தீக்கல்லியக்கி (சுடுகலன்)
தீக்கல்லியக்கி (Flintlock, ஃபிளின்ட்லாக்) என்பது பொதுவாக தீக்கல்லை அடித்து தீமூட்டும் இயங்குமுறையை கொண்டிருக்கும் சுடுகலன் ஆகும். 17-ஆம் நூற்றாண்டில் அறிமுகமான, அசல் தீக்கல்லியக்கம் எனப்படும், குறிப்பிட்ட இயங்குமுறையையும் குறிக்கும் சொல் ஆகும். இதற்குமுன் இருந்த திரி, சக்கர, மற்றும் முந்தைய தீக்கல்-கொண்ட இயங்குமுறைகளின் மாற்றாக தீக்கல்லியக்கி ஆனது.
இரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த 'அசல் தீக்கல்லியக்கி', தட்டும் மூடியால் வழக்கொழிந்தது. பின்னர், 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பதிற்கும்-மத்தியிற்கும் இடையே வெடிபொதி சார்ந்த அமைப்புகள் தோன்றின.
வரலாறு
தொகு1610-ல் முடிசூடிய, மன்னர் பதிமூன்றாம் லூயீக்காக தீக்கல்லியக்க சுடுகலனை வடித்தார், பிரெஞ்சு அரசவையின் துப்பாக்கிக்கொல்லர் மறென் லெ பூர்ஸ்ஷூவா.[1] இருந்தாலும், ஏதோவொரு வகையில் தீக்கல்லை பயன்படுத்தி தீமூட்டும் இயங்குமுறைகளை கொண்ட சுடுகலன்கள், அரை நூற்றாண்டாக பயன்பாட்டில் தான் இருந்தன. சுடுகலனின் இயங்குமுறையின் மேம்பாடுகளான திரியியக்கம் முதல், சக்கரயியக்கம், முந்தைய தீக்கல்லியக்கங்கள் (சொடுக்கொலி இயக்கம், சொடுக்குஞ்சேவல்) வரை, ஒவ்வொரு வகையும், பயனுள்ள ஒரு மேம்பாட்டை கொண்டிருந்தது. பல அம்சங்களை ஒருங்கிணைத்து, லெ பூர்ஸ்ஷூவா உருவாக்கியது தான் அசல் தீக்கல்லியக்கம் என அறியப்பட்டது.
புதிய தீக்கல்லியக்க அமைப்பு விரைவில் பிரபலமடைந்து, 1630-ன் முடிவிலேயே, ஐரோப்பா முழுதும் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. முற்கால தீக்கல்லியக்க மசுகெத்துகளின் உதாரணங்களை, ரூபென்ஸின் (1622–25 காலத்தில் வரையப்பட்ட) "மேரி தெ' மெடிசி அஸ் பெல்லோனா" ஓவியத்தில் காணலாம்.
தட்டும் மூடி அமைப்பு அறிமுகம் ஆகும் வரை, தீக்கல்லியக்க ஆயுதங்கள் 19-ஆம் நூற்றாண்டின் மத்தியகாலம் வரை பொதுவான பயன்பாட்டில் இருந்தன.
துணை வகைகள்
தொகுதீக்கல்லியக்கிகள் எந்த சிறு ஆயுதமாகவும் இருக்கலாம்: நீள் துப்பாக்கி அல்லது கைத்துப்பாக்கி, புரியிடாத துமுக்கி அல்லது புரிதுமுக்கி, வாய்குண்டேற்றி அல்லது பின்குண்டேற்றி
சிறு கைத்துப்பாக்கி
தொகுதற்காப்பு ஆயுதமாகவும், இராணுவ ஆயுதமாகவும் தீக்கல்லியக்க கைத்துப்பாக்கிகள்பயன்படுத்தப்பட்டன. இவற்றின் திறன்மிகு வீச்செல்லை குறைவாகவே இருந்தன. சில கைத்துப்பாக்கிகள் புரியிடப்பட்டு இருந்தாலும், வழக்கமாக புரியிடாமல் தான் இருந்தன.
இதில் மிகச்சிறியது 6 இன்ச்சிற்கும் (15 செ.மீ.) குறைவான நீளமும்; மிகப்பெரியது 20 இன்ச்சிற்கும் (51 செ.மீ.) அதிகமான நிளமும் கொண்டிருக்கும். இதன் சிறிய ரகமானது, சட்டைப் பைக்குள் வைக்கும் அளவிற்கு இருக்கும். பெண்களும் எளிதாக பயன்படுத்த முடிந்தது.
