சீனத் அமான்

இந்திய நடிகை
(ஜீனத் அமன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சீனத் அமான் (Zeenat Aman, பி. நவம்பர் 19, 1951) ஒரு இந்தியத் திரைப்பட நடிகை. பாலிவுட் திரைப்படங்களில், குறிப்பாக 1970கள் மற்றும் 1980களில் நடித்து புகழ்பெற்றவர். 1970களில் மிஸ் இந்தியா போட்டியில் மூன்றாவது வெற்றியாளராகி பின் மிஸ் ஆசியா பசிபிக் பட்டத்தை வென்றார். இந்தித் திரைப்பட உலகிற்கு மேற்கத்திய கதாநாயகிகளின் தோற்ற அமைப்பை அறிமுகப்படுத்தி நிலையான தாக்கத்தை உண்டாக்கியவர். பாலிவுட்டின் கவர்ச்சிச் சின்னங்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[1]

சீனத் அமான்

பிறப்பு நவம்பர் 19, 1951 (1951-11-19) (அகவை 72)
தொழில் நடிகை
நடிப்புக் காலம் 1971 - 1989, 1999, 2003, 2006 - நடப்பு
துணைவர் மசார் கான் (1985 - 1998, அவர் இறக்கும் வரை)

ஆரம்பகால வாழ்க்கை தொகு

அமானுல்லா கான் என்ற முஸ்லிம் தந்தைக்கும், சிந்தியா என்ற இந்துத் தாயாருக்கும் மகளாக சீனத் அமான் பிறந்தார். அவரது தந்தை,[2] முகல்-எ-அசாம் மற்றும் பகீஜா போன்ற வெற்றித் திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். அவர் சீனத்துக்கு பதிமூன்று வயதான போது இறந்தார். அவரது தாயார் மிஸ்டர். ஹெய்ன்ஸ் என்ற ஜெர்மானியரை மணம் புரிந்து கொண்டார்; ஜெர்மனியக் குடியுரிமை பெற்று, அவரை ஜெர்மனிக்கு அழைத்துச் சென்றார். சீனத் தமது பதினெட்டாவது வயதில் இந்தியாவிற்கு திரும்பினார்.

மும்பையில் செயின்ட் சேவியர் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்ற பின், மாணவர் உதவித் தொகையுடன் தனது படிப்பைத் தொடர கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்சிலுள்ள தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இந்தியாவிற்கு திரும்பியதும், அவர் முதலில் பெமினா பத்திரிகையில் பத்திரிகையாளராகப் பணியாற்றினார். பின்னர் வடிவ அழகியாகப் பணியாற்றினார். அவர் வடிவ அழகியாக விளம்பரம் செய்தவற்றுள், 1966ல் வெளியான தாஜ்மகால் தேநீர் மற்றும் டெலிவிஷன் எக்ஸ் ஆகியவற்றின் அறிமுக விளம்பரங்களும் அடங்கும். 1970 இல் மிஸ் இந்தியா போட்டியில் மூன்றாவது வெற்றியாளராக; பின்னர் மிஸ் ஆசியா பசிபிக் பட்டத்தை வென்றார்.

திரைப்படத்துறை வாழ்க்கை தொகு

அமானின் கவர்ச்சியை வெளிப்படுத்தும் புதுமையான தோற்றம் அக்கால கட்டத்தில் பழமைசார் நட்சத்திரங்களினின்றும் மாறுபட்டு இருந்தது. காதலிகளாகவும், கீழ்ப்படியும் அடக்கமான மனைவிகளாகவும் கதாநாயகிகள் திரையில் தோற்றமளித்த காலகட்டத்தில், வேலை இல்லாத காதலனைக் கை விட்டுவிட்டு கோடீஸ்வரனை நாடிச் சென்ற சந்தர்ப்பவாதி- (ரோட்டி கப்டா அவுர் மக்கன்) , ஒரு தொழிலைத் தொடர்ந்து செய்வதற்காக தனது கருவைக் கலைக்கத் துணியும் பேராசை கொண்ட பெண் (அஜ்னபி) , மகிழ்ச்சியுடன் ஹூக்கா பிடிக்கும் பெண் (மனோரஞ்சன்) , பற்றுகளைத் துறந்த ஹிப்பி (ஹரே ராம ஹரே கிருஷ்ணா), தன் தாயாரின் முன்னாள் காதலரையே காதலிக்கும் பெண் (பிரேம் சாஸ்திரா) , கோபக்கார நொண்டிக் கணவனுக்கு வாழ்க்கைப்பட்டும் பிறருடன் கள்ளத்தொடர்பு கொள்ளும் பெண் (துண்ட்) போன்ற சம்பிரதாயங்களுக்கு முரண்பட்ட பாத்திரங்களில் அமான் நடிக்க வைக்கப்பட்டார். இந்தப் பாத்திரங்களுக்கு ஈடாக, சோரி மேரா காம் , ச்சைலா பாபு, தோஸ்தானா மற்றும் லவாரிஸ் போன்ற மரபு சார்ந்த திரைப்படங்களிலும் அவர் நடித்தது, இந்திய சினிமாவில் ஒரு திருப்புமுனையாகப் பலராலும் கருதப்பட்டது.

