ஜதிந்திரமோகன் தாகூர்

மகாராஜா பகதூர் சர் ஜதிந்திரமோகன் தாகூர் (Sir Jatindramohan Tagore ) (1831 மே 16 – 1908 சனவரி 10) இவர் இந்திய துணைக் கண்டத்தின் வங்காளப் பகுதியைச் சேர்ந்த ஒரு நாடக ஆர்வலரும், கலைக் காதலனும் மற்றும் தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டவருமாவார்.[1]

மகாராஜா பகதூர் ஜதிந்திரமோகன் தாகூர்
பிறப்பு1831 மே 16
கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானியாவின் இந்தியா
இறப்பு10 January 1908
கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானியாவின் இந்தியா

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

ஹரா குமார் தாகூரின் மகனும் (1798 – 1858) கோபி மோகன் தாகூரின் பேரனுமான, இவர் தாகூர் குடும்பத்தின் பாதுரியகட்டா கிளையைச் சேர்ந்தவர். தாகூர் இந்துக் கல்லூரியில் படிப்பை முடித்தார். அதன் பிறகு வீட்டிலேயே ஆங்கிலம் மற்றும் சமசுகிருதம் படித்தார். [2] தளபதி டி.எல். ரிச்சர்ட்சன் மற்றும் பிறரிடமிருந்து இவர் தனிப் பயிற்சியையும் பெற்றார். இவரது தந்தை ஹரா குமார் தாகூரும் இந்து மத நூல்கள், சமசுகிருதம் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றை கற்ற அறிஞராக இருந்தார். இவர் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட புத்தகங்களைத் தொகுத்து, சப்தகல்பத்ரம் என்பதைத் தொகுப்பதில் இராதாகாந்த தேவ் என்பவருக்கு (1783 - 1867) உதவினார்.[3]

சிறு வயதிலிருந்தே, இவர் ஆங்கிலத்திலும் பெங்காலி மொழியிலும் இசையமைப்பிற்கான விதிவிலக்கான இலக்கிய ரசனைகளைக் கொண்டிருந்தார். பல நகைச்சுவை நாடகங்களை எழுதினார். இந்த படைப்புகளில் ஒன்றான வித்யா சுந்தர் நாடகம்" என்ற நாடகம் இவரது இல்லத்தில் நிகழ்த்தப்பட்டபோது விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றது.[4]

1851ஆம் ஆண்டில் இவரது மாமா பிரசன்னா குமார் தாகூரின் மகன் ஞானேந்திரமோகன் தாகூர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய காரணத்தால் பரம்பரைச் சொத்தை இழந்தார். இவர் தனது மாமாவின் சொத்துகளைப் வாரிசாகப் பெற்றார்.[2]

பொது வாழ்க்கை

தொகு

1866ஆம் ஆண்டில், தாகூர் ஆட்சியாளர்களுக்கு உதவி வழங்கினார் மிட்னாபூரில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலனுக்காக நன்கொடை அளித்தார். இவர் பல ஆண்டுகளாக பிரிட்டிசு இந்திய சங்கத்தின் கௌரவ செயலாளராக இருந்தார். 1879இல் அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1881 இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1870ஆம் ஆண்டில் இவர் வங்காளச் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1872இல் மீண்டும் சட்டமன்ற உறுப்பினரானார். 1871ஆம் ஆண்டில் இவர் 'ராஜா பகதூர்' என்ற பட்டத்தைப் பெற்றார். அதே ஆண்டு ஏப்ரல் மாதம் குடிமை நீதிமன்றங்களுக்கு வருவதிலிருந்து விலக்கு பெற்றார். 1877இல் விக்டோரியா மகாராணி இந்தியாவின் பேரரசி என்று பிரகடனப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், "மகாராஜா" என்ற பட்டத்தைப் பெற்றார். அந்த ஆண்டு பிப்ரவரியில் தலைமை ஆளுநரின் சட்டமன்றக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார், மேலும் குடிமை நடைமுறை மசோதாவுக்கு இவர் அளித்த உதவியை அங்கீகரிக்கும் விதமாக 1879இல் மீண்டும் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மூன்றாவது முறையாக 1881இல் தலைமை ஆளுநரின் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மே 1882 இல் வீரத்திருத்தகை என்றப் பட்டம் உருவாக்கப்பட்டது. இவர் 1890 சனவரியில் "மகாராஜா-பகதூர்" என்ற பட்டத்தைப் பெற்றார். அடுத்த ஆண்டு சனவரியில், இந்த தலைப்பு இவரது குடும்பத்தில் பரம்பரையாக மாற்றப்பட்டது.[4]

