சேர்ந்திசை
சேர்ந்திசை (orchestra) என்பது பல இசைக் கலைஞர்கள் பல்வேறு இசைக்கருவிகளை நேர்த்தியாக, இணக்கமுடன், வாசித்து செவிக்கினிய இசையை உருவாக்கும் குழுவையும், அவ் இசையையும் குறிக்கும். சேர்ந்திசை பல பண்பாடுகளிலும் பல்வேறுவகைப்பட்ட இசை முறைகளாக இருந்தாலும், பெரும்பாலும் இது ஒரு மேற்கத்திய பண்பாட்டு இசைவகை. மற்ற பண்பாட்டு சேர்ந்திசைகள் பற்றி கீழே காணலாம். மேற்கத்திய சேர்ந்திசை பெரும்பாலும் ஓர் அரங்கிலே வயலின், புல்லாங்குழல், பித்தளை என்று அழைக்கபப்டும் காற்றிசைக் கருவிகள் (ஊதுகொம்புகள்), ஒரு சில தாளக்கருவிகள் என பல இசைக்கருவிகளைக் கொண்டு, பலர் வாசிக்க ஒரு நடத்துனரால் வழிநடத்தி உருவாக்கி நிகழ்த்தும் இசை, இசைநிகழ்ச்சி. திறந்த வெளிகளிலும், அல்லது திறந்தவெளி அரங்குகளிலும் சில நேரங்களில் நிகழ்வதுண்டு.[1][2][3]
சொல் வரலாறு
தொகுஆர்க்கெசுட்ரா (orchestra) என்னும் ஆங்கிலச் சொல்லும் பிற ஐரோப்பிய மொழிச் சொல்வடிவங்களும் கிரேக்க மொழிப் பெயராகிய ஓர்க்கெஸ்ட்ரா (Gk. orkhestra) என்னும் சொல்லில் இருந்து பெற்ற இலத்தீன் மொழிச்சொல் orchestra என்பதன் வழியாகப் பெற்றது. கிரேக்க மொழியில் இச்சொல்லின் பொருள் பலர் சேர்ந்து குழுவாக நடனமாடும் நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்தின் மேடைக்கு அருகே அரைவட்ட வடிவில் அமைந்த முன் பகுதி என்பதாகும். ஓர்க்கைஸ்தை (orcheisthai) என்றால் நடனம் ஆடு (வினை) + த்ரா (tra) என்றால் இடம் என்று பொருள். இன்று, பல்வேறு இசைக்கருவிகளை இயக்கும் கலைஞர்கள் ஏறத்தாழ அரைவட்டமாக அமைக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்து, அவ் அரைவட்டத்தின் மையப் புள்ளியருகே நின்று, நடத்துனர் வழிநடத்தும் இசை நிகழ்ச்சிக்கும், இசைக்குழுவுக்கும் ஆர்க்கெசுட்ரா என்று பெயர். தமிழில் இதனை சேர்ந்திசைக்குழு அல்லது சேர்ந்திசை என்று கூறுகிறோம். இதனை இசைக்கருவியக் குழுமம் என்றும் கூறலாம்.
மேற்கத்திய சேர்ந்திசையின் வரலாறும் குழு அமைப்பும்
தொகுஇவ்வகையான இசை, இசை இயற்றல், வாசிப்பு பெரும்பாலும் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி், 19 ஆவது நூற்றாண்டுகளில் தோன்றி வளர்ச்சி அடைந்தது. 21 ஆவது நூற்றாண்டின் தொடக்கம் வரை அதிக மாற்றமில்லாமல் நிகழ்ந்து வருகின்றது. 15ஆவது 16 ஆவது நூற்றாண்டுகளில் இத்தாலிய வயனின்வகை நரம்பு/கம்பி வகைக் கருவிகளை செய்வதில் மிகுநேர்த்தி அடைந்தது சேர்ந்திசை வளர்ச்சி வரலாற்றில் ஒரு முக்கிய முன்கூறாகும். மேற்கத்திய சேர்ந்திசையின் இன்றியமையாத கூறு பல வயலின் கருவிகளை ஒருசேர இசைப்பதாகும். வயலின்கள் தவிர பல்வேறு, புல்லாங்குழல், கிளாரினெட், ஓபோ போன்ற குழல்வகை காற்றிசைக்கருவிகளும், விரிவாய் பித்தளைக் கொம்பு வகைக் கருவிகளும், சில தாளவகைக் கருவிகளும் இருக்கும். முதலில் ஓப்பரா போன்ற நிகழ்வுகளில் வாயால் பாடுவதற்குப் பின்னணியாக சேர்ந்திசை இருந்தாலும் 1700களில் சேர்ந்திசைக்கென்று யோஃகான் செபாசுட்டின் பாஃக், அந்தோனியோ விவால்டி, கியார்கு பிரெடெரிக் கெண்டல் போன்றோர் தனி இசை உருப்படிகள் இயற்றினர்கள். ஒரு சிறு சேர்ந்திசைக்குழுவில் 50 அல்லது அதற்கும் குறைவான இசைக்கருவியர்கள் இருப்பார்கள். இதனை சேம்பர் (அரங்கு) சேர்ந்திசை (குழு) என்று கூறுவர். ஒரு நிறைவான சேர்ந்திசைக் குழுவில் ஏறத்தாழ 100 இசைக்கருவியர்கள் இருப்பர். இதனைப் பெரும் ஒத்தினிய சேர்ந்திசை (குழு) (symphony orchestra or philharmonic orchestra) என்பர். ஆங்கிலப் பெயர்களின் உள்ள வில்லார்மோனிக் (philharmonic) அல்லது சிம்ஃவனி (symphony ) என்னும் முன்னொட்டுகளுக்கு இடையே, தெளிவாக வரையறை செய்த, வேறுபாடுகள் ஏதும் இல்லை. ஆனால் ஒரே நகரத்தின் பெயரால் வழங்கும் பல ஒத்தினிய சேர்ந்திசைக்குழுக்களை ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்திக் காட்டப் பயன்படுகின்றன. எடுத்துக்காட்டாக: இலண்டன் சிம்ஃவனி ஆர்க்கெசுட்ரா (London Symphony Orchestra) வேறு இலண்டன் வில்லார்மோனிக் ஆர்க்கெசுட்ரா (London Philharmonic Orchestra) வேறு. ஆனால் இரண்டுமே பெரிய ஒத்தினிய சேர்ந்திசைக் குழுக்கள்தாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Orchestra". (Online). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். (Subscription or participating institution membership required.)
- ↑ Vincent, Michael (4 August 2014). "The difference between chamber, philharmonic, and symphony orchestra". Ludwig van Toronto. Classical 101. பார்க்கப்பட்ட நாள் 21 September 2020.
- ↑ Kennedy, Michael; Bourne-Kennedy, Joyce (2007). "Conducting". Oxford Concise Dictionary of Music (5th ed.). Oxford, England: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-920383-3 – via Internet Archive.