ஆரம்பம் தொகு

1971ல் ஒ.பி ரல்கனின் ஹுல்சுள படத்தில், ஒரு சிறு வேடத்தில் நடித்ததிலிருந்து அமானின் திரைப்பட வாழ்க்கைத் தொடங்கியது. இரண்டாவதாக ஹங்காமா படத்தில் (1971), பாடகர் கிஷோர் குமாருடன் நடித்தது, வெற்றி பெறவில்லை.

தேவ் ஆனந்த் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா (1972) படத்தில் சகோதரி வேடத்தில் நடிக்க சஹீடாவிற்கு (அவரது பிரேம் பூஜாரி படத்தில் இரண்டாவது கதாநாயகி) வாய்ப்பளித்தார். அந்த இரண்டாம் நிலைக் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை அறியாமல் சஹீடா தனக்கு முதல்நிலைக் கதாபாத்திரம் (முடிவில் மும்தாஜ் நடித்தது) வேண்டுமென்று கோரி வாய்ப்பை மறுத்து விட்டார். கடைசி நிமிடத்தில் அவருக்கு பதிலாக அமான் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

ஹரே ராம ஹரே கிருஷ்ணா படத்தில் அமான், ஜேனிஸ் என்பவராக நடித்து ஆர். டி. பர்மனின் "தம் மரோ தம்" (புகை பிடி நன்றாக புகை பிடி), பாடல் வாயிலாகப் பெரும் புகழ் பெற்றார். அவர் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது[3] மற்றும் சிறந்த நடிகைக்கான BFJA விருதும் பெற்றார்.[4] 1970களில் , தேவ் ஆனந்த்-சீனத் ஜோடி பல படங்களில் நடித்தனர்: அவை ஹீரா பன்னா (1973), இஷ்க் இஷ்க் இஷ்க் (1974), பிரேம் சாஸ்திரா (1974), வாரன்ட் (1975), டார்லிங் டார்லிங் (1977) காலாபாஸ் (1977) ஆகியனவாகும். இவற்றுள், வாரன்ட் படம் மிகப்பெரிய வர்த்தக வெற்றி பெற்றது.

"யாதோன் கி பாராத் " படத்தில் கிதார் ஏந்திய பெண்ணாகத் தோன்றி அவர் 'சுராலியா ஹாய் தும்னே ஜோ தில் கோ' (பின்னணி பாடியவர் ஆஷா போன்ஸ்லே) என்று பாடும் போது அவரது இடையழகு அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. 1970களில் வெளிவந்த அனைத்து இந்தி திரைப்பட பத்திரிகைகளின் அட்டைமுகப்பில் அவர் படம் வந்தது. 1976 டிசம்பரில், சினி ப்ளிட்ஸ் பத்திரிகை தொடங்கப்பட்ட போது அதன் முகப்பு அட்டையில் சீனத் அமான் படம் வெளியிடப்பட்டதே அச்சமயத்தில் அவருக்கு இருந்த புகழுக்குச் சான்றாகும். மேலும், புகழ் பெற்ற ஸ்டார் டஸ்ட் பத்திரிகையில் எப்போதும் விரும்பப்பட்ட அட்டைப்பட நாயகியாக அவர் திகழ்ந்தார்.

1970களில் பிற்பாதி தொகு

சீனத் அமான், தனது பிற்கால நடிப்பு வாழ்க்கையில் பி. ஆர். சோப்ரா, நசிர் ஹுசைன், சக்தி சமந்தா, மனோஜ் குமார், மற்றும் மன்மோகன் தேசாய் ஆகியோரின் படங்களிலும் நடித்து வெற்றி பெற்றார். 1978ல், ராஜ் கபூரின் சத்யம் சிவம் சுந்தரம் (1978) படத்தில் அவர் நடித்தார். கதைக் கரு உடலழகை விட ஆன்மா மிகக்கவர்ச்சியானது என்ற எதிரிடையான கருத்தைப் பற்றியதாக இருந்தாலும், கபூர் அமானின் பாலுணர்வுக் கவர்ச்சியை காட்சிப்பொருளாக வெளிப்படுத்தினார். அதிகமாகக் கவர்ச்சி காட்டியதற்காக கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டாலும், பின்னாளில் அத்திரைப்படம் ஜீனத்தின் புகழை மேலும் மேம்படுத்தியது மட்டுமல்லாமல், அது ஒரு கலைப்படம் என்றும் சிறப்படையாளம் பெற்றது. அமான் அப்படத்திற்காக மிகச்சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டார்.

