ஜலோகட்டி மாவட்டம்

ஜலோகட்டி மாவட்டம் (Jhalokati Distric) (வங்காள மொழி: ঝালকাঠি জেলা) தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். 706.76 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம் பரிசால் கோட்டத்தில் அமைந்துள்ளது.[1] தென்மேற்கு வங்காளதேசத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஜலோகட்டி நகரம் ஆகும்.

வங்காளதேசத்தில் ஜாலோகட்டி மாவட்டத்தின் அமைவிடம்

மாவட்ட எல்லைகள் தொகு

பரிசால் கோட்டத்தில் உள்ள ஜலோகட்டி மாவட்டத்தின் வடக்கில் பரிசால் மாவட்டம், தெற்கில் பர்குனா மாவட்டம் மற்றும் பிஸ்காளி ஆறும், கிழக்கில் பரிசால் மாவட்டம் மற்றும் பதுவாகாளி மாவட்டங்களும், மேற்கில் பிரோஜ்பூர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம் தொகு

706.76 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஜலோகட்டி மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக ஜலோகட்டி சதர், நல்சிட்டி, ராஜாப்பூர், மற்றும் கதலியா என நான்கு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டம் ஜலோகட்டி மற்றும் நல்சிட்டி எனும் இரண்டு நகராட்சி மன்றங்களையும், முப்பத்தி இரண்டு கிராம ஒன்றியக் குழுக்களையும், 395 வருவாய் கிராமங்களையும், 455 கிராமங்களையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 8400 ஆகும். தொலைபேசி குறியிடு எண் 0498 ஆகும். இம்மாவட்டம் இரண்டு வங்காளதேச நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. [2]

பொருளாதாரம் தொகு

ஜலோகட்டி மாவட்டம் வேளாண் பொருளாதாரத்தையே நம்பியுள்ளது. இம்மாவட்டத்தில் பிஷ்காளி சுகோந்தா, கஜாலியா, கைரா, தனஸ்ரீ முதலிய ஆறுகள் பாய்வதால் நீர் வளமும், மண் வளமும் மிக்கதாக உள்ளது. இங்கு நெல், சணல், கரும்பு, வாழை, தானியங்கள், காய்கறிகள் பயிரிடப்படுகிறது.

மக்கள் தொகையியல் தொகு

706.76 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 6,82,669 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 3,29,147 ஆகவும், பெண்கள் 3,53,522 ஆகவும் உள்ளனர். ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் (-)0.17ஆக குறைந்து வருகிறது. பாலின விகிதம் 93 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 630 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 66.7% ஆக உள்ளது. [3]இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.

கல்வி தொகு

வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்பு உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப் பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட இடைநிலைப் பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப் பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப் படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப் படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Rahman, Humayun (2012). "Jhalokati District". in Sirajul Islam; Jamal, Ahmed A.. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Jhalokati_District. 
  2. Jhalokati District Information
  3. Community Report Jhalokati Zila June 2012 [தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜலோகட்டி_மாவட்டம்&oldid=3213601" இலிருந்து மீள்விக்கப்பட்டது