அனாக்சிமேனசு
அனாக்சிமேனசு (Anaximenes, /ˌænækˈsɪməˌniːz/; பண்டைக் கிரேக்கம்: Ἀναξιμένης; அண். 585 – அண். 528 கி.மு.) மிலேத்தசு நகரில் வாழ்ந்த சாக்கிரட்டீசுக்கு முந்திய பண்டைக் கிரேக்க மெய்யியலாராவார். இவர் கிமு ஆறாம் நூற்றாண்டின் பிற்காலத்தில் முனைப்போடு செயல்பட்டவர்.[1][2] மூன்று மிலேசிய மெய்யியலாரில் ஒருவர். இவர் அனாக்சிமாண்டரின் இளம்நண்பராக / மாணவராகக் கருதப்படுகிறார்.[3][4] அனாக்சிமேனசு தன்னுடைய சிந்தனைப்பள்ளியில் பொருள்முதல் வாத ஒருமையியலைக் கடைப்பிடித்தார்.[4][5] நிலவல் (Reality) பொருள் பண்டங்களால் ஆயதே என்ற இந்தப் போக்கிற்காகவே இன்றும் இவர் முதன்மையாக நினைவுகூரப்படுகிறார்.
அனாக்சிமேனசு Anaximenes of Miletus | |
---|---|
மிலேத்தசின் அனாக்சிமேனசு | |
பிறப்பு | அண். கிமு 585 |
இறப்பு | அண். கிமு 528 |
காலம் | சாக்கிரட்டீசுக்கு-முந்தைய மெய்யியல் |
பகுதி | மேற்கத்தைய மெய்யியல் |
பள்ளி | அயோனிய/மிலேசிய மெய்யியல், இயற்கையியல் |
முக்கிய ஆர்வங்கள் | மீவியற்பியல் |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | காற்று ஒரு தொல்மெய் |
செல்வாக்குச் செலுத்தியோர் |
அனாக்சிமேனசும் தொல்பாழும்
தொகுஅனாக்சிமேனசுக்கு முன்பிருந்தவர்களான தேலேசும், அனாக்சிமாண்டரும் உலகின் அடிப்படைப் பொருளான தொல்பாழாக முறையே நீரையும் குழப்பமான அபெய்ரானையும் (Apeiron) கூற, இவர் காற்றைத் தொல்பாழாக (Archie) உறுதிபடுத்துகிறார். காற்றிலிருந்தே பிற எல்லாப் பொருள்களும் தோன்றுகின்றன என்கிறார். இது தற்செயலானதுபோல தோன்றலாம். ஆனால் அவர் இந்த முடிவுக்கு இயற்கையில் நிகழும் காற்றின் விரவுதல் (Rarefaction), ஆவிசெறிதல் ஆகிய நோக்கீடுகளை /அவதானிப்புகளைச் சார்ந்தே வருகிறார்.[6] காற்று செறிவுறும்போது மூடுபனியாகவும் மழையாகவும் பிற பொழிவுகளாகவும் கண்ணுக்குத் தெரிகிறது. காற்று குளிரும்போது புவியும் கனிமங்களும் (கற்களும்) உருவாகிறதெனக் கூறினார். மாறாக நீர் ஆவியாகி காற்றுக்குப் போகிறது. மேலும் அது காற்றைப் பற்றி எரியச் செய்து மேலும் விரவும்போது நெருப்பை உருவாக்குகிறது என்றார்.[7] மற்றவரும் பொருளின் நிலைகளைக் கூறினாலும் அனாக்சிமேனசு தான் சூடு/உலர்வு, குளிர்ச்சி/ஈரம் ஆகிய பண்பிணைகளை ஒரே பொருளின் அடர்த்தியோடு உறவுபடுத்தி விளக்கினார். இதன் வழியாக மிலேசிய ஒருமை அமைப்பில் அளவியலான கருத்துருவை இணைத்தார்.[7][8]
புவியின் தோற்றம்
தொகுஉலகில் நிலவும் யாவுமே காற்றாலானதென முடிவு செய்ததும் அனாக்சிமேனசு புவியும் அதைச் சூழ்ந்துள்ள விண்பொருட்களும் காற்றில் இருந்து தோன்றிய முறையை விளக்கும் கோட்பாட்டை உருவாக்கினார். காற்று அழுந்தி அடர்ந்து மேசை போன்ற தட்டையான புவி வட்டை உருவாக்கியது. அது இலையைப் போல காற்றில் மிதக்கலானது. வான்பொருட்கள் தீப்பந்துகள் எனக் கருதப்பட்டதால் புவி வெளியிட்ட காற்று விரவித் தீப்பற்றியதால் விண்மீன்கள் உருவாகின என்றார். சூரியன் விண்மீன்களைப் போல எரிந்தாலும் விரவிய காற்றால் ஆனதல்ல. மாறாக புவிபோன்ற நிலாவாகும் என்றார். அது தன் கட்டமைப்பால் எரியவில்லை, வேகமான இயக்கத்தால் எரிகிறது என்றார்.[9] இதே போலவே சூரியனும் நிலாவும் தட்டையாகக் காற்றில் மிதக்கின்றன என்றார். மேலும் சூரியன் மறையும்போது புவிக்கடியில் செல்வதில்லை, மாறாக புவியை அது சுற்றும்போது எட்டச் சென்றுவிடுவதால் புவியின் உயர்பகுதிகளால் மறைக்கப்படுகிறது என்றார். தலையில் தொப்பி சுழல்வதைப் போலவே சூரியனும் மற்ற வான்பொருள்களும் புவியைச் சுற்றி இயங்கிவருகின்றன என்றார்.[2][10]