கிருஷ்ணா ஷாவின் ஷாலிமார் (1978) திரைப்படத்தில், அமானுடன் தர்மேந்திரா மற்றும் சர்வதேச நட்சத்திரங்களான ரெக்ஸ் ஹாரிசன், சில்வியா மைல்ஸ் ஆகியோர் நடித்தும், அமெரிக்காவிலும் இந்தியாவிலும் அது தோல்வியைத் தழுவியது. சத்யம் சிவம் சுந்தரம் மற்றும் ஷாலிமார் படங்களின் வசூல் வருமானம் குறைந்தால் 1978 வருடம் அவருக்கு தோல்வி ஆண்டாக அமைந்தது. ஆனால் டான் திரைப்படம் அவரது மீட்சிக்கு உதவி, தொழில் வாழ்க்கையை உயர்ந்திடச் செய்தது. ஷாலிமார் படப்பிடிப்பின் இடையிலே மரணம் அடைந்த படத்தின் தயாரிப்பாளர் நாரிமன் இரானிக்கு அவர் உதவ எண்ணியதால் படத்திற்காக ஊதியம் எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை. அவரது மேற்கத்தியபாணியில் பழிவாங்கும் நோக்குடைய வீரதீர கதாநாயகி பாத்திரம் படத்தின் பெரும்வெற்றிக்கு உரிய பங்கினை அளித்ததால், தனது ரசிகர்களிடம் மீண்டும் வரவேற்பைப் பெற்றார். பர்வீன் பாபி மற்றும் டினா முனிம் போன்ற மேற்கத்தியபாணி நாயகியர்கள் 1970களின் பிற்பகுதியில் அவரது அடிச்சுவட்டைப் பின்பற்றினர். அமன் தொடர்ந்து வெற்றிப்படங்களான தரம் வீர், ச்சைலா பாபு ,மற்றும் தி கிரேட் கம்ப்ளேர் ஆகியவற்றில் நடித்தார்.

1980கள் தொகு

1980களில் பல நட்சத்திரங்கள் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்கும் போக்கு நீடித்ததால், அமான் கதாநாயகன் சார்புடைய படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்தார். இந்தப்போக்குக்கு மாற்றாக பி.ஆர்.சோப்ராவின் 'இன்சாப் கா தராசு படத்தில் கற்பழிப்புக்கு இலக்காகி நீதி தேடும் பெண்ணாக அவர் நடித்ததற்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுபெறுவதற்குப் பரிந்துரை செய்யப்பட்டார். இந்தப்படத்தை தொடர்ந்து முக்கோண காதல் கதையான குர்பானி ,அலி பாபா அவுர் 40 சோர் ,தோஸ்தானா (1980), மற்றும் லாவாரிஸ் (1981) ஆகியவை வெற்றி பெற்றன.

"பந்தன் குச்சி தாகோன் க", "யாடன் கி கசம்", "பாத் பன் ஜாயே " & "நமும்கின்" போன்ற பெண்கள்-சார்பான கதைக்கரு கொண்ட படங்களில் அவரது நடிப்புத்திறன் விமர்சகர்களின் பாராட்டுதல்கள் பெற்றன. ஆனாலும் இதில் எந்த ஒரு படமும் அக்காலகட்டத்தில் பெரும்வெற்றி பெறவில்லை. 1989ல் வெளிவந்த, நீதிமன்றக் கதைக்களம் கொண்ட "கவஹி" திரைப்படத்தில் அவர் இறுதியாக கதாநாயகியாக நடித்தார்.

1990கள் & 2000கள் தொகு

ஒரு பத்தாண்டுக்குப் பின்னர் வெள்ளித்திரைக்கு வந்து போபால் எக்ஸ்பிரஸ் படத்தில், ஒரு சிறிய குணச்சித்திர வேடத்தில் நடித்தார். மேலும் பூம் (2003), ஜான லெட்ஸ் பால் இன் லவ் (2006), சௌரஹேன்(2007), {2}அக்லி ஆர் பக்லி {/2}(2008) & கீதா இன் பாரடைஸ்(2009).படங்களில் சிறு பாத்திரங்களில் தொடர்ந்து நடித்தார்

2004ல், மும்பையில் செயின்ட் அண்ட்ரூ அரங்கத்தில் நடத்தப்பட்ட த கிராஜுவேட் என்னும் நாடகத்தில் திருமதி ராபின்சன் என்ற பாத்திரத்தில் அவர் தோன்றினார்.

