திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில்

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு எனும் ஊரில் அமைந்துள்ள ‌ஒரு பழைமையான வைணவக் கோயிலாகும். இது 108 வைணவத் திருத்தலங்களுள் 76 ஆவதாக வைத்து எண்ணப்படுகிறது. மேலும் இது 13 மலைநாட்டுத் திருத்தலங்களுள் ஒன்றாகும்.

ஆதிகேசவர் ஆலயம்

திருவட்டாறு - பெயர்க்காரணம்

தொகு

இந்த ஊாின் நடுவில் பள்ளி கொண்டிருக்கும் ஆதி கேசவ பெருமானின் திருவடிகளை வட்டமிட்டு பரளியாறு ஓடுவதால் இந்த ஊா் திருவட்டாறு எனும் பெயர் பெற்றது. மாராமலையில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி ஓடும் பறளியாறு மற்றும் வடகிழக்கு பகுதியாக ஓடும் கோதையாறும் ஒன்று சோ்ந்து மீண்டும் ஒரே ஆறாக உருவெடுக்கும் இடம் "மூவாற்று முகம்" (மூன்று + ஆறு + முகம்) எனப்படும். இவ்வாறு இறுதியில் அரபிக் கடலில் கலக்கிறது.

சங்ககாலம்

தொகு

நம்மாழ்வார் இவ்வூர்க் கோயில் பெருமாளை ‘வாட்டாற்றான்’ என்று குறிப்பிடுவதால் இந்த ஊரின் பழங்காலப் பெயர் வாட்டாறு என்பது தெளிவாகிறது. எனவே, சங்ககால அரசன் வாட்டாற்று எழினியாதன் இந்த ஊரினன் என்பதை உணரமுடிகிறது.

கோவிலின் அமைவிடம்

தொகு

கோவில், திருவட்டாறு பேருந்து நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவிலேயே உள்ளது. கோவிலுக்குச் செல்லும் வழியை உணர்த்தும் அறிவிப்புப் பலகை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 50 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 8°19'46.9"N, 77°15'57.6"E (அதாவது, 8.329680°N, 77.266003°E) ஆகும்.

கோவிலின் சிறப்புகள்

தொகு

இத்தலம் சேரநாட்டு முறையில் கட்டப்பட்டு உள்ளது. கோவிலுக்குள் நுழையும் ஆடவர் அனைவரும் இறைவனுக்கு மரியாதை தரும் பொருட்டு தங்கள் சட்டைகளைக் கழற்றியே நுழைய வேண்டும். ஆதிசேடனைப் படுக்கையாகக் கொண்டு அறிதுயிலில் ஆழ்ந்துள்ள பெருமாளின் திருமேனி 22 அடி நீளம் உடையது. இது 16,008 சாளக்கிராமக் கற்களைக் கொண்டு செய்யப்பட்ட சடுசக்கரை படிமம் என்று சொல்லப்படுகிறது. கருவறையில் மூன்று நிலைவாயில்கள் உள்ளன. திருமுகம், திருக்கரம், திருப்பாதம் எனும் 3 பகுதிகளை ஒவ்வொரு நுழை வாயிலிலும் காணலாம். திருமுக நிலைவாயிலில் அறிதுயிலில் ஆழந்துள்ள முகத்தையும் நீட்டிய இடக்கையையும் ஆதிசேடனையும் கருடாழ்வாரையும் காணலாம். திருக்கர வாயிலில் சின்முத்திரை காட்டும் வலக்கரத்தையும் சங்கு சக்கரம் உள்ளிட்ட ‌ஐம்படையினையும் காணலாம். தரையில் தாயாருடன் கூடிய பெருமாளின் உலோகத் திருமேனியும் வைக்கப்பட்டுள்ளது. கடைசியாக திருப்பாத வாயிலில் திருப்பாதங்களையும் இருவர் பயந்து ஒளிந்திருக்கும் சிலைகளையும் காணலாம். திருமுகம், திருக்கரம், திருப்பாதம் இவ‌ற்றை இதே வரிசைக்கிரமத்தில் தரிசிப்பது இக்கோவிலின் மரபு ஆகும். இக்கோயிலின் பிரதான வாயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.

