மிலேத்தசின் தேலேசு (Thales of Miletus, கிரேக்க மொழி: Θαλῆς (ὁ Μιλήσιος), தேலேசு (Thalēs; /ˈθlz/, தேலிஸ்; அண். கிமு 624 – அண். கிமு 546) என்பவர் அனத்தோலியாவில் மிலீட்டஸ் நகரைச் சேர்ந்த சாக்கிரட்டீசுக்கு முந்திய கிரேக்க மெய்யியலாளர் ஆவார். இவர் கிரேக்கத் தொன்மத்தின் ஏழு ஞானிகளுள் ஒருவராகக் கணிக்கப்படுகிறார். கிரேக்க மெய்யியலில் இவர் முதன்மையானவர் எனக் குறிப்பாக அரிசுட்டாட்டில் போன்றோர் கருதினர்.[1] கிரேக்கத் தன்னியல்பு பொருள்முதல் வாத மெய்யியற் பள்ளியைத் தொடங்கி வைத்தவரும் இவரே. இயற்கையின் தொன்முதல் நெறிமுறை ஆகவும் பொருண்மத்தின் தன்மையாகவும் நீரை இவர் கருதியதாக அரிசுட்டாட்டில் கூறுகிறார். எனவே இவர்தான் நிலவும் அனைத்துப் பண்டங்களுக்குமான அடிப்படையைப் புலன்களால் உணரமுடிந்த ஒற்றைப் புறநிலை நெறிமுறையால்முதலில் விளக்கியவராவார்.

தேலேசு
Thales
Illustrerad Verldshistoria band I Ill 107.jpg
பிறப்புஅண். கிமு 624
இறப்புஅண். கிமு 546
காலம்சாக்ரட்டீசுக்கு முந்திய மெய்யியல்
பகுதிமேற்குலக மெய்யியல்
பள்ளி
முக்கிய ஆர்வங்கள்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்

தேலேசு இயற்கை நிகழ்வுகளைத் தொன்மத்தைப் பயன்படுத்தாமல் விளக்கினார். பெரும்பாலும் பிற அனைத்துச் சாக்ரட்டீசுக்கு முந்திய மெய்யியலாருமே அறுதி பொருளையும் மாற்றத்தையும் உலக நிலவலையும் இவரைப் பின்பற்றித் தொன்மம் சாராமலே விளக்கினர். இந்த தொன்மம் தவிர்த்தல் போக்கு அறிவியல் புரட்சியை ஏற்படுத்தியது. இவர்தான் அனைத்துக்குமான பொது நெறிமுறையையும் கருதுகோள்களையும் உருவாக்கிப் பயன்படுத்தியவர். எனவே இவர் "அறிவியலின் தந்தை" எனவும் போற்றப்படுகிறார். என்றாலும் சிலர் இத்தகுதி தெமாக்கிரித்தசுக்கே பொருந்தும் என்கின்றனர்.[2][3]

பட்டைக்கூம்புகளின் உயரத்தையும் கடற்கரையில் இருந்து கப்பல் உள்ள தொலைவையும் கண்டறிய, இவர் கணிதவியலில் வடிவவியலைப் பயன்படுத்தினார். இவர்தான் முதலில் தேலேசுத் தேற்றத்தின் கிளைத்தேற்றங்களைக் கண்டறிய பகுப்புவழி பகுத்தறிதல் முறையைப் பயன்படுத்தினார். எனவே இவரே முதல் கணிதவியலாராக, ஏன், கணிதவியலின் கண்டுபிடிப்பாளராகவே கருதப்படுகிறார்.[4]

இவர் கிமு 585-84 இல் சூரிய ஒளிமறைப்பை முன்கணித்துள்ளார். ஆம்பர் என்னும் பொருளை துணியில் தேய்த்த பின் அது வைக்கோல் துண்டுகளை ஈர்க்கும் திறம் பெறுகின்றது என கண்டுபிடித்தார்.[5] அம்பரின் இப் பண்பைப் பற்றி கிமு 300களில் வாழ்ந்த பிளாட்டோ என்பாரும் குறித்துள்ளார். மின்சாரத்தின் அடிப்படைப் பண்புகளில் ஒன்றான மின் தன்மை இவ்வகைக் கண்டுபிடிப்பில் இருந்து தொடங்கியதாகக் கருதப்படுகின்றது.

மேலும் காண்கதொகு

குறிப்புகள்தொகு

  1. அரிசுட்டாட்டில், Metaphysics Alpha, 983b18.
  2. Singer, C. (2008). A Short History of Science to the 19th century. Streeter Press. பக். 35. 
  3. Needham, C. W. (1978). Cerebral Logic: Solving the Problem of Mind and Brain. Loose Leaf. பக். 75. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-398-03754-X. https://archive.org/details/cerebrallogicsol0000need. 
  4. (Boyer 1991, "Ionia and the Pythagoreans" p. 43)
  5. I.Frolov, Editor, Dictionery of Philosophy, Progress Publishers, Moskow, 1984

உசாத்துணைதொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேலேஸ்&oldid=3581514" இருந்து மீள்விக்கப்பட்டது