B4U டிவி நடத்திய "ஜீனத்துடன் உரையாடல்" என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும் கரன் ஜோகர் தொகுத்து வழங்கிய காபி வித் கரன் நிகழ்ச்சியில் ஹேமா மாலினியுடன் பங்குகொண்டார்.

2008ல், நடந்த ஜீ சினி விருதுகள் வழங்கும் விழாவில் ஜீனத்தின் திறமைக்காகவும் மற்றும் ஹிந்தி சினிமாவிற்கு அவர் அளித்த பங்களிப்புக்காகவும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பெற்றார்.

சொந்த வாழ்க்கை தொகு

அப்துல்லா படம் எடுக்கப்பட்ட சமயம் சஞ்சய்கானை (அப்பாஸ்) சீனத் மணம்புரிந்து கொண்டார். அத்திரைப்படம் முடிவுறும் காலத்தில், கொலாபா தாஜ் மஹால் ஹோட்டலில் நடந்த ஒரு தனிவிருந்தில் அவர் கலந்து கொண்ட போது, சஞ்சய் மற்றும் அவரது மனைவி சாரின் அவரைத் தாக்கியதில், அவரது விழி மோசமாக காயமடைந்தது- இந்த சம்பவத்தில் விருந்தினர் எவரும் தலையிடவில்லை .[5]

1980களில் அவர் மசார் கான் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு அஜான், சஹான் என்ற இரு மகன்கள் உள்ளனர். மசார்கான் 1998 செப்டெம்பரில் சிறு நீரகச் செயலிழப்பால் இறந்தார். இன்று, அமான் தனது இரண்டு மைந்தர்களுடன் வசித்து வருகின்றார். பல சமூக நிகழ்ச்சிகளில் தோன்றுகிறார், திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவிலும் பங்கு கொள்ளுகின்றார், வெள்ளித்திரையில் அரிதாகவே தென்படுகின்றார்.

விருதுகளும் அங்கீகாரங்களும் தொகு

  • 1972 - ஹரே ராம ஹரே கிருஷ்ணா படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது.
  • 1972 -BFJA விருதுகள்,மிகச்சிறந்த நடிகை ஹரே ராம ஹரே கிருஷ்ணா படத்திற்காக.
  • 1978 - மிகச்சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரை சத்யம் சிவம் சுந்தரம்
  • 1980 - மிகச்சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரை இன்சாப் கா தராசு
  • 2003 - பாலிவுட் விருதுகள் 'வாழ்நாள் சாதனையாளர் விருது'- வசீகரம் நிறைந்த வாழ்நாள் .[6]
  • 2006 - எட்டாவது வருடாந்திர பாலிவுட் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் [7][8]"இந்தியாவின் அசையும் பட தொழில்துறைக்கு சீரிய பங்களிப்பு விருதுகள்"
  • 2006 - வாழ்நாள் சாதனையாளருக்கான ஜீ சினி விருது

குறிப்புதவிகள் தொகு

  1. Gulzar; Nihalani, Govind; Chatterji, Saibal (2003). Encyclopaedia of Hindi Cinema. Popular Prakashan. பக். 108. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8179910660. 
  2. இணையத் திரைப்பட தரவுத்தளத்தில் சீனத் அமான்
  3. முதல் பிலிம்ஃபேர் விருதுகள் 1953
  4. "69வது & 70வது வருடாந்திர ஹீரோ ஹோண்டா BFJA விருதுகள் 2007". Archived from the original on 2008-02-08. பார்க்கப்பட்ட நாள் 2010-02-10.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-05-21. பார்க்கப்பட்ட நாள் 2010-02-10.
  6. லக்ஷ்மன் ,கணேஷ் எஸ்.பாலிவுட் விருதுகள் 2003 டிரம்ப் தாஜ் மஹால் அட்லாண்டிக் சிட்டி, NJ பரணிடப்பட்டது 2008-12-04 at the வந்தவழி இயந்திரம் .
  7. "ராஜேஷ் கண்ணா, ஜீனத் அமன் கவுரவப்படுத்தப்படுதல் பரணிடப்பட்டது 2009-01-07 at the வந்தவழி இயந்திரம்". பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்திய
  8. ராஜேஷ் கண்ணா மற்றும் ஜீனத் அமன் - பாலிவுட் விருதுகள் வழங்கும் விழாவில் கவுரவப்படுத்தப்படுதல்

மேலும் படிக்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனத்_அமான்&oldid=3754866" இலிருந்து மீள்விக்கப்பட்டது