அளவில் மிகப் பெரியவைகளை, குதிரையின் முதுகின்மீதுள்ள சேணத்திற்கு முன்பு, ஒரு தோலுறையில் வைக்கப்பட்டிருக்கும்.
மசுகெத்துகள்
தொகுதீக்கல்லியக்க மசுகெத்துகள், 1660 முதல் 1840 வரையிலான ஐரோப்பிய படைகளின் முக்கிய அங்கமாகும். ம மசுகெத்து என்பது, வாய்குண்டேற்ற புரியில்லாத நீள்துப்பாக்கி ஆகும், இதில் குண்டை ஏற்றி வேட்டைக்கும் பயன்படுத்தப் பட்டது.
இராணுவ தீக்கல்லியக்க மசுகெத்துகள் தோராயமாக 10 பவுண்டு எடை இருக்கும். வழக்கமாக, துப்பாக்கிக்கத்தியை பொருத்தும்படி தான், மசுகெத்துகள் வடிவமைக்கப்பட்டன.
புரிதுமுக்கிகள்
தொகுசில தீக்கல்லியக்கிகள் புரியிடப்பட்டன. குழலுள் வார்க்கப்பட்ட சுருளை வடிவ பள்ளங்கள், புரிதுமுக்கிகளை மேலும் துல்லியமாக்கி, நீண்ட திறன்மிகு வீச்செல்லையை அளித்தது – ஆனால் இறுகப்பொருந்தும் குண்டை வாய்குண்டேற்ற சுடுகலனில் ஏற்றுவதற்கு அதிக நேரம் பிடித்தது; அடுத்தடுத்து சுட்டபின், உபரி வெடிமருந்து குழலிலேயே படிந்துவிடும். இராணுவ மசுகெத்தியர்களால் போர்ச்சூழலின் இடையே, அடிக்கடி புரிதுமுக்கியின் குழலை சுத்தம் செய்ய, நேரம் எடுத்துக்கொள்ள முடியாது; மேலும், உத்திகள் கூடிநின்று சுடுதலை மையப்படுத்தி இருந்ததால், புரிதுமுக்கியின் அதீத துல்லியம் அவசியமற்றதாக ஆனது. அதனால் பெரும்பாலான இராணுவ தீக்கல்லியக்கிகள் புரியிடாதவை தான். புரியிட்ட தீக்கல்லியக்கிகளும் –குறிசுடுனர்கள், சிறுசமராட்கள், மற்றும் இதர துணை துருப்புகளால் – இராணுவத்தில் பயன்படுத்தப்பட்டது; ஆனால் பெரும்பாலும் புரியிட்ட தீக்கல்லியக்கிகள் வேட்டையாட தான் பயன்படுத்தப்பட்டன.
பல்லெறிவு தீக்கல்லியக்க ஆயுதங்கள்
தொகுபல குழல்கள்
தொகுமீள்குண்டேற்ற நேரம் தேவை என்பதால் (புரியிடாத, வாய்குண்டேற்ற மசுகெத்தை மீள்குண்டேற்ற, கைதேர்ந்தவருக்கு கூட 15 வினாடிகள் ஆகும்[2]), அடுத்தடுத்த வெடிப்புகளுக்காக, தீக்கல்லியக்கிகள் சிலநேரம் இரண்டு, மூன்று, நான்கு அல்லது அதற்கும்மேலான குழல்களுடன் இருக்கும். இவ்வகை வடிவங்களை உருவாக்க அதிகம் செலவு ஆவதோடு, நம்பகமற்றதாக இருந்தன.
ஒற்றை குழல்
தொகுசில அடுத்தடுத்து சுடும் புரிதுமுக்கிகள், பல்லெறிவு ஒற்றைக்குழல் கைத்துப்பாக்கிகள், மற்றும் பல்லெறிவு ஒற்றைக்குழல் சுழல்-கைத்துப்பாக்கிகளும் செய்யப்பட்டன.
