ஜிரிபாம்
ஜிரிபாம் (மணிப்பூரிய மொழி:জিরিবাম), இந்திய மாநிலமான மணிப்பூரில் உள்ள கிழக்கு இம்பால் மாவட்டத்திலுள்ள நகரம். இது மணிப்பூரில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும்.
இந்த நகரம் மாநிலத்தின் மேற்கு எல்லையில், அசாமின் கசார் மாவட்டம் ஒட்டி அமைந்துள்ளது. இது மணிப்பூரின் மேற்கு வாயில் என்றும் அழைக்கப்படுகிறது. ஜிரிபாம் நகரத்தில் மைட்டிஸ், வங்காளிகள், ரோங்மீ, ஹ்மர்ஸ், பைட் போன்ற பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர்.[1] ஜிரிபாம் நகரத்தில் பெரும்பான்மையான மக்கள் மைட்டிஸ் இனக் குழுவைச் சேர்ந்தவர்கள்.
வரலாறு
தொகுஜிரிபாமின் பதிவு செய்யப்பட்ட வரலாறு பிரித்தானிய காலனித்துவ காலத்தில் தொடங்கியது. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல பழங்குடியினர் மற்றும் மத குழுக்கள் ஜிரி ஆற்றின் குறுக்கே உள்ள பகுதிக்கு குடிபெயரத் தொடங்கினர். இந்த சகாப்தத்தில் ஜிரி நதி ஒரு பிரபலமான அடையாளமாகவும், ஜிரிபாம் ஒரு முக்கிய வர்த்தக மையமாகவும் இருந்தது. இப்பகுதியை 1891 ஆம் ஆண்டு முதல் 1941 ஆம் ஆண்டு வரை மகாராஜா மீடிங்கு சுராச்சந்த் ஆட்சி செய்தார். 1907 ஆம் ஆண்டில் அப்பகுதியின் நிர்வாகத்தில் மகாராஜாவுக்கு உதவ மணிப்பூர் மாநில தர்பார் நிறுவப்பட்டது. சுராச்சந்தின் மகன் மகாராஜா போத்சந்திர சிங் 1941 முதல் 1955 வரை இப்பகுதியை ஆட்சி செய்தார்.
இந்தியா பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து 1949 ஆம் ஆண்டில் செப்டம்பர் 2 அன்று இந்திய அரசாங்கத்திற்கும் மணிப்பூர் மகாராஜாவுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் விளைவாக மணிப்பூர் பகுதி 1949 ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டு மணிப்பூரின் கூட்டமைப்பு பிரதேசங்களில் ஒன்றாக மாறியது. அப்போது இம்பால் மாநில தலைநகராக அறிவிக்கப்பட்டது.[2]
2017 ஆம் ஆண்டில் வங்காள சமூகத்தைச் சேர்ந்த மணிப்பூர் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் ஆஷாப் உதின் தேர்தலில் வெற்றி பெற்று ஜிரிபாம் சிறுபான்மை சமூகத்தின் முதல் உறுப்பினரானார்.[3]
காலநிலை
தொகுஜிரிபாம் ஈரப்பதமான துணை வெப்பமண்டல காலநிலையை கொண்டுள்ளது. குறுகிய குளிர்காலத்தையும், நீண்ட கோடைகாலங்களில் கனமழையுடனும் வகைப்படுத்தப்படுகின்றது. சில பகுதிகளில் குளிர்கால மாதங்களில் பனிப்பொழிவு ஏற்படக்கூடும். இந்தியாவில் பல பகுதிகளைப் போலவே பருவமழைக்கு உட்பட்டது. மாநிலத்தின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் தென்மேற்கு பருவமழையை ஏராளமாக பெறுகின்றது. வருடாந்திர மழையின் இருபது முதல் முப்பது சதவீதம் வரை மே மாதத்தில் பருவமழைக்கு முந்தைய காலங்களில் ஏற்படுகிறது. சூன் இரண்டாம் பாதியில் இருந்து செப்டம்பர் வரை மழைக்காலங்களில் சுமார் அறுபது முதல் எழுபது சதவீதம் மழைவீழ்ச்சி கிடைக்கின்றது. மழைக்காலத்தில் சராசரி மழைவீழ்ச்சி 1,000 முதல் 1,600 மி.மீ வரை (39.4 முதல் 63.0 அங்குலம்) பதிவாகின்றது.
புள்ளிவிபரங்கள்
தொகு2001 ஆம் ஆண்டு இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி ஜிரிபாம் நகரில் 6,426 மக்கள் வசிக்கின்றனர். ஆண்கள் 49 சதவீதமும், பெண்கள் 51 சதவீதமும் காணப்படுகின்றனர். மக்களின் கல்வியறிவு விகிதம் 73% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% வீதத்தை விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 80% வீதமும், பெண் கல்வியறிவு 66% வீதமும் ஆகும். ஜிரிபாமில் மக்களில் 13% வீதமானோர் பேர் ஆறு வயதுக்கு குறைவானவர்கள்.[4]
பொருளாதாரம்
தொகுஜிரிபாம் நகரம் துணைப்பிரிவின் நிர்வாக தலைமையகமாகும். வளர்ந்து வரும் மையமாக ஜிரிபாம் பிராந்தியத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மருத்துவ, கல்வி மற்றும் வணிக வசதிகளை வழங்குகிறது. 2001 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இங்கு உழைக்கும் மக்களில் 80% வீதமானோர் விவசாய சாரா நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். சனத்தொகையில் சுமார் 20% வீதமானோர் பேர் அரசு ஊழியர்கள் ஆவார்கள். இது மற்ற துறைகளை விட அதிக வருமானத்தை வழங்குகிறது.[5]
அரசியல்
தொகுஇது ஜிரிபாம் சட்டமன்றத் தொகுதிக்கும், வெளிப்புற மணிப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]
போக்குவரத்து
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Census of India Website : Office of the Registrar General & Census Commissioner, India". www.censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2019-11-15.
- ↑ "History of jiribam". Archived from the original on 2015-09-24.
- ↑ "2017 Jiribam - Manipur Assembly Election Winner, LIVE Results & Latest News: Election Dates, Polling Schedule, Election Results & Live Election Updates". India.com (in ஆங்கிலம்). Archived from the original on 2021-01-11. பார்க்கப்பட்ட நாள் 2019-11-15.
- ↑ ""Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Archived from the original on 2004-06-16.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "Jiribam".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-16.