சைவ சமயப் பிரிவுகள்

சைவ சமயப் பிரிவுகள் இந்து சமயத்தின் ஆறு கிளைநெறிகளில் ஒன்றான சைவ சமயத்தின் உட்பிரிவுகளைக் குறிக்கும். இந்து சமயக் கிளைநெறிகள் எல்லாமே தமக்குள் தத்துவார்த்த ரீதியிலும் மரபுகளிலும் தமக்குள் வேறுபடும் நூற்றுக்கணக்கான உட்பிரிவுகளைத் தம்வசம் கொண்டவை. சைவத்திலும் இப்படி நூற்றுக்கணக்கான பிரிவுகள் பல்லாண்டுகளாக நிலவிவந்திருக்கின்றன. சமகாலத்தில் ஆறு சைவ உள்நெறிகளே நிலைத்து நிற்கின்றன.

வரலாறு

தொகு

சைவ சமயத்தின் மிகப்பழைமையான கூறு, மிகப்பழங்காலத்திலிருந்தே நிலவி வந்த பாசுபதம் ஆகும். உலகையும் உலக இன்பங்களையும் துறந்து துறவற வாழ்க்கை வாழ்பவர்களாகவே, மிகப்பழைமையான பாசுபதர்கள் விளங்கினார்கள். எனினும் கிறிஸ்துவுக்குப் பிந்திய குறிப்புகள் எல்லாம், சைவத்தில் நான்கு முக்கிய பிரிவுகள் உருவாகி விட்டதைக் குறிப்பிடுகின்றன. தன் பிரம்ம சூத்திரப்பேருரையில் ஆதி சங்கரர் (கி.பி 7ஆம் நூற்றாண்டு), சிவனை வழிபடுபவர்களை மாகேசுவரர்கள் என்று பொதுவாகச் சொல்லும் அதேவேளை, அவருக்கு உரை வடிக்கும் வாசஸ்பதி மிஸ்ரர் (கி.பி 10ஆம் நூற்.) சைவர், பாசுபதர், காபாலிகர், காருணிகர் எனும் நான்கு சைவப்பிரிவுகளைக் குறிப்பிடுகிறார்.[1] புராணங்களும் சற்று முந்தைய கால தாந்திரீக இலக்கியங்களும் கூட, தத்தமக்குள் சிற்சில இடங்களில் மாறுபட்டாலும், இப்படி நான்கு முக்கிய வகைகளைப் பற்றியே குறிப்பிடுகின்றன. அவற்றை வருமாறு வகைப்படுத்தலாம்.[2]

நூல் காலம் (நூற்றாண்டு) பிரிவுகள்
ஸ்காந்த புராணம் 6[3] பாசுபதம், கங்காளம், காளாமுகம், மாவிரதம்
கூர்ம புராணம் (1) 8[4] பாசுபதம், சோமம், இலாகுடம்/வாதுளம்/இலாஞ்சனம் , வாமம், வைரவம்
கூர்ம புராணம் (2) 8 பாசுபதம், காபாலம், வாமம், வைரவம்
நாரத புராணம் 9-11[5] காபாலிகம், மாவிரதம், பாசுபதம், சித்தாந்தம்
சித்த சித்தாந்த பத்ததி 11-12 பாசுபதம், காபாலிகம், மாவிரதம், இன்னும் 5 பிரிவுகள்.
மல்காபுரக் கல்வெட்டு 13[6] பாசுபதம், காலானனம்,சிவ சாசனம், சைவம்

ஆகமக் குறிப்புகள்

தொகு

காமிகாகமம் (பொ.பி ஆறாம் நூற்.) சைவப்பிரிவுகளை மேல் (பரம்), கீழ் (அபரம்) என்று பிரித்து (பூர்வகாமிகம் 1:16)[7] , பர சைவத்தில், சைவம், பாசுபதம், லாகுலிகம், சோமசித்தாந்தம் எனும் நான்கு வகையுண்டு என்று வகைப்படுத்துகின்றது. அந்நான்கில் ஒன்றான சைவத்தை அது, வாமம் - தட்சிணம் - மிஸ்ரம் - சித்தாந்தம் என்று மேலும் நான்காக வகைப்பிரிக்கின்றது. (பூர்வகாமிகம் 1:17-19)[7]

