ஜமால்பூர் மாவட்டம்

வங்காளதேசத்தின் மைமன்சிங் கோட்டத்திலுள்ள மாவட்டம்

ஜமால்பூர் மாவட்டம் (Jamalpur District) (வங்காள மொழி: জামালপুর জেলা, தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் மைமன்சிங் கோட்டத்தில் அமைந்துள்ளது. வங்காளதேசத்தின் வடகிழக்கில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஜமால்பூர் நகரத்தில் அமைந்துள்ளது. [1]பிரம்மபுத்திரா ஆற்றின் கரையில் உள்ள ஜமால்பூர் நகரம், தேசியத் தலைநகரமான டாக்காவிலிருந்து வடக்கே 140 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இம்மாவட்டம் 1978-இல் உருவாக்கப்பட்டது.[1]

வங்காளதேசத்தின் ஜமால்பூர் மாவட்டத்தின் அமைவிடம்

மாவட்ட எல்லைகள்

தொகு

இம்மாவட்டத்தின் வடக்கில் இந்தியாவின் மேகாலயா மாநிலம், குரிகிராம் மாவட்டம் மற்றும் செர்பூர் மாவட்டங்களும், தெற்கில் தங்காயில் மாவட்டமும் கிழக்கில் மைமன்சிங் மாவட்டம் மற்றும் செர்பூர் மாவட்டங்களும், மேற்கில் போக்ரா மாவட்டம் மற்றும் ஜமுனா ஆறும் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

தொகு

2115.6 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஜமால்பூர் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக ஜமால்பூர் சதர், மேலந்தாகா, இசுலாம்பூர், தேவன்கஞ்ச், சரிஷாபரி, போக்சிகஞ்ச், மற்றும் மதர்கஞ்ச் என ஏழு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டம் ஆறு நகராட்சி மன்றங்களையும், அறுபத்தி எட்டு கிராம ஒன்றியக் குழுக்களையும், 718 வருவாய் கிராமங்களையும், 1361 கிராமங்களையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 2000 ஆகும். தொலைபேசி குறியிடு எண் 0981 ஆகும். இம்மாவட்டம் ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

பொருளாதாரம்

தொகு

இம்மாவட்டம் வேளாண் பொருளாதாரத்தை நம்பியுள்ளது. இம்மாவட்டத்தில் பழைய பிரம்மபுத்திரா ஆறு, ஜமுனா ஆறு, ஜிஞ்சிரா ஆறு, சத்தல் ஆறு, ஜெனாய் முதலிய ஆறுகள் பாய்வதால் நீர் வளமும், மண் வளமும் கொண்டுள்ளது. இங்கு நெல், சணல், புகையிலை, உருளைக்கிழங்கு, மிளகு, கடுகு, கோதுமை, காய்கறிகள் பயிரிடப்படுகிறது. ஜமால்பூர் நகரம் அரிசி, சர்க்கரை, புகையிலை, சணல் போன்றவற்றிற்கு முக்கிய வணிக மையமாக உள்ளது. இந்நகரம் சாலை, இருப்புப் பாதை மற்றும் ஆற்று நீர் வழித்தடங்கள் மூலம் டாக்கா போன்ற நாட்டின் முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள் சணல், புகையிலை, கடுகு, நிலக்கடலை, தோல், முட்டை, பருப்பு வகைகள், வெற்றிலை மற்றும் கைவினைப் பொருட்கள் ஆகும். [2][3]

மக்கள் தொகையியல்

தொகு

2115.16 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 22,92,674 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 11,28,724 ஆகவும், பெண்கள் 11,63,950 ஆகவும் உள்ளனர். ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி 0.83% ஆக உள்ளது. பாலின விகிதம் 97 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1084 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 38.4% ஆக உள்ளது.[4]இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர். மக்கள் தொகையில் இசுலாமியர்கள் 2067685 ஆகவும், இந்துக்கள் 37449 ஆகவும், பௌத்தர்கள் 848 ஆகவும், கிறித்தவர்கள் 66 ஆகவும் மற்றும் பிறர் 1161 ஆக உள்ளனர். காரோ, பங்க்சி, ஹஜோங் மக்கள், ஹோடி, குர்மி மற்றும் மால் போன்ற உள்ளூர் பழங்குடி மலைவாழ் மக்கள் சிறு அளவில் இம்மாவட்டத்தில் வாழ்கின்றனர்.

கல்வி

தொகு

வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்புகள் உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப்பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட செகண்டரி பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப்பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப்படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப்படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jamalpur District
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. 1.0 1.1 Samar Pal (2012). "Jamalpur District". In Sirajul Islam and Ahmed A. Jamal (ed.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
  2. Jamalpur District Information
  3. "Jamalpur District Information". Archived from the original on 2017-01-03. பார்க்கப்பட்ட நாள் 2017-01-22.
  4. Community Report Jamalpur Zila June 2012[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜமால்பூர்_மாவட்டம்&oldid=3572888" இலிருந்து மீள்விக்கப்பட்டது