வெடிபொதி
வெடிபொதி என்பது உலோக, காகித, அல்லது நெகிழியால் ஆன உருளை வடிவ உறையின் உள்ளே - ஓர் தோட்டா அல்லது குண்டு, ஓர் உந்துபொருள் (வழக்கமாக புகையில்லா மருந்து அல்லது வெடிமருந்து) மற்றும் ஓர் எரியூட்டி ஆகியவற்றை கொண்டுள்ள, சுடுகலனின் அறையில் சரியாகப் பொருந்தும் ஒரு போர்த்தளவாட பொருள் ஆகும்[1]. மின்சாரம்/மோதலால் தூண்டப்பட்டு, சிறிய வெடிப்பை உண்டாக்கும், ஒரு வேதியியற் கலவை தான் எரியூட்டி. இது உறையின் அடியில் மையம், அல்லது விளிம்பு பகுதி, அல்லது ஊசியடி வெடிபொதியில் உள்ளது போல் துருத்தம் ஆகவும் இருக்கலாம். தயாரிப்பாளர்கள் உறையிலா வெடிபொதி என்ற இலக்கை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கின்றனர். தோட்டா இல்லாத வெடிபொதியை வெற்று என்பர். முற்றிலும் செயலற்ற (உந்துபொருள் மற்றும் எரியூட்டி இல்லாத) ஒன்றை போலி என்பர்.
ஒரு வெடிபொதியை, "தோட்டா/குண்டு" என தவறாக குறிப்பிடுவது இயல்பாகி விட்டது.
வடிவம்
தொகுநோக்கம்
தொகுஒரு வெடிபொதி வெடிக்கும் அறையை முழுதும் ஆக்ரமித்துக் கொள்ளும். ஒரு அடிப்பான் எரியூட்டியை அடித்து, பற்றவைக்கும். அந்த எரியூட்டும் வேதிச்சேர்மம் வெப்பப் பரிமாற்றத்தால் எரியும் (அதாவது, விரைவாக எரியும்).
எரியும் மருந்தில் இருந்து வெளிப்படும் வாயுக்கள், பொதியுறையை அழுத்தத்திற்கு உள்ளாக்கி, விரியச்செய்து அறையோடு இறுகப் பற்றிக்கொள்ள வைக்கும். இந்த உந்துவாயுக்கள் தோட்டாவின் அடிப்பகுதியை அழுத்தும். இந்த அழுத்தத்தின் காரணமாக, தோட்டா குழலைவிட்டு வெளியே பாயும். தோட்டா குழலைவிட்டு வெளியேறிய பின், அறையின் அழுத்தம் வளிமண்டல அழுத்தத்திற்கு குறைந்துவிடும். அறையில் இருந்த அதீத அழுத்தத்தால் விரிந்து இருந்த பொதியுறை, இப்போது லேசாக சுருங்கும். இது அறையில் இருக்கும் பொதியுறையை நீக்குவதை எளிதாக்கும்.
பொருட்கள்
தொகுபித்தளை, குறைந்த அரிமானம் கொண்டுள்ளதால், பொதியுறை இதில் செய்யபடுகிறது.
பித்தளை மட்டுமல்லாது, எஃகு, அலுமினியம் ஆகியவற்றால் ஆன பொதியுறை உள்ளன.
நெகிழி உறைகள் பொதுவாக சிதறுதுமுக்கியில் பயன்படுத்தும் குண்டுபொதியில் பயன்படுத்தப் படுகிறது.
முற்கால வெடிபொதிகளில் காகித்தால் ஆன உறையும் பயன்பாட்டில் இருந்தது.
விவரக்குறிப்புகள்
தொகுஓர் வெடிபொதியின் விவரக்குறிப்புகள் பின்வருமாறு: கழுத்து அளவு, தோட்டாவின் எடை மற்றும் கேலிபர், உச்சகட்ட அழுத்தம், மொத்த நீளம், பொதியுறையின் விட்டமும் கூம்புதலும், விளிம்பு வகை, முதலியன.