இந்த வகைப்பாட்டைப் புரிந்துகொள்வதற்கு, சிவாகமங்களின் தந்திர அவதாரப் படலத்தில் கூறப்படுகின்ற ஒரு மரபுரை முக்கியமானது. சிவப்பரம்பொருளின் ஐந்து முகங்களிலிருந்தும் லௌகீகம் (இசைநூல், சிற்பநூல், மருந்துநூல் முதலியன), வைதீகம், அத்யாத்மிகம் (சாங்கியம், யோகம் முதலியன), ஆதிமார்க்கம் (கபாலிக நூல்கள்) , மந்திரதந்திரம் ஆகிய ஐந்துவகை நூல்கள் தோன்றியதாகவும், அவை முறையே பிரமன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் ஆகிய ஐந்தேவர்க்கும் அவர் உபதேசித்ததாகவும் அதிற் சொல்லப்படுகின்றது. சதாசிவர் தனக்குக் கிடைத்த மந்திரதந்திரங்களை தன் ஐந்து முகங்கள் மூலம், வாமம், தட்சிணம், சித்தாந்தம், காருடம், பூதம் எனும் ஐந்து வகை தந்திரநூல்களாகப் பூவுலகுக்கு அளித்ததாகவும் அது சொல்கின்றது.(பூர்வகாமிகம் 1:19-30)[7] இவற்றில் காருட - பூத தந்திரங்கள் அழிந்துவிட, வாம தந்திர நூல்கள் கம்போடியா, சாவகம் போன்ற இடங்களில் வழக்கில் இருந்ததாகத் தெரிகின்றது.[2] எஞ்சிய தட்சிண தந்திரங்கள் காசுமீர சைவத்துக்கும், சித்தாந்த நூல்கள், தென்னாட்டுச் சைவத்துக்கும் ஆதாரமாக அமைந்தன. காமிகம் முதலான சிவாகமங்கள், மந்திர தந்திரங்களில் சித்தாந்த வகைப்பாட்டில் வருபவை என்பது குறிப்பிடத்தக்கது.

சிவாகமங்களுக்குக் காலத்தாற் பிந்திய தட்சிண தந்திரங்கள், தென்கிழக்கு ஆசியாவுக்கு இடம்பெயர்ந்த வாமத்தையும் தவிர்த்துவிட்டு சைவம், உருத்திரம், பைரவம் என்று மூன்று சைவப்பிரிவுகளைக் குறிப்பிடுவதுடன், சிவாகமங்கள் 10ஐ சைவத்துக்கும், உருத்திர ஆகமங்கள் 18ஐ உருத்திரத்துக்கும், பைரவ அல்லது தட்சிண தந்திரங்கள் 64ஐ, பைரவத்துக்கும் உரிய நூல்களாகக் குறிப்பிடுகின்றது. இவ்வகைப்பாடு சைவ - உருத்திர ஆகமங்களை மொத்தமாக 28 சித்தாந்த ஆகமங்களாகப் பார்க்கும் வழக்கை இவை நிராகரித்திருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது.[2] எவ்வாறாயினும், இவ்வகைப்பாடு எந்த அளவுக்கு நடைமுறையில் இருந்தது என்பது சரியாகத் தெரியவில்லை.

