ச. வைத்தியலிங்கம் பிள்ளை

ச.வைத்தியலிங்கம்பிள்ளை (1843 – 1901) ஈழத்துத் தமிழறிஞர். கல்வி, இலக்கிய ஆக்கம், நூற்பதிப்புத் துறைகளில் ஈடுபட்டவர். இவர் பாரதி நிலைய முத்திராட்சகசாலை என்ற அச்சகத்தை நிறுவியதோடு, ஒரு தமிழ் பாடசாலையையும் நடத்தினார். சிந்தாமணி நிகண்டை எழுதி வெளியிட்டவர். "நம்பியகப் பொருள்" என்ற இலக்கண நூலுக்கு விளக்கம் எழுதினார். "சைவாபிமானி" என்ற பத்திரிகையை பாரதி நிலையத்தினூடாக மாதமொருமுறை இவர் வெளியிட்டார். சி.வை.தாமோதரம்பிள்ளை எழுதிய "சைவமகத்துவம்" நூலுக்கு எழுந்த கண்டனங்களை மறுத்து "சைவமகத்துவ பானு" எழுதியவர். இயற்றமிழ் போதகாசிரியர் என்னும் பெயரால் அறியப்பட்டவர்.[1]

வாழ்க்கைக் குறிப்பு தொகு

வைத்தியலிங்கம் 1843 மாசி மாதம் பூர நட்சத்திரத்தில் இலங்கையில் வல்வெட்டித்துறையில் பிறந்தார். இவரது தந்தையார் சங்கரநாதர் கடலோடியாகவும் வணிகராகவும் திகழ்ந்தவர். சிறுவயது முதலே உடுப்பிட்டி சிவசம்புப் புலவரிடம் இலக்கண இலக்கியங்களையும் வடமொழியையும் கற்றுத் தேர்ந்தார். பலதரப்பட்ட நூல்களை இயற்றியும் ஏற்கனவே இயற்றப்பட்ட நூல்களை திருத்தி அச்சிட்டு, சில நூல்களுக்கு உரை எழுதியும் தமிழுக்கும் சைவத்துக்கும் பெரும் தொண்டாற்றினார்.[2]

நல்லூர் வி. சின்னத்தம்பிப் புலவர் (1716 – 1780) எழுதிய "கல்வளை அந்தாதி" நூலுக்கு உரை எழுதி சென்னை ரிப்பன் அச்சுக் கூடத்தில் பதிப்பித்து வெளியிட்டார். சி. வை. தாமோதரம்பிள்ளை கேட்டுக் கொண்டதற்கு இணங்கி, சுன்னாகம் வரத பண்டிதர் (1656 -1716) இயற்றிய சிவராத்திரி புராணத்தை வழுக்களைந்து சென்னை வித்தியாவர்த்தனி அச்சுக் கூடத்தில் 1885-ஆம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார்.[1]

தாமோதரம்பிள்ளையின் "சைவ மகத்துவம்" என்னும் நூலுக்கு எதிராக “சைவ மகத்துவ ஆபாச விளக்கம்” என்னும் கண்டனப் பிரசுரம் தோன்றிய போது “சைவ மகத்துவ ஆபாச விளக்க மறுப்பு’ என்னும் பதிவை எழுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.[2]

வல்வெட்டித்துறை வைத்தீசுவரன் கோவிலுக்கு அருகாமையிலேயே இவரால் நிறுவப்பட்ட "பாரதி நிலைய முத்திராட்சரசாலை" என்ற அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்ட “சைவாபிமானி” என்ற இதழில் "வல்வை மாணவன்" என்ற பெயரில் இவரது ஆக்கங்களும் கண்டனங்களும் வெளியாகின. அந்த அச்சியந்திரசாலையின் அருகிலேயே இலக்கிய இலக்கணப் படிப்புக்கான பாடசாலை ஒன்றும் நடைபெற்று வந்துள்ளது.[2]

கள்ளுக்குடிச்சிந்து (மூன்று பாகங்கள் – மது ஒழிப்பு பற்றியது), மாதரொழுக்கத் தங்கச்சிந்து (இரண்டு பாகங்கள்) ஆகிய நூல்களை எழுதி அவரது சமூகம் பற்றிய பார்வையை வெளிக்கொணர்ந்தார்.[2]

மட்டக்களப்பு சென்று அங்கு விரிவுரைகள் நிகழ்த்தினார். அப்போது வித்துவான் ச. பூபாலப்பிள்ளை இவரது மாணாக்காரனார். பூபாலபிள்ளை பாடிய சோமவார மகிமையைக் கூறும் “சீமந்தினி புராணம்” இவரது மேற்பார்வையில் சென்னையில் 1894 இல் வெளியிடப்பட்டது.[2]

இவர் 1876-இல் "சிந்தாமணி நிகண்டு" என்னும் நூலை இயற்றி வெளியிட்டமைக்காக, சென்னை பேரறிஞர்கள் இவருக்கு "இயற்றமிழ் போதகாசிரியர்" என்னும் பட்டத்தை வழங்கினர். இந்நிகழ்வு சி. வை. தாமோதரம்பிள்ளை தலைமையில் சென்னையில் நடந்தது. இவர் கந்தபுராணத்தின் சில படலங்களுக்கு உரை எழுதி வெளியிட்டார். இது நூல் வடிவில் வருவதற்கு முன்னர் இவரது "சைவாபிமானி" பத்திரிகையில் தொடராக வெளிவந்துள்ளது.[2]

மறைவு தொகு

ச. வைத்தியலிங்கம் பிள்ளை 1901 ஆவணி மூலத்தில் காலமானார்.[1]

இவரது சில நூல்கள் தொகு

  • சிந்தாமணி நிகண்டு (1876)
  • வல்வை வைத்தியேசர் பதிகம் (1883)
  • வல்வை வைத்தியேசர் ஊஞ்சல் (1883)
  • சாதி நிர்ணய புராணம்
  • சைவ மாகாத்மியம்
  • செல்வசந்நிதித் திருமுறை
  • நல்லூர்ப் பதிகம்
  • மாவைப் பதிகம்
  • நெடியகாட்டுப் பதிகம் (வல்வெட்டித்துறை நெடியகாட்டுப் பிள்ளையார் மீது)

உரைகள் தொகு

  • கந்தபுராணத்து அண்டகோசப்படலவுரை
  • தெய்வயானை திருமணப்படலவுரை
  • வள்ளியம்மை திருமணப்படலவுரை
  • சூரபத்மன் வதைப்படலம்
  • சிவராத்திரி புராணம்

வேறு நூல்கள் தொகு

  • கணிதத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வாய்பாடுகளும் அவற்றின் விளக்கங்களும் அடங்கிய கணிதாசாரம் என்னும் நூல் இவரால் வெளியிடப்பட்டது.
  • கள்ளுக்குடிச்சிந்து (மூன்று பாகங்கள்)
  • மாதரொழுக்கத் தங்கச்சிந்து (இரண்டு பாகங்கள்)

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._வைத்தியலிங்கம்_பிள்ளை&oldid=3398348" இலிருந்து மீள்விக்கப்பட்டது