பின்னடைவுகள்
தொகுநவீன ஆயுதங்களுடன் ஒப்பிடும்போது, தீக்கல்லியக்கிகள் அதிக குளறுபடிகளை கொண்டவை. இதில் இயக்கத்தவறுகள் ஏற்படுவது வாடிக்கையானதே ஆகும். தீக்கல்லை சரியாக பராமரித்தல் வேண்டும், மழுங்கிய தீக்கற் துண்டினால் அவ்வளவாக தீப்பொறிகளை உருவாக்க இயலாது, இது இயக்கத்தவறு ஏற்படும் விகிதத்தை அதிகரிக்கும். தகட்டுமூடி அல்லது வெடிமருந்தில் உள்ள ஈரப்பதம், துப்பாக்கியை வெடிக்காமல் தடுத்துவிடும், இது இன்னொரு பிரச்சனை. அப்படியென்றால், தீக்கல்லியக்க ஆயுதங்களை மழை அல்லது ஈரமான வானிலையில் பயன்படுத்த இயலாது.
எதிர்பாராத வெடிப்பும், தீக்கல்லியக்கிகளில் உள்ள இன்னொரு பிரச்சனை. குழலுள் இருக்கும் எஞ்சிய தணல், அடுத்த குண்டேற்றத்தின் வெடிமருந்தையும், பற்றவைத்து விடலாம். இதை தவிர்க்க, எஞ்சியிருக்கும் (வெடி)மருந்து முழுமையாக எரியும் நேரம் வரை காத்திருந்து, அதன்பிறகு அடுத்த சுடுதலை மேற்கொள்ளலாம். குழலுள் குத்துகம்பியால் குத்துவதாலும் இந்த தணலை அணைக்கலாம். போர்க்களத்தில் உள்ள வீரர்களால், இதுபோன்ற முன்னெச்சரிக்கை விடயங்களை கடைப்பிடிக்க முடியாது. அவர்களால் எவ்வளவு வேகமாக சுட முடியுமோ, அவ்வளவு வேகமாக செயல்பட்டாக வேண்டும். அப்படியானாலும் ஒரு நிமிடத்திற்கு மூன்றிலிருந்து நான்கு முறை மட்டுமே சுட முடியும். இவ்வளவு அவசர கதியில் குண்டேற்றி சுடுவது, எதிர்பாராத வெடிப்பை வேலும் அதிகரிக்கும்.
ஒரு தீக்கல்லியக்கியை சுடுகையில், முன்வாக்கில் சன்னவாயில் இருந்தும், பக்கவாட்டில் தொடுதுளையில் இருந்தும் அதிக அளவில் தீப்பொறிகள் உமிழும். கூடிநின்று சுடுகையில், ஒருவரின் தீப்பொறியானது, அடுத்தவர் (குண்டேற்றும்போது, அவரின்) வெடிமருந்தை பற்றவைக்காமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும்.
தீக்கல்லியக்கியில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து விரைவில் குழலை மாசுபடுத்திவிடும் பண்பை கொண்டிருந்தது, புரிதுமுக்கிகளில் பிரச்சனை ஏற்படுத்தின. ஒவ்வொரு முறை சுடும்போதும், அது குழலை மேலும் மாசு படுத்தி, ஆயுதத்தில் குண்டேற்றுவதை மேலும் மேலும் கடினமாக்கியது. குழல் மோசமாக மாசடைந்து இருந்தாலும், சுடுநர் குண்டை குழலின் பின்பகுதி வரை செலுத்தி, அமர்த்தி ஆகவேண்டும். வெடிமருந்திற்கும் குண்டிற்கும் நடுவில் காற்றிடைவெளி இருப்பது, மிகுந்த ஆபத்து ஆகும், இது குழலையே வெடிக்கச் செய்துவிடும்.
தீக்கல்லியக்கியில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து, கந்தகத்தை கொண்டிருந்தது. பயன்பாட்டிற்கு பின்பு ஆயுதத்தை சரியாக சுத்தம் செய்யாவிடில், எஞ்சியிருக்கும் வெடிமருந்தானது காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி, அதை கந்தகத்தோடு சேர்த்து வேதிவினை புரிந்து, கந்தக அமிலத்தை உண்டாக்கும். இந்த அமிலம், துப்பாக்கியின் குழல், மற்றும் இயக்க அமைப்புகளை அரித்துவிடும்.
இயங்குமுறை
தொகு- கூர்மையான தீக்கல்லை இறுகப்பற்றி இருக்கும் சுத்தியலை அரை-சுத்தி நிலைக்கு சுற்றப்படும். அரை-சுத்தி நிலையில், எதிர்பாராத வெடிப்பை தவிர்க்க, பிடிப்பான் ஒரு பாதுகாப்பு காடியில் மாட்டப்பட்டு இருக்கும்.