மயோ மருத்துவமனையை நிறுவுவதற்கு தாகூர் பெருமளவில் பங்களித்தார். இதன் விளைவாக ஒரு பகுதிக்கு இவரது பெயரிடப்பட்டது. இவர் தனது தந்தை மற்றும் தனது மாமா பிரசன்னா குமார் தாகூர் பெயர்களில் இலக்கியம், அறிவியல், கலாச்சாரம் மற்றும் வரலாறு மாணவர்களுக்கு பல உதவித்தொகைகளையும் நிறுவினார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சமசுகிருத இலக்கியத்தில் சிறந்த விளங்கிய மாணவருக்கு ஆண்டுதோறும் தங்கப்பதக்கம் வழங்குவதற்காக இவர் நிதியளித்தார். மேலும், தாகூர் சட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவருக்கான தங்கப் பதக்கத்தையும், இயற்பியல் அறிவியலில் சிறந்த மாணவருக்கான மற்றொரு தங்கப் பதக்கத்தையும் நிறுவினார். இவர் கொல்கத்தா நகரத்திற்கான அமைதி நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் சக ஊழியராகவும், இந்திய அருங்காட்சியகத்தின் அறங்காவலராகவும் (அதில் இவர் 1882 ஆம் ஆண்டில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்), மயோ மருத்துவமனையின் ஆளுநர்களில் ஒருவராகவும் மற்றும் ஆசிய சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்தார். 1889 இல் இளவரசர் ஆல்பர்ட் விக்டரின் வருகையின் போது வரவேற்புக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை இவருக்கு கிடைத்தது. 1881இல் கொல்கத்தா பல்கலைக்கழக அமைப்பின் துணைத் தலைவராகவும், 1881-82ல் கலை பீடத்தின் தலைவராகவும் இருந்தார். இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்திற்கு தனது மாமா பிரசன்னா குமார் தாகூர் நினைவாக ஒரு பளிங்கு சிலையை வழங்கினார். இது செனட் சபையின் போர்டிகோவில் வைக்கப்பட்டுள்ளது. தனது சகோதரர் ராஜா சர் சௌரிந்திர மோகன் தாகூருடன் இணைந்து, ஒரு சதுக்கத்தை நிர்மாணிப்பதற்காக கொல்கத்தா நகராட்சிக்கு ஒரு நிலத்தை வழங்கினார் (இவரது தந்தையின் பெயரால்). அதில் இவர் தனது சொந்த செலவில் ஒரு தனது தந்தையின் மார்பளவு பளிங்கு சிலையை வைத்தார் . "மகாராஜாமாதா சிவசுந்தரி தேவியின் இந்து விதவைகள் நிதியம்" என்ற பெயரில் இந்து விதவைகளின் நலனுக்காக ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒரு உதவித்தொகையையும் இவர் நிறுவினார்.

இவருக்கு ஆண் வாரிசு இல்லாததால் பிரத்யோத் குமார் என்பவரை வளர்ப்பு மகனாக்கிக் கொன்டார். இவருக்கு நான்கு மகள்கள் பிறந்தனர்.[4]

வங்க நாட்டியாலயம்

தொகு

நாடக ஆர்வலர்களான ஜதிந்திர மோகன் தாகூர் மற்றும் இவரது சகோதரர் சுரேந்திர மோகன் தாகூர் ஆகியோர் பாதுரியகட்டாவில் வங்க நாட்டியாலயத்தைத் தொடங்கினர். ஹரிஷ் சந்திர முகர்ஜி, துவாரகநாத் வித்யாபூசனின் சோம்பிரகாஷ் ஆகியோரின் கீழ் வளர்ந்த இந்து தேசபக்தர் போன்ற சமகால செய்தித்தாள்கள் இந்த நாடகங்களை மதிப்பாய்வு செய்தன. 1859 சூலையில் காளிதாசன் சமசுகிருதத்தில் இயற்றிய மாளவிகாக்கினிமித்திரம் என்பது வங்க நாட்டியாலயாவில் அரங்கேற்றப்பட்ட முதல் நாடகமாகும். ஒரு வருடம் கழித்து, பண்டிட் ராம்நாராயண் தர்கரத்னா என்ற நாடகத்தை பெங்காலியில் மொழிபெயர்ப்பு செய்து அரங்கேற்றப்பட்டது.[5] வங்க நாட்டியாலயத்திற்கு முன்பே, அவ்வப்போது பாதுரியகட்டாவில் உள்ள இவர்களது வீட்டில் நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. இவர் மைக்கேல் மதுசூதன் தத்தாவை திலோத்தமசம்பவ காவ்யம் என்பதற்கு இசையமைக்க ஊக்கப்படுத்தினார். மேலும் அதை அச்சிடுவதற்கான செலவுகளையும் தானே செலுத்தினார்.[2]