தோட்டாவின் விட்டம் (கேலிபர்), ஒரு இன்ச்சின் பின்னமாக (வழக்கமாக 1/100 அல்லது 1/1000), அல்லது மில்லிமீட்டரில் அளக்கப்படும். பொதியுறையின் நீளமும் இன்ச்சு அல்லது மில்லிமீட்டரில் தான் அளக்கப்படும்.
நடுவடி வெடிபொதி
தொகுதுப்பாக்கியின் அடிப்பான், வெடிபொதியின் அடிப்பகுதியில் நடுவில் உள்ள எரியூட்டியை அடித்து பற்றவைப்பதால், இவ்வகையை நடுவடி வெடிபொதி என்கின்றனர். உலகளாவிய விளையாட்டுக்கான வெடிபொதிகளில், பெரும்பாலான நடுவடி பித்தளை உறைகள் பாக்ஸர் எரியூட்டிகளை பயன்படுத்துகின்றன. வழக்கமான மீள்குண்டேற்ற கருவிகளைக் கொண்டே, பாக்ஸர் எரியூட்டிகளை எளிதாக அகற்றவும், மாற்றவும் இயலும்.
சில ஐரோப்பிய மற்றும் ஆசிய (இராணுவ மற்றும் விளையாட்டுக்கான) வெடிபொதி உற்பத்திகளில், பெர்டான் எரியூட்டிகள் பயன்படுத்தப் படுகின்றது.
விளிம்படி வெடிபொதி
தொகுதுப்பாக்கியின் அடிப்பான், வெடிபொதியின் அடிப்பகுதியில் உள்ள விளிம்பை அடித்து நொறுக்கி எரியூட்டியை பற்றவைப்பதால், இவ்வகையை விளிம்படி வெடிபொதி என்கின்றனர்.
அரை-தானியக்க மற்றும் சுழல்துப்பாக்கி வெடிபொதிகள்
தொகுபெரும்பாலான சுழல் துப்பாக்கிகளில் விளிம்புடைய வெடிபொதி தான் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வகை வெடிபொதியின் அடியில் உள்ள விளிம்பு, பொதியுறையை விட பெரியதாக இருக்கும்.
கிட்டத்தட்ட எல்லா அரை-தானியக்க கைத்துப்பாக்கியின் வெடிபொதி "விளிம்பற்றது" (விளிம்பு அற்றது) தான், இன்னும் சொல்லப்போனால் விளிம்பின் விட்டம், பொதியுறையின் விட்டத்தை ஒத்து இருக்கும்.
மேலும் "அரை-விளிம்புடையது" எனப்படும் சில வடிவங்களில், விளிம்பின் விட்டம், பொதியுறையின் விட்டத்தைவிட சற்றே பெரிதாய் இருக்கும். ஆனாலும் இவை விளிம்பற்ற வடிவம் போலவேதான் செயல்படும்.
சில வெடிபொதிகள் விளிம்பின் விட்டம், பொதியுறையின் விட்டத்தைவிட சிறிதாய் இருக்கும், இவைகளை "குறு-விளிம்பு" உடையவை என்பர்.
-
விளிம்புடைய வெடிபொதி
-
விளிம்பு அற்ற 9மிமீ பாரபெல்லாம் கைத்துப்பாக்கியின் வெடிபொதிகள்
-
அரை-விளிம்புடைய .32 ஏ.சி.பி கைத்துப்பாக்கியின் வெடிபொதிகள்
-
குறு-விளிம்பு உடைய .50 ஜி.ஐ (இடது), விளிம்பு அற்ற .45 ஏ.சி.பி (வலது) - ஓர் ஒப்பீடு
தோட்டா வடிவ வகைகள்
தொகு- கவசந் துளைப்பி: எஃகு அல்லது தங்குதன் கலப்புலோகத்தால் ஆன கடினமான தோட்டா. மெல்லிய ஈய மேலுறையை இது கொண்டிருக்கும். இந்த ஈய மேலுறை, குழலின் தேய்மானத்தை குறைப்பதற்காக உள்ளது.
- முழு உலோக மேலுறை: முழுதாக பித்தளை, அல்லது தாமிரத்தால் சூழப்பட்ட ஈய உள்ளகத்தால் ஆனது.
