டெம்பரா ஓவியங்கள்
டெம்பரா ( Tempera ), முட்டை டெம்பரா என்றும் அழைக்கப்படுவது ஒரு ஓவிய முறை ஆகும். இது வரையும் ஓவியத்தை வேகமாக உலர்த்தும் ஓவிய வகையாகும். இது தண்ணீரில் கரையக்கூடிய வண்ண நிறமிகளைக் கொண்டிருக்கும். பொதுவாக இதில் முட்டையின் மஞ்சள் கரு, வெள்ளைக் கரு போன்ற பசையுள்ள பொருள் கலக்கப்பட்டிருக்கும். முட்டைக் கருவைக் கலந்து வரையப்பட்ட ஓவியங்கள் பொதுவாக டெம்பெரா என குறிக்கப்படுகிறது. டெம்பெரா ஓவியங்கள் நீண்ட ஆயுள் கொண்டவை. கி.பி. முதல் நூற்றாண்டு கலத்திய இந்த ஓவிய உதாரணங்கள் இன்னும் உள்ளன. இது கி.பி. 1500 இல் நெய்யோவியம் வந்தபிறகு அதன் முக்கியத்துவத்தை இழந்தது.
தமிழ்நாட்டில் டெம்பரா ஓவிய முறை நாயக்கர் காலத்தில் அறிமுகம் ஆனது. சுண்ணாம்பு கொண்டு வெள்ளையடிக்கபட்ட சுவரில் இயற்கை வண்ண நீர்கலவையை முட்டையின் வெள்ளைக் கரு போன்ற ஏதாவது ஊடகத்தில் குழைத்து அதைக்கொண்டு ஓவியங்கள் வரையப்பட்டன. இதில் செந்தூரம், மஞ்சள், கறுப்பு, சிவப்பு, நீலம் போன்ற அடிப்படை வண்ணங்களே இதில் நேரடியாக மிகுதியாக பயன்படுத்தப்பட்டன. இந்த ஓவியங்கள் கூடுதல் மினுமிடுப்போடு தென்படும். தமிழ்நாட்டில் மண்டபங்கள் அரண்மனைகள் போன்றவற்றில் வரைய முட்டைக் கரு பயன்படுத்தபட்டன. ஆனால் கோயில் போன்ற இடங்களில் வரைய முட்டை பயன்படுத்தப்படவில்லை. இவ்வகை ஓவியங்கள் தமிழ்நாட்டின் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில், பத்மநாபபுரம் அரண்மனை, திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் போன்ற இடங்களில் வரையப்பட்டுள்ளன. குறிப்பாக சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலின் ஏழுநிலை இராச கோபுரத்தின் உட்புற சுவர்களில் 156 அரிய ஓவியங்கள் உள்ளன.[1]