தகட்டுமூடி (சுடுகலன்)

தகட்டுமூடி (Frizzen) என்பது தீக்கல்லியக்க சுடுகலன்களின் உபயோகிக்கப்படும்; பின்பகுதியில் கீலால் பொருத்தப்பட்ட "L" வடிவ எஃகுத் துண்டு ஆகும்.[1] முதன்மை வெடிபொருள் திணிக்கப்பட்டிருக்கும் குழலில், காணப்படும் தொடுதுளைக்கு அருகில்; சிறிதளவு எரியூட்டும் வெடிமருந்துத் துகளைக் கொண்டிருக்கும் எரியூட்டிக்கிண்ணியை மூடும் வகையில் இது (தகட்டுமூடி) அமர்த்தப்பட்டிருக்கும். விசை இழுக்கப்படுகையில், சுத்தியல்—அதன் பற்றுகுறடில் பிடிக்கப்பட்டிருக்கும் தீக்கல்லோடு—தகட்டுமூடியின் முகப்போடு தீக்கல் சுரண்டும்படி முன்நகரும் அதேவேளையில்; தகட்டுமூடி முன்நகர்ந்து, கிண்ணியிலுள்ள வெடிமருந்தை திறந்து காட்டும். எஃகை சுரண்டும் தீக்கல், தீப்பொறிகளை உண்டாக்கி, அதை கிண்ணியில் விழச்செய்து, வெடிமருந்தை பற்றவைத்து, அந்த தீயை தொடுதுளை வழியாக குழலின் பகுதிக்கு கடத்தி, அதிலிருக்கும் முதன்மை வெடிபொருளை பற்றவைத்து, எறியத்தை  குழலை விட்டு வெளியே எறியும்.

தீக்கல் இயக்கம்

சொடுக்குஞ்சேவலில் எஃகுத் தகடும், கிண்ணிமூடியும் தனித்தனிப் பாகங்களாக இருந்தன. அடிக்கப்படும் எஃகுத் தகடின் முகப்பையும், கிண்ணிமூடியையும் ஒன்றிணைத்து தோன்றிய மேம்பட்ட வடிவம் தான் தகட்டுமூடி ஆகும்.  

கரிம (கார்பன்) அளவுகளை அதிகப் படுத்துவதன்மூலம், தகட்டுமூடியை கடினமாக்க முடியும். கொம்பு போன்ற பொருட்களில், தகட்டுமூடியை இட்டு, பல மணிநேரம் தீயில் வைப்பதால், எஃகின் கரிம அளவு அதிகரிக்கும். எஃகின் உருகுநிலைக்கு கீழ், வெப்பநிலை இருக்குமாறு பார்த்துக்கொள்வது முக்கியமாகும். இந்த செயல்முறையால் வெளிப்புறத்தை மட்டும் கடினமாக்கி, உள்ளகத்தை நீட்டுமையோடு வைத்திருந்து விரிசல்களை தவிர்க்கும். தொடர்ச்சியான பயன்பாட்டால், தீப்பொறி உண்டாக்கும் திறன், தகட்டுமூடியில் குறைந்துவிடும். மீண்டும் கடினப்படுத்தியோ, அல்லது அதை மாற்றியோ பயன்படுத்தலாம்..

மேற்கோள்கள் 

தொகு
  1. Dockery, Kevin (2007). Stalkers and Shooters: A History of Snipers. Berkley Trade. p. 47. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-425-21542-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தகட்டுமூடி_(சுடுகலன்)&oldid=3849495" இலிருந்து மீள்விக்கப்பட்டது