இசை மற்றும் ஓவியம்

தொகு

ஜதிந்திரமோகன் இசையை நோக்கி ஈர்க்கப்பட்டார். இவரது ஆதரவின் கீழ் சேத்ரமோகன் கோஸ்வாமி [6] என்பவர் இந்தியாவில் குழு இசையில் முதன்முதலில் பரிசோதனை செய்தார். 1857 சூலை 3, அன்று, பெல்காச்சியாவில் உள்ள ஜதிந்திரமோகனின் வீட்டில் இரத்னாவளி என்ற நாடகம் அரங்கேற்றப்பட்டது. ஐரோப்பிய திரையரங்குகளில் காணப்படுவதைப் பின்பற்றி ஒரு இசைக்குழுவை உருவாக்க இவர் சேத்ரமோகன் கோஸ்வாமி மற்றும் ஜாதுநாத் பால் ஆகியோரை நியமித்தார். இது தனி இசையின் பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு நாட்டில் ஒரு பாதையை உடைக்கும் சாதனை மற்றும் மேற்கத்திய இசையை இந்திய மரபுகளுடன் இணைக்கும் முயற்சியாகும்.[2][7] அப்போதிருந்து, பல பெங்காலி இசைக்கலைஞர்கள் ஐரோப்பிய இசையில் பரிசோதனை செய்யத் தொடங்கினர். பெரும்பாலும் அவற்றை ஊழியர்களின் குறியீடாக மாற்றினர். [1]

இந்தியாவின் முதல் சுர்பகார் இசை நிகழ்ச்சி இவரது அவையில் இடம்பெற்றது. சரோது இசைக்கலைஞரான உஸ்தாத் அலாவுதீன் கானின் முதல் குருவான 'நுலோ கோபால்' என்றும் அழைக்கப்படும் புகழ்பெற்ற கோபால் சந்திர பானர்ஜி இவரது அவையிலிருந்தார்.[8][9]

இவர் அன்றைய செல்வாக்கு மிக்க கலை புரவலர்களில் ஒருவராக இருந்தார். கண்காட்சிகளில் நன்கொடையாளராகவும் ஐரோப்பிய ஓவியங்களை வாங்குபவராகவும் இவரிருந்தார்.

மற்ற நடவடிக்கைகள்

தொகு

மாறுபட்ட சுவை கொண்ட மனிதரான இவர் பொதுக் காரியங்களுக்காக பெரிய அளவில் நன்கொடை அளித்தார். விதவைகளின் மறுவாழ்வுக்காக இவர் தயக்கமின்றி செலவிட்டார். 1870ஆம் ஆண்டு மற்றும் 1872 ஆண்டுகளில், இவர் வங்காள சட்டமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.. 1877 இலும் மற்றும் 1879 இலும் இவர் தலைமை ஆளுநரின் சட்டமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[10]

இவர் பிரிட்டிசு இந்திய சங்கத்தின் செயலாளராகவும், தலைவராகவும், தலைமை ஆளுநரின் குழு, கல்வி ஆணையம், கொல்கத்தா பல்கலைக்கழகம் மற்றும் இந்திய அருங்காட்சியம் போன்றவற்றின் உறுப்பினராக இருந்தார். தாகூர் கோட்டையில் இவருக்கு ஒரு அருங்காட்சியகம் இருந்தது.

ஆங்கிலம், பெங்காலி மற்றும் சமசுகிருத மொழிகளில் விரிவாக எழுதியுள்ளர்.[2]

குறிப்புகள்

தொகு
  1. Sengupta, Subodh Chandra and Bose, Anjali (editors), 1976/1998, Sansad Bangali Charitabhidhan (Biographical dictionary) Vol I, (in வங்காள மொழி), p. 433, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85626-65-0
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Sengupta, Subodh Chandra and Bose, Anjali (editors), 1976/1998, Sansad Bangali Charitabhidhan (Biographical dictionary) Vol I, (in வங்காள மொழி), p. 433, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85626-65-0ISBN 81-85626-65-0
  3. Sengupta, Subodh Chandra and Bose, Anjali, p. 611
  4. 4.0 4.1 4.2 Lethbridge, Roper (1893). The Golden Book of India. New York: Macmillan and Co. pp. 527–528.
  5. Mukhopadhyay, Ganesh (2012). Banglapedia: National Encyclopedia of Bangladesh. Asiatic Society of Bangladesh.
  6. http://en.banglapedia.org/index.php?title=Goswami,_Kshetramohan
  7. Mitra, Rajyeshwar, Music in Old Calcutta, in Calcutta, the Living City, Vol I, edited by Sukanta Chaudhuri, p. 183, Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-563696-1
  8. Massey, Reginald (1996). The Music of India. Calcutta: Abhinav Publications. pp. 142–143. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7017-332-9.
  9. Guha Thakurta, Tapati, Art in Old Calcutta: The Melting Pot of Western Styles, in Calcutta, the Living City, Vol I, p. 148
  10. Lethbridge, Sir Roper, The Golden Book of India: A Genealogical and Biographical Dictionary, pp. 307-308.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜதிந்திரமோகன்_தாகூர்&oldid=3845146" இலிருந்து மீள்விக்கப்பட்டது