போத்திமார்

தொகு

இக்கோயிலின் இன்னொரு தனித்துவம் இங்கு இறைவனுக்குப் பூசனைகள் செய்யும் போத்திமார் ஆவர். இவர்கள் பிராமணர்கள் அல்லர். இது மட்டுமின்றி, இக்கோயிலில் பிராமணர்கள் பூசை செய்ய இயலாது என்பதும் குறிப்பிடத்தக்கது.[சான்று தேவை]

ஒற்றைக்கல் மண்டபம்

தொகு

கருவறைக்கு முன் 18 அடி சதுரமும் 3 அடி உயரமும் உள்ள ஒற்றைக் கல்லினால் எழுப்பப்பட்டது ஆகும். கி.பி. 1604 ஆம் ஆண்டு வாக்கில் இம்மண்டபம் அமைய வீரரவி ரவிமர்மன் என்ற குலசேகரப் பெருமாள் பொருளுதவி செய்தான்.[1] பெருமாள் ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் வேளையில் ஒற்றைக் கல் மண்டபத்தைத் தொடக் கூடாது என்பது தொன்மரபு.

கலைவடிவங்கள்

தொகு

கோவிலின் வெளிப்பிரகாரம் நெடுகிலும் கையில் திருவிளக்கேந்தி நிற்கும் தீபலட்சுமிகளின் சிலை இருபுறமும் உள்ளது. பலிபீட மண்டபத்தின் இருபுறமும் ஒற்றைக் கல்லிலான பல கலைவடிவங்கள் உள்ளன. இவற்றுள் புல்லாங்குழல் ஊதும் கண்ணனின் இசையில் மயங்கி தாய்மாறிப் பால் குடிக்கும் விலங்கினக் குட்டிகளின் சிலையும் ஒன்று.

கல்வெட்டுகள்

தொகு

இக்கோவிலில் உள்ள கொடிக்கம்பத்தில் தமிழ்க் கல்வெட்டு ஒன்று உள்ளது. அத்தோடு கீழ்க்கண்ட அரசர்களைப் பற்றிய கல்வெட்டில் அவர்களின் ஆட்சிக்காலமும் சொல்லப்பட்டுள்ளது.[2]

மங்களாசாசனம்

தொகு

இத்தலத்தை நம்மாழ்வார் 11 பாடல்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். “உண்டு உறங்கி சாதாரண வாழக்கை வாழும் நாட்டினரோடு இருப்பதை விடுத்து இறைவ‌னின் பாடல்களைப் பலவாறாய்ப் பாடி பழவினைப் பற்றறுத்து ஆதிகேசவன் எனும் திருப்பெயருடன் எழுந்தருளியுள்ள நாரணன் திருவடிகளை இவ்வாற்றாட்டில் வணங்கிப் பிறப்பறுப்பேன் எனும் பொருளமைந்த பாடல் இவற்றுள் ஒன்றாகும்” .[3]

முக்கிய திருவிழாக்கள்

தொகு
  • ஆவணித் திருவோணம் (ஓணவில்)
  • ஐப்பசி, பங்குனித் திருவிழா
  • தை மாதம் களப பூசை (10 நாட்கள் நடைபெறும்)
  • மார்கழி மாதம் வைகுண்டஏகாதசி

கோயில் அமைப்பு

தொகு

இந்தக் கோவிலின் கட்டிடக்கலை கேரள மாநிலத்தைச் சார்ந்த கோவில்களைப்போல் மரத்தால் ஆன தூண்கள், கதவுகள் மற்றும் கூரைகள் கொண்டவையாகும்.

பரந்தாமன் இங்கே தமது பாம்புப் படுக்கையில் சயனித்தவாறு காட்சியளிக்கிறார் மேலும் அவரது தரிசனம் மூன்று வாசல்கள் வழியாக பக்தர்களுக்குக் கிடைக்கப்பெறுகிறது. சன்னிதிக்குள் ஐயன் ஆதிகேசவ பெருமாள் அருகில் பரமசிவன் வீற்றிருப்பதையும் பக்தர்கள் காணலாம். பல தீபலக்ஷ்மிகள் இங்கே வீற்றிருந்தாலும், ஒவ்வொன்றும் ஒரே போல் இருக்காமல் வேறுபட்டு காணப்படும்.

