சோபிஸ்டு

இளம் அரசியல்வாதிகள் மற்றும் பிரபுக்களுக்கு "அறம்" கற்பித்த பண்டைய கிரேக்க ஆசிரியர், பெரும்பால

சோஃபிஸ்டு (Sophist, கிரேக்கம்: σοφιστής‎ , sophistes ) என்பவர்கள் பண்டைய கிரேக்கத்தில் கிமு ஐந்தாம் மற்றும் நான்காம் நூற்றாண்டுகளில் ஆசிரியராக இருந்தவர்களாவர். மெய்யியல், சொல்லாட்சி, இசை, தடகளம் (உடல் கலாச்சாரம்), கணிதம் போன்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள். அவர்கள் தார்மீக நல்லொழுக்கம் போன்றவற்றை முக்கியமாக இளம் அரசியல்வாதிகள் மற்றும் பிரபுக்களுக்கு கற்பித்தனர்.

சொற்பிறப்பியல்

தொகு

சோபிஸ்டு என்ற சொல்லானது கிரேக்கச் சொல்லான σοφός ( சோபோஸ், புத்திசாலி) பெயர்ச்சொல் σοφία ( சோபியா, ஞானம்) உடன் தொடர்புடையது. ஒமரின் காலத்திலிருந்தே இது பொதுவாக தொழில் அல்லது கைவினைத் துறையில் நிபுணரான ஒருவரைக் குறிக்கிறது. தேரோட்டிகள், சிற்பிகள், இராணுவ வல்லுனர்களை அவர்களின் தொழில் திறமைக்காக சோபோய் என்று குறிப்பிடப்பட்டனர். இந்தச் சொல் படிப்படியாக பொது ஞானம் குறிப்பாக அரசியல், நெறிமுறைகள் மற்றும் நாட்டு நிர்வாகம் போன்ற மனித விவகாரங்களில் உள்ள ஞானத்தை குறிப்பதாக ஆனது. கிமு 7 மற்றும் 6 ஆம் நூற்றாண்டின் கிரேக்க ஏழு முனிவர்களுக்கு ( சோலோன் மற்றும் தேல்ஸ் போன்றவர்) கூறப்பட்ட பொருள் இதுவாகும். மேலும் இது எரோடோடசின் வரலாறுகளில் காணப்படுவதாகும்.

வரலாறு

தொகு

கிமு 5 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில், குறிப்பாக ஏதென்சில், "சோஃபிஸ்ட்" என்பது, பல கலை வல்லுநர்கள் குறிப்பாக வானவியல், கணிதம், பூகோளம், வரலாறு, மெய்யியல் போன்றவற்றைத் தெரிந்தவர்களைக் குறித்தது. அவர்கள் மக்கள் அவைகளிலும், நீதிமன்றங்களிலும் தங்கள் நோக்கங்களை அடைய சொல்லாட்சியைப் பயன்படுத்திய அறிவுஜீவிகளின் வகுப்பைக் குறிப்பதாக அமைந்தது. பொதுவாக சோபிஸ்டுகள் ஊர்வூராக பயணித்து கற்பித்தனர். இவர்கள் அரசியலிலும் மிகுந்த செல்வாக்கு கொண்டவர்களாக இருந்தனர். "எவ்வாறாயினும், சோஃபிஸ்டுகள் பொதுவாக ஒரு முக்கியமான தன்மையைக் கொண்டிருந்தனர்: அவர்கள் எதைச் செய்தாலும் அல்லது தெரியாது என்று கூறினாலும், எந்த சொற்கள் பார்வையாளர்களை மகிழ்விக்கும் அல்லது ஈர்க்கும் என்பதைப் பற்றிய சிறந்த புரிதல் அவர்களுக்கு இருந்தது." [1] அதனால் நாவலர்களாக ஆகவேண்டும் என்ற ஆசை இளைஞர்களிடையே எழுந்தது. அந்த காலகட்டத்தில் நகரம் செழித்தோங்கிய காலமாக இருந்ததால் இளைஞர்களின் ஆசையை நிறைவேற்ற சோஃபிஸ்டுகள் ஏதென்சுக்குக் கற்பிக்க வந்தனர். அலங்காரமாகவும், சாதுரியமாகவும் பேசுபவர்களுக்கு இது நல்ல வேலைவாய்ப்பாக இருந்தது. மேலும் அவர்கள் இதனால் புகழையும் நல்வாய்ப்பையும் பெற்றனர். புரோட்டோகோராஸ் பொதுவாக இந்த தொழில்முறை சோஃபிஸ்டுகளில் முதன்மையானவராகக் கருதப்படுகிறார். மற்றவைகளில் கோர்கியாஸ், பிரோடிகஸ், ஹிப்பியாஸ், திராசிமாச்சஸ், லைகோஃப்ரான், காலிகிள்ஸ், ஆன்டிஃபோன், கிராட்டிலஸ் ஆகியோர் அடங்குவர். ஒரு சில சோஃபிஸ்டுகள் எல்லா கேள்விகளுக்கும் தங்களால் பதில்களைக் கண்டுபிடிக்க முடியும் என்று கூறினர். இவர்கள் ஊர் ஊராக சென்று கற்பித்தனர். தங்கள் உழைப்புக்கு ஒரு தொகையை ஊதியமாகவும் பெற்றனர். இதனால் பிற்காலத்தில் பிளேட்டோ காலத்திலிருந்து கெட்டப் பெயர் ஏற்பட்டது. இவர்களில் ஒரு சிலர் தங்களின் நாவன்மையால் நல்லதை கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் திரித்துக் காட்டுபவர்களாக இருந்தனர். இதனால் இவர்கள் இளைஞர்களை கெடுக்கிறார்கள் என்ற பழியும் உண்டானது. அவ்வாறு ஒருசிலர் இருந்தாலும் பலர் பேரறிவு படைத்தவர்களாகவும், பல புதிய சிந்தனைகளை உலகிற்கு வழங்கியர்களாகவும் இருந்தனர். இந்த சோஃபிஸ்டுகளில் பெரும்பாலோர் முதன்மையாக அவர்களின் எதிரிகளின் (குறிப்பாக பிளேட்டோ மற்றும் அரிசுடாட்டில் ) எழுத்துக்கள் மூலமாகவே அறியப்படுவதால், அவர்களின் நடைமுறைகள், போதனைகள் குறித்த பக்கச்சார்பற்ற பார்வையைப் பெறுவதைக் கடினமாக்குகிறது.

குறிப்புகள்

தொகு
  1. Plato protagoras, introduction by N. Denyer, p. 1, Cambridge University Press, 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோபிஸ்டு&oldid=3434439" இலிருந்து மீள்விக்கப்பட்டது