- தட்டைமுனை ஈயத் தோட்டா (Flat Nose Lead)
- கிளேசர் திடகுண்டு (Glaser Safety Slug)
- சிதறுதுமுக்கி திடகுண்டு (Shotgun slug)
- மொத்த உலோக மேலுறை (Total Metal Jacket)
மீள்குண்டேற்றுதல்
தொகுசில சுடும் ஆர்வலர்கள், ஏற்கனவே சுடப்பட்ட பித்தளை, நெகிழி உறைகளை மீண்டும் குண்டேற்றுவர். ஒரு அழுத்தி மற்றும் ஒரு ஜோடி அச்சுகளை கொண்டு, ஒருவர் வடிவத்தை மாற்றலாம், வெடிமருந்தினால் அதை மீள்நிரப்பலாம் மற்றும் புதிதாக ஓர் தோட்டாவை அதில் பதிக்கலாம். புதிய வெடிபொதியின் விலையைவிட, பாதி விலையிலேயே ஒருவரால் இதை செய்ய முடியும்.
உறையிலா வெடிபொதி
தொகுவெடிபொதியின் எடை, மற்றும் விலையை குறைப்பதற்கான முயற்சியே உறையிலா வெடிபொதி ஆகும். இது தொடர்ச்சியாக சுடும் துப்பாக்கிகளின் இயக்கத்தை எளிதாக்குகிறது, ஏனெனில் சுட்ட பிறகு காலி உறையை நீக்கும் அவசியமே இல்லையே. அதிக உற்பத்திச் செலவு, எளிதில் உடையக்கூடியது போன்ற சில களையப்படாத பிரச்சனைகளால் தான், இதன் பயன்பாடு முன்வடிவம், மற்றும் குறைந்த-சக்தி சுடுகலனுடன் சுருங்கிவிட்டது.
முக்கோணபொதி
தொகுமுக்கோணபொதி (Tround) என்பது, பெயரில் குறிப்பிடப்பட்டது போல, இதன் உறை முக்கோண வடிவில் இருக்கும். 1958-ஆம் ஆண்டு, டேவிட் டார்டிக் என்பவரால், அவரின் டார்டிக் 1100 மற்றும் டார்டிக் 1500 ரக துப்பாக்கிகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டது தான் இந்த முக்கோணபொதி.
வெற்று வெடிபொதி
தொகுவெற்றுபொதி என்பது, எறியம் இல்லாமல், வெடிபொருள் மட்டுமே உடைய வெடிபொதி ஆகும்.
வெற்றுகள், ஒருவரை சுட்டதுபோல் ஏமாற்றுவதற்கும், பயிற்சியின்போதும் பயன்படுத்தப் படுபவை.
போலிப்பொதி
தொகுபோலிப் பொதி என்பது எரியூட்டி இல்லாத, உந்துபொருள் இல்லாத; முற்றிலும் செயலற்ற ஓர் பொம்மை போல் இருப்பதாகும். ஆயுதத்தின் செயல்பாட்டை சோதிக்கவும், குழுவினரின் பயிற்சிக்காகவும் மட்டுமே இது உபயோகிக்கப்படும்.
மெக்-பொரெக்
தொகுபளிச்சிடும் வண்ணத்தை கொண்டுள்ள மெக்-பொரெக், என்பது ஒரு செயலற்ற பொதி ஆகும். ஒரு உண்மையான வெடிபொதியை துப்பாக்கிக்குள் ஏற்றுவதை தவிர்க்க, இந்த மெக்-பொரெக்கை ஏற்றி வைப்பர். இதனால் எதிர்பாராத விபத்துகளை தவிர்க்க இயலும். வெளியே இருந்து பார்க்கும் பொது ஒரு L-வடிவ துருத்தம் தெரியும், இதன்மூலம் சுடுநரும் மற்றவரும் ஆயுதத்தின் நிலையை உடனே அறிவார்கள்.
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Sparano, Vin T. (2000). "Cartridges". The Complete Outdoors Encyclopedia. Macmillan. p. 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-312-26722-3.