டென்மார்க் சண்டை
டென்மார்க் சண்டை (Battle of Denmark) என்பது இரண்டாம் உலகப் போரின் போது இசுக்கேண்டிநேவியாவில் நிகழ்ந்த ஒரு சண்டை. இதில் நாசி ஜெர்மனியின் படைகள் டென்மார்க்கைத் தாக்கிக் கைப்பற்றின. நாசி ஜெர்மனியின் நார்வே படையெடுப்பு நடவடிக்கையான வெசெரியூபங் நடவடிக்கையின் ஒரு பகுதியான இது வரலாற்றில் நிகழ்ந்துள்ள தரைப்படைத் தாக்குதல்களில் மிகக் குறுகிய காலத்தில் நிகழ்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.
டென்மார்க் சண்டை | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
டென்மார்க் படையெடுப்பு வரைபடம் |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
டென்மார்க் | ஜெர்மனி | ||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
பத்தாம் கிரிஸ்டியான் வில்லியம் வெய்ன் பிரியோர்[1] | லியோனார்ட் காபிஸ்க்[2] | ||||||||
பலம் | |||||||||
14,500 பேர்[3] [4] நான்கு வான்படை இசுகுவாடிரன்கள் | 31வது ஹோஹேரேஸ் கொமாண்டோ[5] 170வது மற்றும் 198வது காலாட்படை டிவிசன்கள் 11வது தானியங்கி காலாட்படை பிரிகேட் லுஃப்ட்வாஃபே: 10வது வான்படை கோரின் 527 வானூர்திகள்[6] |
||||||||
இழப்புகள் | |||||||||
16 பேர் கொல்லப்பட்டனர் 20 பேர் காயமடைந்தனர்[3] 25 வானூர்திகள் நாசம் | 203 மாண்டவர் / காயமடைந்தவர்[7] 2 பேர் கைது செய்யப்பட்டனர் 12 கவச ஊர்திகள் 4 டாங்குகள் சேதம் 1 வானூர்தி[8] |
செப்டம்பர் 1, 1939ல் நாசி ஜெர்மனியின் போலந்து படையெடுப்புடன் இரண்டாம் உலகப் போர் துவங்கியது. ஆனால் மேற்கத்திய நேச நாடுகள் உடனடியாக ஜெர்மனியைத் தாக்கவில்லையாதலால் ஐரோப்பிய நிலக்களத்தில் பெரிய மோதல்கள் எதுவும் ஏப்ரல் 1941 வரை நிகழவில்லை. இக்காலத்தில் இசுக்கேண்டிநேவியா நாடான நார்வே அச்சு மற்றும் நேச கூட்டணிகளில் சேராமல் நடுநிலை நாடாக இருந்தது. இரு தரப்புக்கும் உதவுவதில்லை என்ற நிலையைக் கொண்டிருந்தது. நார்வேயின் நார்விக் துறைமுகம் வழியாக சுவீடன் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரும்புத் தாதுக்கள் நாசி ஜெர்மனியின் போர் முயற்சிக்குத் தேவைப்பட்டன. ஆனால் நார்வே நடுநிலையுடன் இருக்கும் வரை தடையின்றி அதைப் பெறமுடியாது என்று அந்நாட்டைத் தாக்கிக் கைப்பற்ற இட்லர் முடிவு செய்தார். நார்வே நாட்டைத் தாக்க டென்மார்க்கில் உள்ள படைத்தளங்கள் தேவைப்படுமென்பதால் டென்மார்க்கையும் தாக்கிக் கைப்பற்ற முடிவு செய்தது ஜெர்மனி. மேலும் டென்மார்க்கைக் கட்டுப்படுத்தினால் வான்பாதுகாப்பு பிணையத்தை வடக்கு திசையில் நீட்டித்து பிரிட்டனிலிருந்து ஜெர்மனி மீது குண்டுவீச வரும் குண்டுவீசி வானூர்திகளைத் தடுக்கலாம் என்று ஜெர்மானிய வான்படை (லுஃப்ட்வாஃபே) தலைமையகம் கருதியது. இக்காரணங்களால் டென்மார்க் மீது ஜெர்மானியப் படைகள் படையெடுத்தன.
தாக்குதல் நிகழப்போகிறதென்பதை டென்மார்க் அரசும் படைகளும் முன்னரே அறிந்திருந்தாலும் அதனை எதிர்கொள்ள எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. நாசி ஜெர்மனியின் படைபலத்துடன் ஒப்பிடுகையில் டென்மார்க்கின் படைபலம் மிகக்குறைவு. மேலும் போர் ஆயத்தங்களைக் காரணம் காட்டி ஜெர்மானியர்கள் போர் சாற்றிவிடலாம் என்ற அச்சத்தில் டென்மார்க் அரசு தனது படைகளைத் தயார் செய்யவில்லை. ஏப்ரல் 9, 1940 அன்று அதிகாலை 4.15 அளவில் ஜெர்மானியப் படைகள் டானிய எல்லையைக் கடந்து படையெடுப்பைத் துவங்கின. ஜெர்மானியத் தரைப்படை மூன்று திசைகளில் இருந்து டென்மார்க்கை ஊடுருவியது. தயார் நிலையில் இல்லாத சிறிய டானியப் படைப்பிரிவுகளால் அவற்றின் முன்னேற்றத்தைச் சிறிதும் தடுக்க முடியவில்லை. தரைப்படைத் தாக்குதலைத் தவிர வான்வழியாகவும், கடல்வழியாகவும் டென்மார்க்கில் தரையிறங்கிய ஜெர்மானியப் படைகள் பல முக்கிய இடங்களை விரைவில் கைப்பற்றின. டென்மார்க்கின் சிறு விமானப்படை லுஃப்ட்வாஃபே வானூர்திகளால் அதன் ஒடுதளங்களிலேயே அழிக்கப்பட்டுவிட்டன. காலை 6 மணியளவில் டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகன் கைப்பற்றப்பட்டது. டானிய மன்னர் பத்தாம் கிரிஸ்டியானும் அவரது அரசும் சரணடைவதாக அறிவித்தனர். தாக்குதல் தொடங்கிய சில மணி நேரத்துள் டென்மார்க் சரணடைந்ததால் இரு தரப்பிலும் இழப்புகள் வெகு குறைவாகவே இருந்தன. இதனால் அடுத்த ஐந்து ஆண்டுகள் டென்மார்க்கில் நாசி ஜெர்மனியின் ஆட்சி போராடித் தோற்ற பிற ஆக்கிரமிப்பு நாடுகளை விட மிக மிதமாகவே இருந்தது.
குறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- Dildy, Douglas C. Denmark and Norway 1940: Hitler's boldest operation : Osprey Publishing Ltd., 2007, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84603-117-5
- Hooton, E.R (2007). Luftwaffe at War; Gathering Storm 1933-39: Volume 1. London: Chervron/Ian Allen. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-903223-71-7 பிழையான ISBN.
- Hooton, E.R (2007). Luftwaffe at War; Blitzkrieg in the West: Volume 2. London: Chervron/Ian Allen. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85780-272-6.
- Lindeberg, Lars (1990) 9. april; De så det ske : Sesam, 1990. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7258-504-8