பிற இயல்நிகழ்வுகள்
தொகுஅனாக்சிமேனசு புவியில் நிகழும் பிற நிகழ்வுகளுக்கும் நோக்கீடுகளில் இருந்தும் காரணங்களைக் கூறினார். எரிமலை உமிழ்வு புவியில் ஈரமில்லாமையாலும் பேரளவிலான நீர் புவியடியில் இருந்து மேற்கிளம்பிட புவி வெடிப்பதாலும் ஏற்படுவதாகக் கூறுகிறார். இருவகையிலும் புவி விரிசலடைவதால் மெலிந்துவிடுவதால் மலைகள் குலைந்து வீழ்கின்றன. அதனால் எரிமலை உமிழ்வு நிகழ்கிறதென்றார். மின்னல் முகில்கள் / மேகங்கள் காற்றால் வன்முறையாகப் பிரிக்கப்படுவதால் ஏற்பட்டு தீப்போன்ற தெறிப்பை வீசுகின்றது என்றார். வானவில்கள் அமுங்கிய அடர்ந்த காற்று சூரிய ஒளிக்கற்றைகளைச் சந்திப்பதால் ஏற்படுகிறது என்றார்.[11] இந்த எடுத்துக்காட்டுகளால் இவரும் மிலேசிய மெய்யியலாரும் இயற்கை சார்ந்த பரந்த காட்சியை உருவாக்கினர் என்பது தெளிவாகிறது. இயற்கையில் நேரும் பல நிகழ்வுகளுக்கும், ஒவ்வொரு நிகழ்வையும் தனித்தனியாகக் கருதாமலும் கடவுள் படைத்ததென்று கூறாமலும், ஒருங்கிணைவான காரணங்களைத் தேடினர் என்பது புலனாகும்.[5]
தகைமை
தொகுநிலாவின் எரிமலைவாய் அனாக்சிமேனசு பெயரிடப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Lindberg, David C. “The Greeks and the Cosmos.” The Beginnings of Western Science. Chicago: University of Chicago Press, 2007. 28.
- ↑ 2.0 2.1 Graham, Daniel W. "Anaximenes". The Internet Encyclopedia of Philosophy. 29.10.2009 [1].
- ↑ Kirk, G.S., J.E. Raven, and M. Schofield. "Anaximenes of Miletus." The Presocratic Philosophers. Cambridge: Cambridge University Press, 1984. 143.
- ↑ 4.0 4.1 Guthrie, W.K.C. "The Milesians: Anaximenes." A History of Greek Philosophy. Cambridge: Cambridge University Press, 1962. 115.
- ↑ 5.0 5.1 Lindberg, David C. "The Greeks and the Cosmos." The Beginnings of Western Science. Chicago: University of Chicago Press, 2007. 29.
- ↑ Guthrie, W.K.C. "The Milesians: Anaximenes." A History of Greek Philosophy. Cambridge: Cambridge University Press, 1962. 116.
- ↑ 7.0 7.1 Guthrie, W.K.C. "The Milesians: Anaximenes." A History of Greek Philosophy. Cambridge: Cambridge University Press, 1962. 124-126.
- ↑ Kirk, G.S., J.E. Raven, and M. Schofield. "Anaximenes of Miletus." The Presocratic Philosophers. Cambridge: Cambridge University Press, 1984. 146.
- ↑ Kirk, G.S., J.E. Raven, and M. Schofield. "Anaximenes of Miletus." The Presocratic Philosophers. Cambridge: Cambridge University Press, 1984. 152-153.
- ↑ Fairbanks, Arthur. "Anaximenes பரணிடப்பட்டது 2008-02-21 at Archive-It". The First Philosophers of Greece. K. Paul, Trench, Trübner, 1898. 20.
- ↑ Fairbanks, Arthur. "Anaximenes பரணிடப்பட்டது 2008-02-21 at Archive-It". The First Philosophers of Greece. K. Paul, Trench, Trübner, 1898. 18;20-21.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் அனாக்சிமேனசு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Burnet, John (1920). Early Greek Philosophy (3rd ed.). London: Black. Archived from the original on 2011-01-11. பார்க்கப்பட்ட நாள் 2015-05-07.
- Anaximenes at the Internet Encyclopedia of Philosophy
- Anaximenes Fragments