சோழர் பரம்பரை
சோழர் பரம்பரை வரிசையை ஒட்டக்கூத்தர் பாடிய மூவருலா தொகுப்பில் இடம்பெற்றுள்ள மூன்று நூல்களிலும் குறிப்பிட்டுள்ளார். முதலாவது விக்கிரம சோழன் உலா, இரண்டாவது குலோத்துங்க சோழன் உலா மூன்றாவது இராசராசன் உலா ஆகியவற்றின் நூல் முகப்பில் குறிப்பிட்டுள்ளார். இவற்றில் விக்கிரமசோழன் உலாவில் குளிப்பிடப்பட்டுள்ள சோழ அரசர்களின் பரம்பரை வரிசை இந்த மூன்று உலாநூல்களுக்குப் பின்னர் தோன்றிய சங்கரசோழன் உலா நூலில் அப்படியே பின்பற்றப்பட்டுள்ளது. விக்கிரமசோழன் உலா, சங்கரசோழன் உலா ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள வரிசை வருமாறு:
- சோழர் குல முதல்வன் சூரியன்
- மைந்தனைத் தேர்க்காலில் இட்டவன் (மனுநீதிச் சோழன்)
- ஆட்டுக்குட்டியும், புலியும் சேர்ந்து நீர் பருகச் செய்தவன் (மாந்தாதா)
- உம்பர் விமானம் உகைத்தவன் (முசுகுந்தன், உபரிசரன்)
- புரந்தன் ஊர் புரந்த வேந்தன்
- கூற்றுக்கு ஒக்க வழக்கு உரைத்தோன் (பெருநற்கிள்ளி)
- யமன் படை பின்வாங்க முதுமக்கள் சாடி வகுத்தவன் (சுரகுரு)
- தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்
- மேல்கடல் கீழ்க்கடற்கரை விட்டோன் (சங்கர்ஷணன், சமுத்திரஜித்)
- நாகநாட்டுக் கன்னியை மணந்தோன் (கிள்ளிவளவன்)
- பாட்டுக்கு நூறாயிரம் பொன் கொடுத்தோன் (விக்கிரமசோழன் உலாவில் கூறப்படவில்லை)
- பாக் கொண்டு பதினாறு கோடி பொன் கொடுத்தோன் (கரிகாலன்-1) (விக்கிரமசோழன் உலாவில் கூறப்படவில்லை)
- புறாவுக்காக நிறை புக்கோன் (சிபி)
- ஆறு கண்ட திறவோன் (சிவூகன்)
- காவிரிக் கரை செய்தோன் (கரிகாலன்-2)
- களவழிப் பாட்டுக்குச் சேரன் தளை களைந்தான் (கோச்செங்கணான்)
- தொண்ணூறும் ஆறும் பூணாகப் புண் சுமந்தான் (விசயாலயன்)
- திருமன்றம் ஆடகத்தால் வேய்ந்த அபயன் (பராந்தகன்-1)
- கேரளநாடு சிந்தினவன் (இராசராசன்-1)
- கடாரமும், கொப்பமும் கொண்டவன் (இராசேந்திரன்-1)
- கல்யாணம் அட்ட தனிக் காவலன் (இராதிராசன்-1)
- கொப்பத்து யானை ஆயிரம் கொண்டோன் (இராசேந்திரன்-2)
- கருமுகிற்கு மாணிக்கப் பாப்பணை செய்தோன் (இராசமகேந்திரன்)
- கூடலர் சங்கமத்துப் போர் வென்று பரணி கொண்டவன் (வீர்ராசேந்திரன்)
- கலிங்கத்துப் பரணி கொண்ட விறலோன் (குலோத்துங்கன்-1)
- கூத்தன் உலாக்கொண்ட விக்கிரம சோழன்
- உலாமாலையோடு பிள்ளைத்தமிழ் மாலையும் பெற்றோன் (குலோத்துங்கன்-2) (விக்கிரமசோழன் உலாவில் கூறப்படவில்லை)
- உலாக் கண்ணிதோறும் பொன்னாயிரம் சொரிந்த பூபதி (இராசராசன்-2) (விக்கிரமசோழன் உலாவில் கூறப்படவில்லை)
சங்கரசோழன் உலா மேலும் தொடர்கிறது.
- சங்கமன் (நெறியுடைப்பெருமாள்) இவன் மக்கள் மூவர்
- நல்லமன் என்னும் எதிரிலிப் பெருமாள் (இராசாதிராசன்-2 போலும்)
- குமாரமகீதரன் (குமார குலோத்துங்கன் என்னும் குலோத்திங்கன்-3)
- சங்கரன் (சங்கரன் உலா நூலின் பாட்டுடைத் தலைவன்)
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூறாம் நூற்றாண்டு, பதிப்பு 2005