- வழக்கமாக வாய் வழியாக; குப்பியில் உள்ள வெடிமருந்தையும், அதையடுத்து ஈய குண்டையும் குழலுக்குள் இட்டு, குத்துகம்பியால் குத்தித் திணித்து, ஆயுதத்தை சுடுநர் குண்டேற்றுவார்.
- மாவுப்பொடி போன்ற வெடிமருந்தை, எரியூட்டியாக சிறிதளவு கிண்ணியில் இட்டு, தகட்டுமூடி மூடப்படும்.
துப்பாக்கி இப்போது "எரியூட்டியிட்டு, குண்டேற்றிய" நிலையில் உள்ளது. வேட்டைக்கும், போரிற்கும் செல்லும்போது, இந்த நிலையில் தான் எடுத்துச் செல்லப்படும்.
சுடுவதற்கு:
- சுத்தியலில் இருக்கும் பாதுகாப்பு காடியை விடுவித்து, அரை-சுத்தி நிலையில் இருக்கும் சுத்தியல், மேலும் சுற்றப்பட்டு முழு-சுத்தி (முழுதாக பின்னிழுக்கப்பட்ட) நிலையில் வைக்கப்படும்.
- துப்பாக்கியை சமமட்டதில் வைத்து, விசை இழுக்கப்படுவதன் மூலம், தீக்கல்லை பிடித்திருக்கும் சுத்தியல் விடுவிக்கப்படும்.
- கிண்ணி மூடியாக செயல்படும், தகட்டுமூடியை தீக்கல் அடிக்கும் அதே வேளையில்; தகட்டுமூடி திறந்து, எரியூடித் துகளை வெளிக்காட்டும்.
- தகட்டு-மூடியுடனான தீக்கல்லின் உராய்வு, தீப்பொறிகளை உண்டாக்கி, கிண்ணியில் உள்ள எரியூட்டித் துகள்களில் ( அதாவது, வெடிமருந்தில்) விழச்செய்யும்.
- துகள்கள் பற்றிக்கொண்டு, அந்த தீயானது, சிறுதுளை வழியாக குழலுக்கு கடத்தப்பட்டு, அங்கிருக்கும் முதன்மை வெடிபொருளும் பற்றி, துப்பாக்கியை வெடிக்கச்செய்யும்.
பிரித்தானிய அரசப்படையும், அமெரிக்க விடுதலைப் படையும் காகித வெடிபொதியை கொண்டு ஆயுதங்களை குண்டேற்றினர்.[3] இந்த சிறிய காகித உறையில், வீரருக்கு தேவையான வெடிமருந்தும், குண்டும் எளிதில் கிடைக்கப்பெற்றது. காகித வெடிபொதியை கொண்டு தீக்கல்லியக்கியை குண்டேற்ற, ஒரு வீரர் கீழ்வருவனவற்றை செய்வார்,
- சுத்தியலை, அரை-சுத்தி நிலைக்கு நகர்த்துவார்;
- பல்லால் கடித்து, வெடிபொதியை கிழித்து திறப்பார்;
- அதிலிருக்கும் பாதி வெடிமருந்தை, (எரியூட்டியாக) கிண்ணியில் நிரப்புவார்;
- கிண்ணியில் நிரப்பிய எரியூட்டியை சிந்தாமல் இருக்க, தகட்டுமூடியை மூடுவார்;
- மீதமுள்ள வெடிமருந்தை சன்னவாயிற்குள் கொட்டி, வெடிபொதியை அதில் திணிப்பார்;
- குத்துகம்பியை எடுத்து, குண்டையும் வெடிபொதியையும், குழலின் பின்பகுதி வரை குத்தி நகர்த்துவார்;
- குத்துகம்பியை அதனிடத்தில் வைப்பார்;
- ஆயுதத்தை தோளில் வைப்பார்.
பிறகு, ஆயுதம் முழு-சுத்தி நிலையில் வைக்கப்பட்டு, சுடப்படும்.
-
ஒரு தீக்கல்லியக்கி சுடப்படுகிறது
-
பற்றவைப்பின் தொடர் வரிசை
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Pistols: An Illustrated History of Their Impact" by Jeff Kinard. Published by ABC-CLIO, 2004
- ↑ Dennis E. Showalter, William J. Astore, Soldiers' lives through history: Volume 3: The early modern world, p.65, Greenwood Publishing Group, 2007 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-313-33312-2.
- ↑ Day of Concord and Lexington (French, 1925) p. 25 note 1. See also pp. 27-36.