இடைக்காலச் சைவப்பிரிவுகள்

தொகு

பொ.பி 14ஆம் நூற்றாண்டில் முழுமைபெற்ற தமிழ் மெய்கண்ட சாத்திரங்கள், அவற்றின் காலத்தில் வழக்கில் இருந்த 25 சமயங்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. இந்த 25இலும், அவை சார்ந்த சித்தாந்தம் தவிர்த்து, ஏனைய இருபத்துநான்கிலும், பன்னிரெண்டு, சைவப்பிரிவுகள் ஆகும். இவற்றை சித்தாந்த நூல்கள், அகச்சமயம் 6 என்றும் அகப்புறச் சமயம் 6 என்றும் வகைப்படுத்தி இருக்கின்றன.[8]

  • அகச்சமயங்கள் = பாடாணவாதம், பேதவாதம், சிவசமவாதம், சிவசங்கிராந்தம், ஈசுவர அவிகாரம், சிவாத்துவிதம்
  • அகப்புறச் சமயங்கள் = பாசுபதம், மாவிரதம், காபாலிகம், வாமம், வைரவம், ஐக்கியவாத சைவம்

சமகால சைவப் பிரிவுகள்

தொகு

பெருமளவு சைவ உட்பிரிவுகள் உருகியிணைந்தும், அருகியும், ஒழிந்தும் போக, இன்று எஞ்சியுள்ள சைவத்தை ஆறு வகைப்படுத்தி இனங்காண முடிகின்றது.[9]

  1. சித்தாந்த சைவம் - தென்னகத்தில் வழக்கிலுள்ள சைவம். சித்தாந்தம், சிவசாசனம் என்று பழையநூல்களில் குறிப்பிடப்படும் சைவப்பிரிவின் தொடர்ச்சியே தென்னகச் சைவம்.
  2. வீர சைவம் - கன்னடத்து இலிங்காயதம்.
  3. காசுமீர சைவம் - திரிகம், பிரக்கியபிஞ்ஞை, கௌலம் முதலான பழம்பெரும் மரபுகளின் தொகுப்பு. காசுமீர - நேபாளப் பகுதிகளில் வழக்கிலிருப்பது.
  4. சித்த சைவம் - நாத சைவம் என்றும் அறியப்படுவது. சித்தர்களின் கொடிவழியில் வந்தது.
  5. சிரௌத்த சைவம் - சிவாத்துவிதம் என்று அறியப்படுவது. வேதத்துக்கும் முன்னுரிமை அளிப்பது.
  6. பாசுபதம் - மிக அரிதாக வடநாட்டில் விளங்குவது. காபாலிகம், மாவிரதம், காளாமுகம் போன்றவற்றின் தொடர்ச்சியான நாகா -அகோரிகளையும் இவ்வகைப்பாட்டில் அடக்கலாம்.

மேற்கோள்கள்

தொகு
  1. சைவ மரபும் மெய்ப்பொருளியலும் நூல் பி. ஆர். நரசிம்மன் (சைவப்பிரிவுகள்)- பக்கம் 36
  2. 2.0 2.1 2.2 Mark S. G. Dyczkowski (1989). The Canon of the Saivagama and the Kubjika Tantras of the Western Kaula Tradition. Motilal Banarsidass.
  3. Richard D. Mann (2011). The Rise of Mahāsena. BRILL. p. 187. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789004218864.
  4. Rocher, Ludo (1986). The Puranas. Otto Harrassowitz Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3447025225.
  5. Hazra, Rajendra Chandra (1940). Studies in the Puranic Records on Hindu Rites and Customs. Motilal Banarsidass (1987 Reprint). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0422-7.
  6. M. Krishna Kumari (1990). Social and Cultural Life in Medieval Andhra. Discovery Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8171411029.
  7. 7.0 7.1 7.2 காமிகாகமம் முதற்பகுதி (PDF). தென்னிந்திய அர்ச்சகர் சங்கம். 1977.
  8. சேக்கிழார் (சிவக்கவிமணி - திரு.C.K. சுப்பிரமணிய முதலியார், B.A. உரை). திருத்தொண்டர் புராணம் எனும் பெரிய புராணம் - பகுதி 05. p. 1494.
  9. "Saivism: Six Schools". Himalayan Academy. March 1994. Archived from the original on 2015-09-06. பார்க்கப்பட்ட நாள் 12 ஆகத்து 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைவ_சமயப்_பிரிவுகள்&oldid=3556117" இலிருந்து மீள்விக்கப்பட்டது