சௌந்தரிய லகரி உரை

சௌந்தரிய லகரி உரை என்னும் உரைநூலானது சௌந்தர்ய லகரி என்னும் நூல் தோன்றிய 16 நூற்றாண்டிலேயே எழுதப்பட்டது. இந்த உரையின் சிறப்புப் பாயிரப் பாடலில் இந்த உரையாசிரியரின் பெயர் தாழைநகர் எல்லான் எனக் குறிபிடப்பட்டுள்ளது. இந்த எல்லானே எல்லப்ப நாவலர் என அறிஞர் மு. அருணாசலம் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.

உடலுக்குள் இயங்கும் 7 ஆதாரங்கள் - [1] மூலாதாரம், [2] சிவாதிட்டானம், [3] மணிப்பூரகம், [4] அனாகதம், [5] விசுக்தி, (6] ஆக்கினை, [7] துரியம் எனும் சகஸ்ராதாரம்
இடகலை, பிங்கலை நாடிசுத்தி
குண்டலினி பாம்பு, குண்டலினி சகத்தியை எழுப்புதல்

சௌந்தரியம் என்பது இங்குத் தேவியின் அழகினைக் குறிக்கும்.

உரையமைதி தொகு

  • இந்த நூல் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை உரையாசிரியர் நன்னூல் நூற்பா ஒன்றால் [1] விளக்கிகிறார்.
  • அம்பிகை நீலி என்பது பாவமே, நீலி என்பது நீலநிறத்தை உடையவளுக்கும், மனத்தின்கண் வைரத்தை உடையவளுக்கும் பெயராதலால், வைரம் உத்தமிக்குப் பொருந்தாது என்பது பற்றி நீலி என்றது பாவமே என்றார். [2]
  • திரிவேணி சங்கமம் என்பது சோணை [3], கங்கை, யமுனை ஆகிய மூன்று ஆறும் கூடுமிடம். சோணை சிவப்பு. கங்கை தெளிந்து வரும் வெள்ளை. யமுனை கறுப்பு.
  • புறநானூறு, நன்னூல், திருக்குறள், சம்பந்தர் தேவாரம், சுந்தரர் தேவாரம், திருவாசகம், திருக்கோவையார், கல்லாடம், சிந்தாமணி, கூத்தநூல் முதலான நூல்களிலிருந்து இவ்வுரையில் மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன.
  • பாடல்தோறும் அமைந்துள்ள அணி அதன் வடமொழிப் பெயராலும், தமிழ்ப் பெயராலும் இந்த உரையில் சுட்டப்பட்டுள்ளது.
  • உருத்திர யாமனம், வசிட்ட சங்கிதை, சனந்த சங்கிதை, காந்த சங்கிதை முதலான பல வடமொழி நூல்களின் பெயர்களும் உரையில் சுட்டப்பட்டுள்ளன.
  • யோகம் பற்றிக் குறிப்பிடும் இடங்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.
    • மூலாதாரம் தாமரைக் கிழங்கு போன்று இருக்கும்.
    • அதில் இடை, பிங்கலை, சுழுமுனை என்னும் மூன்று நாடிகள் எழும்.
    • இடையும் பிங்கலையும் மூக்கின் துளைகள் இரண்டிலும் ஓடும்.
    • சுழுமுனையின் உச்சி 1000 இதழ் கொண்ட தாமரையாக தலையுச்சியில் மலர்ந்திருக்கும்.
    • குண்டலினி சக்தி பாம்பின் வடிவம் போல் எழும்.
    • மூலாதாரத்தில் குண்டலினி பாம்பு தன் படத்தை விரித்துக்கொண்டு உறங்கும். அதை எழுப்ப வேண்டும்.
    • மூக்கின் துளைகளை ஒவ்வொன்றாக அடைத்துக்கொண்டு மூச்சை இழுத்து, அடக்கி, வெளிவிடவேண்டும்.
    • அடக்கும்போது கும்பி என்னும் மலவாயைச் சுருக்கி விரித்து, மூலாதாரத்திலுள்ள குண்டலினி சத்தியை எழுப்ப வேண்டும். அப்போது சுவாதிட்டானத்தில் உள்ள அக்கினி மூண்டு எழும். அது சுழுமுனை வழியே உடலில் உள்ள 6 ஆதார நிலைகளையும் கடந்து உச்சந்தலையில் உள்ள ஆயிரம் இதழ்கொண்ட தாமரையாகிய சதாசிவத்தை எழுப்பும்.
    • தத்துவம் 21 – பூதம் 5, தன்மாத்திரை 5, புலன் என்னும் ஞானேந்திரியம் 5, பொறி என்னும் கன்மேந்திரியம் 5, மனம் 1, ஆக 21
    • வீடு என்பது குண்டலினி சக்தியைச் சதாசிவத்துடன் இணைப்பது.
    • இரண்டு ரேகை சந்திப்பது சந்தி. மூன்று ரேகை சந்திப்பது வன்மம்.

சௌவுந்தரிய லகரி எல்லப்ப நாவலர் உரை என்னும் பெயரோடு இந்த உரைநூல் 1897 ஆம் ஆண்டு நல்லூர் ஆறுமுக நாவலரால் பரிசோதிக்கப்பட்டதை, சென்னை இட்டா பார்த்தசாரதி நாயுடு அவர்களால் தமது ஸ்ரீ பதமநாப விலாச அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டது. 1907 அனவரதம்பிள்ளை பதிப்பு இதன் சிறப்பான பதிப்பு.

கருவிநூல் தொகு

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு தொகு

  1. தொகுத்த்தல் விரித்தல் தொகைவிரி, மொழிபெயர்ப்பு எனத் தகுநூல் யாப்பு ஈரிரண்டு என்ப
  2. 26 பாயிரம் நான்காம் பாடலின் உரை
  3. சோணையைச் சரசுவதி என்பாரும் உளர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌந்தரிய_லகரி_உரை&oldid=1411282" இலிருந்து மீள்விக்கப்பட்டது