இங்கிருக்கும் ஒற்றைக்கல் மண்டபம் (ஒரே கல்லாலான பெரிய கூடம்) ஒரே கல்லால் செய்யப்பட்டதாகும், அதன் சுவர்கள் மட்டுமே 3 அடிகள் தடிமம் கொண்ட பாறையாகும், பார்வையாளர்களை ஆச்சரியத்தில் மூழ்கடிப்பதாகும். மேலும் ஊர்த்துவ தாண்டவம், வேணுகோபாலர், மன்மதர் மற்றும் ரதி தம்பதியர், லக்ஷ்மணர் மற்றும் இந்த்ரஜித் போன்றவர்களின் சிலைகள் மிகவும் அற்புதமாக அழகுடன் செதுக்கப்பட்டது கண்கொள்ளாக் காட்சியாகும். கோவிலை சூழ்ந்து சுவரில் வரையப்பட்டிருக்கும் வண்ண வண்ண சித்திரங்களுக்கும் இந்தக்கோவில் பெயர் பெற்றதாகும்.

மேலும் இக்கோவில் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலைவிட பழமையானதாகும்.[1] இந்தக் கோவிலின் அமைப்பு மற்றும் கட்டிடக்கலையை ஒரு மாதிரியாகக்கொண்டே திருவனந்தபுரத்தில் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆதிகேசவபெருமாள் கோவிலுக்கு நேர் எதிரிலேயே ஆற்றின் அருகாமையில் இன்னும் ஒரு சிறிய இறைவன் லக்ஷ்மி நரசிம்ஹனை வழிபடும் கோவிலும் நிலைகொண்டுள்ளது. ஆழ்வார்களில் தலை சிறந்தவரான நம்மாழ்வார் அவர்கள் ஆதிகேசவசுவாமியைப் புகழ்ந்து 11 பாசுரங்களை இயற்றியுள்ளார்.

தலபுராணம்

தொகு

பரந்தாமன் ஆதிகேசவபெருமாள் என்பது 'மிகவும் முக்கியமான நண்பனைக்' குறிப்பதாகும். தலபுராணங்களின் கூற்றின் படி பரந்தாமன் ஆதிகேசவபெருமாள் கேசி என்ற பெயருடைய அரக்கனை வீழ்த்தியதாக ஐதீகம். அரக்கனின் மனைவியானவள் கங்கை ஆறு மற்றும் தாமிரபரணி ஆற்றின் தேவதைகளை வணங்கி ஒரு பெரிய பிரளயத்தையே வரவழைத்து விட்டாள். ஆனால் இது ஒரு விதத்திலும் பயனளிக்கவில்லை மேலும் அவள் ஈசனிடம் சரணடைந்து விட்டாள். இப்படியாக வட்டமாக நதிகள் இந்த இடத்தை சூழ்ந்து கொண்டதால், இந்த இடத்திற்கு திருவட்டாறு என்ற பெயர் அமைந்தது.

திருவிழாக்கள் மற்றும் பிரசாதங்கள்

தொகு

வைகுண்ட ஏகாதசி இங்கே மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தக்கோவிலில் வழங்கப்படும் பிரசாதங்களான பால் பாயாசம் (பால் அமுது), அவல் மற்றும் அப்பம் மிகவும் பெயர் பெற்றதாகும் மற்றும் சுவை நிறைந்ததாகும். திருவனந்தபுரத்திலுள்ள ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலில் உள்ளதைப்போலவே இங்கே பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நிறைவேற்றப்படுகின்றன.

திருட்டு

தொகு

சயனக் கோலத்தில் இருக்கும் பெருமாளின் திருமேனியில் பொதிந்திருந்த 11.5 கிலோ எடையுடைய தங்கத்தினை 1992 ஆம் ஆண்டில் கோவில் பணியாளர்கள் கொள்ளையடித்தனர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இவர்கள் குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்டது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடப்பகுதி[தொடர்பிழந்த இணைப்பு]
  2. 108 வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு நூல்
  3. வாட்டாற்றானடி வணங்கி மாஞலப் பிறப்பறுப்பான் கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானை பாட்டாய பலபாடி பழவினைகள் பற்றறுத்து நாட்டாரோடு இயல்வொழிந்து நாரணனை நண்ணினமே. (3723) திருவாய்மொழி 10-6-2
  4. https://www.vikatan.com/news/crime/judgement-in-thiruvattar-athikesava-perumal-temple-news

வெளி இணைப்புகள்

தொகு