற்கு அழைத்துவந்து குந்தவையை சந்திக்க செய்கின்றார்கள்.

சேந்தன் அமுதன் குதிரை மீதிருந்து கீழே விழுந்த படியால் உடல்நலமின்றி இருக்கிறார். அவருடைய அன்பினை கண்ட பூங்குழலி சக்கரவர்த்தினியாக வாழவேண்டும் என்ற எண்ணத்தினை மாற்றிக் கொண்டு சேந்தன் அமுதனை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கின்றாள். அந்நேரத்திற்கு செம்பியன் மாதேவியும், வாணி அம்மையும் வருகின்றார்கள். அவர்களிடம் ஆசி பெற்றுக் கொள்கிறார்கள் சேந்தன் அமுதன் - பூங்குழலி இணையர். சிறிது நேரத்திற்கு பிறகு குடிசைக்கு வெளியேயிருந்து பினாகபாணி வேலினை சேந்தன் அமுதன் மீது பாய்ச்ச பார்க்கிறான். அதனை வந்தியத்தேவன் தடுக்க முற்படும்போது, காயமுறுகிறார். அவரை சேந்தன் அமுதனும், பூங்குழலியும் காப்பாற்ற முற்படுகின்றார்கள். அங்கே திருமலையப்பன் வந்து வந்தியத்தேவனை அரண்மனைக்கு அழைத்து செல்ல சேந்தன் அமுதனை இளவரசராக நடிக்க வைக்கிறார்.

தஞ்சை அரண்மனையில் சுந்தர சோழரிடம் தன் மகனைக் காணவில்லையென செம்பியன் மாதேவி கவலை தெரிவிக்கின்றார். அவரைத் தான் பத்திரமாக வைத்திருப்பதாகக் கூறி, சேந்தன் அமுதனை அழைத்துவருகிறார் முதன் மந்திரி அநிருத்தர். சேந்தன் அமுதனைக் கண்ட செம்பியன் மாதேவி அன்புப்பெருக்குடன் மகனே என்று அழைக்கின்றார். இதற்காகவே தான் இங்கு வந்ததாகவும், அரசாட்சியில் உரிமை வேண்டாம் எனவும் சேந்தன் அமுதன் கூறுகிறார். தான் சோழ இளவரசர் என்று தெரிந்திருந்தும் பூங்குழலியை அரசாள்பவனையே திருமணம் செய்வேன் என்ற கொள்கையிலிருந்து மாற்றி சிவபெருமானுக்கு தொண்டு செய்ய சம்மதிக்க வைத்ததாகவும் கூறுகிறார். அவருடைய சிவபக்தியை கண்டு சிவஞான கண்டராதித்தருக்கு பிறந்த பிள்ளை இதுவென அவையில் உள்ளோர் அனைவரும் முடிவு செய்கிறார்கள்.

கண்டராதித்தனாருக்கும், அவருடைய துணைவியார் செம்பியன்மாதேவிக்கும் பிறந்த பிள்ளைதான் சேந்தன் அமுதன் என்ற உண்மை தெரியவருகிறது. அருள்மொழிவர்மனுக்கு மணிமுடி சூட்டுவதற்கு முடிவுசெய்யப்பட்டு, விழா எடுக்கிறார்கள். ஆனால் அருள்மொழிவர்மனுக்கு கிரீடம் சூட்டுகிறபோது, கிரீடத்தை வாங்கி எடுத்துக்கொண்டுபோய் கண்டராதித்தன் மகன் சேந்தன் அமுதன் தலையில் முடியைச் சூட்டி, ‘சோழ மாமன்னர் இவர்தான்’ என்று அறிவிக்கிறார். சேந்தன் அமுதனே உத்தம சோழனாக ஆட்சி செய்ததாக புதினம் விளக்குகிறது.[1]

நூல்கள்

தொகு

சேந்தன் அமுதனை கதைபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.

மேற்கோள்கள்

தொகு
  1. "பொன்னியின் செல்வன் . வைகோ திறனாய்வு". Archived from the original on 2012-09-14. பார்க்கப்பட்ட நாள் 2012-09-25.

வெளி இணைப்புகள்

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு