நாத சைவம் அல்லது சித்த சித்தாந்தம் என்பது சைவ சமயத்தின் பிரிவுகளில் ஒன்று ஆகும்.நாஸ்தம், கோரக்க பந்தம், சித்தயோகி செம்பெருந்தாயம், ஆதிநாத செம்பெருந்தாயம், நாத மதம், சித்த மார்க்கம் என்பன இதன் வேறுபெயர்கள்.[1] கோரக்கர், மச்சேந்திரர் ஆகியோரால் இதன் குருபரம்பரை ஆரம்பமானதாக நம்பப்படுகின்றது.[2] இது திருக்கயிலையிலிருந்து நந்திநாதரிடம் கற்ற எட்டுச் சீடர்களின் வழியே பரப்பப்பட்ட மூலசைவத்தின் இன்னொரு வடிவம் என்றும் கொள்ளப்படுகின்றது.[3] நாத சைவத்தின் கோரக்கநாதர் மடம் உத்தரப்பிரதேசத்தில் உள்ளது.

நாத சைவம் கொண்டாடும் நவநாதசித்தர்கள்

தோற்றம்

தொகு
 
சலந்தரநாதர் எனும் நவநாத சித்தர். 1820 ஜோத்பூர் சித்திரம்

சைவ செம்பெருந்தாயங்களில் ஒன்றான நாத செம்பெருந்தாயம், "நாதரின்" வழி எனப் பொருள் பெறுவது. தனது தோற்றம், ஆதிநாதனான சிவனுடன் ஆரம்பமாவதாக இது கூறிக்கொள்கின்றது.[4] ஈசனிலிருந்து பல மகான்கள், சித்தர்கள் ஊடாக வந்த இச்சைவஞானம், இறுதியில் கோரக்கர் மற்றும் மச்சேந்திரர் ஆகியோர் மூலம், நவநாத சித்தர்கள் எனும் ஒன்பதின்மர் கொண்டு உலகுக்கு வெளிப்படுத்தப்பட்டதாக நம்பப்படுவதுடன், கோரக்கரின் காலம் கி.பி 11ஆம் நூற்றாண்டு எனப் பொதுவாகச் சொல்லப்படுகின்றது.[5] கோரக்கரையும் மச்சமுனிவரையும், "மகாசித்தர்" என்ற பெயரில் திபெத்திய பௌத்தர்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.[6]

மச்சேந்திர நாதர், கோரக்க நாதர், சலந்தரநாதர், இரேவண நாதர், நாகநாதர், ககினிநாதர், கிருஷ்ணபாதர், சரபதிநாதர் என்போர் நவநாத சித்தர் எனும் ஒன்பதின்மர் தொகுதியில் அடங்குகின்றனர்.[7] மச்சேந்திரரே ஆதிநாதனான ஈசனிடம் பாடம் கற்றவர் என்றும், அவர் கோரக்கரின் குரு என்றும், பின் கோரக்கரிலிருந்து ஏனைய நாதர்களூடாக நாத சைவம் வழிவழியாகக் கற்பிக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகின்றது.

சித்த சித்தாந்தம்

தொகு

நாத சைவத்தின் தத்துவக் கோட்பாடு, சித்த சித்தாந்தம் என்று அறியப்படுகின்றது. இது சித்தர்கள் மூலமே வழிவழியாகக் கடத்தப்படுவதால் இவ்வாறு கொள்ளப்படுகின்றது எனலாம். கோரக்கரால் இயற்றப்பட்ட "சித்தாந்த பத்ததி", "விவேக மார்த்தாண்டம்" கோரக்க சங்கிதை, யோக சிந்தாமணி என்பன முக்கியமான சித்த சித்தாந்த நூல்களாகக் கொள்ளப்படுகின்றன.[8] வாழும்போதே சீவன்முக்தியை அடைதல் என்பதே நாத சைவத்தின் முக்கியமான கோட்பாடு ஆகும். மேலும், ஹடயோகம், சமாதி போன்ற சாதனங்களில் சித்த சித்தாந்திகள் கூடிய கவனம் செலுத்தினர். காயசித்தி எனும் வழிவகையை வளர்த்தெடுத்து நீண்ட நாள் வாழ்வதும், சிலவேளைகளில் மரணத்தை வெல்வதும் சித்த சித்தாந்திகளின் குறிக்கோள்களில் முக்கியமானவையாக இருந்தன.

நீரும் குமிழியும் போல, சிவம் சீவன் இடையிலான தொடர்பு என சித்த சைவ நூல்கள் விவரிக்கின்றன. புடவியின் முதற்காரணியும் நிமித்தகாரணியும் சிவமே. சிவத்துடன் தன் இருப்பை உணரும் "சமாதி" எனும் யோகநிலை மூலம் ஒரு யோகி, ஞானம் அடையலாம். அதுவே வீடுபேறும் ஆகும். இவ்வீடுபேறு பெற்றோர் சீவன்முக்தர்கள் ஆவர். சில இடங்களில் சங்கர அத்துவிதம் போலவும், சில இடங்களில் சித்தாந்த சைவத்தை ஒத்தும், சித்த சித்தாந்தத்தின் கோட்பாடுகள் காணப்படுகின்றன.[1]

இஞ்சேகிரி மடம்

தொகு
 
நிசார்க்கதத்த மகராஜ்

குரு-சீடப் பரம்பரையிலேயே இஞ்ஞான நெறியானது தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வந்திருக்கின்றது. நேபாளம், மராட்டியம், குஜராத் பகுதிகளில் அதிக நாத சைவர்கள் வாழ்கின்றார்கள். கடந்தநூற்றாண்டில் இஞ்சேகிரி நாத சைவ மடத்தைச் சேர்ந்த "நிசார்க்கதத்த மகராஜ்" (1897 – 1981) எனும் பெருமகனாரால், இந்நெறிக்குப் புத்துயிரூட்டப்பட்டதைத் தொடர்ந்து வடநாட்டில் இன்றும் அது நீடித்து நிலைத்துநிற்கின்றது. சாக்தர்கள் அல்லது தாந்திரீகர்கள் என்று தவறாகக் கருதப்படுவோரையும் சேர்த்து சுமார் ஏழரை இலட்சம் சித்த சித்தாந்த - நாத சைவர்கள் வாழ்கின்றனர்.[1] இஞ்சேகிரி மடம், நாத சைவத்துடன் மாத்திரமன்றி, வீரசைவத்துடனும் நெருங்கிய தொடர்பு கொண்டதாகும்.[9]

தமிழ்த் தொடர்பு

தொகு

இலங்கையின் யோகர் சுவாமியின் சீடரும் அமெரிக்க ஹவாய் தீவில் சைவ சித்தாந்த ஆதீனத்தை நிறுவியவருமான சிவாய சுப்ரமணியசுவாமி, யோகர் சுவாமிகள், நாத சைவத்தின் ஒரு கிளையின் வாரிசு என உறுதி கூறுகின்றார். இமயத்திலிருந்து வந்த ஒரு குருதேவர் மூலம் வழங்கப்பட்ட தமது செம்பெருந்தாயம் "நந்திநாத செம்பெருந்தாயம்" என்றும், இது நாத சைவம் அல்லது "ஆதிநாத செம்பெருந்தாயத்தின்" இன்னொரு கிளை என்றும் அவர் தன் நூல்களில் குறிப்பிடுகின்றார். ஆதிநாத செம்பெருந்தாயம் ஈசனால் நேரடியாக உபதேசிக்கப்பட்டது என்றும், நந்திநாத செம்பெருந்தாயம் நந்திதேவர் மூலம் திருமூலர் முதலான எட்டுச்சீடர்களுக்கு வழங்கப்பட்டது என்றும் சொல்லப்படுகின்றது.[10][11]

இது தவிர, நவநாத சித்தருக்கும் தமிழ் வழக்கு பதினெண் சித்தருக்குமான தொடர்பும் சிந்திக்கத்தக்கது. கோரக்கர், மச்சேந்திரர், இரேவண சித்தர் போன்றோர் தமிழ் வழக்கிலும் முக்கியமான சித்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்துக்குச் சிறப்பான சித்தாந்த சைவத்தை விட, தமிழகத்துச் சித்தர் மரபுக்கும் நாத சைவத்துக்குமே நெருங்கிய தொடர்பு இருப்பதுபோல் தென்படுகின்றது. குறிப்பாக மகா அவதார் பாபாஜியை சித்த மரபுடன் இணைத்து நிற்கும் போக்கைக் காணமுடிகின்றது.[12]

வெளி இணைப்புகள்

தொகு

உசாத்துணைகள்

தொகு
 1. 1.0 1.1 1.2 "Siddha Siddhanta Part 2". MISA. பார்க்கப்பட்ட நாள் 2 ஆகத்து 2016.
 2. David Gordon White (1998). The Alchemical Body: Siddha Traditions in Medieval India. University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0226894991.
 3. Sanyasins of Hawaii Adheenam (2005). Merging with Siva pocketbook. Himalayan Academy Publications. p. 460. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781934145111.
 4. Kamal Prashad Sharma (2001). Maṇimahesh Chambā Kailāsh. p. 78. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8173871183.
 5. Pradip Kumar Bandyopadhyay (1992). Nātha cult and Mahānād, a study in syncretism. p. 42.
 6. Keith Dowman (2007). A Buddhist Guide to the Power Places of the Kathmandu Valley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9937506026.
 7. Frydman, Maurice (1987). Navanath Sampradaya. In: I Am That. Sri Nisargadatta Maharaj,.
 8. R. S. Bajpai (2002). The splendours and dimensions of yoga, Vol II. Atlantic Publishers and Distributors. p. 525. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788126900923.
 9. "Bhausaheb Maharaj". Archived from the original on 2018-10-20. பார்க்கப்பட்ட நாள் 1 ஆகத்து 2016.
 10. sadhguru Sivaya Subramuniya Swami (2001). Living with Siva: Hinduism's Contemporary Culture. Himalayan Academy. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0945497989.
 11. Satguru Sivaya Subramuniyaswami (2001). Dancing with Siva: Hinduism's Contemporary Catechism. Himalayan Academy. p. 258. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 094549789X.
 12. Marshall Govindan (1991). Babaji and the 18 Siddha Kriya Yoga Tradition. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1895383005.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாத_சைவம்&oldid=3689127" இலிருந்து மீள்விக்கப்பட்டது