மூடியடி இயக்கம் (சுடுகலன்)

துப்பாக்கிகளில் பொறிமுறை

மூடியடி இயக்கம் (ஆங்கிலம்:Caplock, Percussion Lock; கேப்லாக், பெர்குஷன்லாக்) என்பது, எஃகால் ஆன தகட்டுமூடியை தீக்கல்லால் அடிப்பதற்கு பதிலாக, தட்டும் மூடியை சுத்தியலால் அடித்து, முதன்மை வெடிபொருளை பற்றவைத்த; தீக்கல் இயக்கத்திற்கு அடுத்து வந்த சுடுகலன் தொழில்நுட்பம் ஆகும்.

ஒரு வழக்கமான மூடியியக்கி
ஸ்ப்ரிங்ஃபீல்டு மற்றும் என்ஃபீல்டு புரியிட்ட மசுகெத்துகளில் இருக்கும் மூடியடி இயக்கம்.

மூடியடி இயங்குமுறையைக் கொண்டு சுடும் துப்பாக்கியை "மூடியியக்கி" எனக்  குறிப்பிடலாம்.

முதல் நிலை, அடிப்படை மூடியடி இயக்கமானது, அருள்திரு. அலெக்சாந்தர் ஜான் ஃபோர்சைத் அவர்களால் உருவாக்கம் பெற்றது. அவரின் தீக்கல்லியக்க சிதறுதுப்பாக்கியின், கிண்ணியில் இருந்து உண்டாகும் புகையால், பறவைகள் உஷாராகி பறந்து தப்பித்தன.[1] இவரின் கண்டுபிடிப்பான, பல்மினேட்டால் எரியூட்டப்பட்ட சுடும் இயங்குநுட்பம் ஆனது, இப்பிரச்சனைக்கு தீர்வாக அமைந்தது. இதன்மூலம் கிண்ணியில் இருந்து வெளிப்படும், ஆரம்பகட்ட புகையை தவிர்த்தது மட்டுமல்லாது; விசை இழுப்பிற்கும், குண்டு சன்னவாயை விட்டு வெளியேறுவதற்கும், இடையேயான காலநேரத்தையும் குறைத்தது.

தீக்கல்லியக்கியை விட, மூடியியக்கிகள் நிறைய மேம்பாடுகளை கொண்டிருந்தன. மூடியியக்கிகள் குண்டேற்ற எளிதாகவும், எல்லா வானிலைக்கும் ஏற்றதாகவும், மற்றும் தீக்கல்லியக்கிகளை விட நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் விளங்கின. பல பழைய தீக்கல்லிய ஆயுதங்கள், மூடியடி இயக்கத்திற்கு பின்னர் மாற்றப்பட்டன.[1]

தீக்கல்லியக்கியில் இருக்கும் சுத்தியலை போலவே ஒரு சுத்தியலும், சிறிய தட்டும்-மூடியை தாங்கும் முளையையும் (சிலநேரம் இதை "கூம்பு" என்றும் சொல்வர்), மூடியடி இயக்கம் கொண்டிருக்கும். துப்பாக்கிக் குழலைச் சென்றடையும் வகையில், முளை ஒரு குழாயை கொண்டிருக்கும். Hg(ONC)2 என்ற வேதி வாய்ப்பாட்டைக் கொண்ட,[1] பாதரச பல்மினேட்டு என்ற வேதிச்சேர்மம் தட்டும்-மூடியில் இருக்கும். இது பாதரசம், நைட்ரிக் அமிலம், மற்றும் மதுசாரம் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. சுத்தியல் விசையால் விடுவிக்கப் படும்போது, அது மூடியை அடித்து, பாதரச பல்மினேட்டை வெடிக்கச்செய்யும். இந்த வெடிப்பில் இருந்து வெளிப்படும் தீ, முளையின் குழாய் வழியாக பயணித்து துப்பாக்கிக் குழலை அடைந்து, அங்கிருக்கும் முதன்மை வெடிபொருளை பற்றவைக்கும்.[1]

மேலும் பார்க்க 

தொகு

புற இணைப்புகள் 

தொகு

மேற்கோள்கள் 

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Fadala, Sam (17 November 2006). The Complete Blackpowder Handbook. Iola, Wisconsin: Gun Digest Books. pp. 159–161. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89689-390-1.[தொடர்பிழந்த இணைப்பு]