தங்க புத்தர் (சிலை)
தங்க புத்தர் ( Golden Buddha, அதிகாரப்பூர்வமா பெயர்: Phra Phuttha Maha Suwana Patimakon (Thai: พระพุทธมหาสุวรรณปฏิมากร), என்பது தங்கத்தாலான ஒரு புத்தர் சிலையாகும், இது 5.5 டன் (5,500 கிலோகிராம்) எடை கொண்டது. இது தாய்லாந்தின் பேங்காக்கின், வாட் ட்ராமிட் கோவிலில் அமைந்துள்ளது. இச்சிலை வரலாற்றின் ஒரு காலகட்டத்தில், அதன் உண்மையான மதிப்பை பிறர் அறியாமல் மறைக்கும்விதமாக அதன்மீது சாந்து பூசப்பட்டு சாராரண சிலையாக ஆக்கப்பட்டிருந்தது. இவ்வாறு இது கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் இந்த நிலையிலேயே அவ்வளவான முக்கியத்துவம் இல்லாத ஒரு புத்தர் கோயிலில் இருந்துள்ளது. 1955இல் இந்தச் சிலையை இடம்மாற்ற முனைந்தபோது அதன் மீதிருந்த பூச்சு உடைந்து உள்ளிருந்த தங்கம் வெளியே தெரிந்தது.
Phra Phuttha Maha Suwana Patimakon (พระพุทธมหาสุวรรณปฏิมากร) | |
![]() | |
இடம் | பேங்காக் வாட் ட்ராமிட் |
---|---|
வகை | புத்தர் சிலை |
கட்டுமானப் பொருள் | தங்கம் |
உயரம் | 3 மீட்டர்கள் (9.8 அடி) |
அர்ப்பணிப்பு | புத்தர் |
வரலாறு
தொகுஇச்சிலையின் தோற்றம் குறிந்த தெளிவான தகவல் இல்லை. இது 13ஆம் - 14ஆம் நூற்றாண்டின் சுகோத்தாய் இராச்சிய காலத்திய பாணியில் உள்ளது என்பதால் அவர்கள் காலத்தில் செய்யப்பட்டதாக இருக்கலாம், அல்லது அதற்கு சற்று பிற்பட்ட காலத்தைச் சேர்ந்ததாகவும் இருக்கலாம். ஏனென்றால் இந்த புத்தர் சிலையின் தலையானது முட்டை வடிவத்தில் உள்ளது. இ்வ்வடிவ புத்தர் சிலைகளை சுகோத்தாய் இராச்சிய காலத்தில் உருவாக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். சுகோத்தாய் கலைவடிவத்தில் இந்திய தாக்கம் உள்ளது[1] இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பல புத்தர் சிலைகள் நிறுவுவதற்காக பல நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இந்த தங்க புத்தர் சிலையின் சில பாகங்கள் இந்தியாவில் வார்க்கப்பட்டதாக இருக்கலாம்.[2]
1403இல், இந்தத் தங்கச் சிலையானது சுகோத்தாய் ராஜ்யத்திலிருந்து தாய்லாந்தின் இன்னொரு வலிமையான இராச்சியமான அயூத்தயா ராஜ்யத்துக்குக், கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.[3]
இந்த தங்க புத்தர் சிலையை அந்நியப் படையெடுப்பாளர்கள் கொள்ளையடித்துவிடக் கூடாது என்பதற்காக அதன் மீது சாந்து கொண்டு பூசி அதன்மீது வண்ணமயமான கண்ணாடிகள் பதிக்கப்படு, [1] அதனைச் சாதாரண புத்தர் சிலைபோல மாற்றினார்கள். இது 1767இல் பர்மியர்கள், அயூத்தயா மீது படையெடுத்து அந்த இராச்சியத்தை வீழ்த்துவதற்கு முன்னர் நடந்ததாக நம்பப்படுகிறது. அதன்பிறகு சிதைந்து போன அயூத்தயா இராச்சியத்தில் புத்தர் சிலையும் கேட்பாரின்றிக் கிடந்துள்ளது.
1801இல் தாய்லாந்து மன்னரான முதலாம் இராமா பாங்காக்கைத் தனது தலைநகராக அறிவித்து, அங்கே பல புதிய புத்த ஆலயங்களைக் கட்டச் சொன்னார். அந்த கோயில்களில் நாட்டில் உள்ள பழைய புத்தர் சிலைகள் பலவற்றையும் வைக்க உத்தரவிட்டார்.[3]
அதற்குப் பின் ஆட்சிக்கு வந்த அரசர் இரண்டாம் இராமா (1824-1851) பாங்காக்கின் வாட் சோட்டாநரம் என்ற புத்தர் கோயிலில் இந்தப் புத்தர் சிலையை நிறுவினார்.[4]
பிற்காலத்தில் வாட் சோட்டாநரம் கோயில் கைவிடப்பட்டு மூடப்பட்டது. 1935இல் இந்தப் புத்தர் சிலை, வாட் டிரைமிட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.[5] அச்சமயம் வாட் டிரைமிட்டு கோயில் அவ்வளவாக முக்கியத்துவம் இல்லதாத கோயிலாக இருந்தது (பாங்காக்கில் உள்ள மற்ற நூற்றுக்கனக்கான புத்தர் கோயில்கள் போல). கோயிலில் இந்தச் சிலையை வைக்க போதிய இடவசதி இல்லாததால் 20 ஆண்டுகள் ஒரு சாதாரண தகரக் கொட்டகைக்குள் வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையின் உண்மையான மதிப்பு சுமார் 200 ஆண்டுகள் வெளியில் தெரியாமல் இருந்தது.[6]
தங்கச் சிலை கண்டுபிடிப்பு
தொகு1954இல் அங்கே புதிய கோயில் ஒன்று எழுப்பப்பட்டது. அந்தக் கோயிலின் ஓரிடத்தில் இந்தப் புத்தர் சிலையை வைக்க முடிவு செய்தனர். அதன்பிறகு சரியாக என்ன நடந்தது என்பது குறித்து வேறுபட்ட தகவல்கள் உள்ளன. ஆனால் பெரிய கயிறுகளால் சிலையைக் கட்டித் தூக்கி கோயிலின் வாயிலை நோக்கிச் சென்றபோது கயிறு அறுந்தது, சிலை தரையில் விழுந்தது என்ற தகவல் சரியாக உள்ளது. கீழே விழுந்த புத்தர் சிலையின் ஒரு பகுதியில் உள்ள சாந்து பூச்சு சேதமடைந்து உள்ளே உள்ள பொன்மஞ்சள் பளபளப்பைக் காட்டியது. இதையடுத்து சிலையை ஆராய்ந்து பார்த்து தங்கம் என உறுதிசெய்தனர்.[3]
பின்னர் சிலையின் மேற்பூச்சை மேலும் மேலும் கவனமாக உடைத்தார்கள். அப்போதுதான் உள்ளே தங்கத்தாலான புத்தர் சிலை இருக்கிறது என்று தெரிந்தது. அதையடுத்து அச்சிலையை ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டன. அவை கோயிலில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதேபோல உடைக்கப்பட்ட அந்த மேற்பூச்சுகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சிலை மீது இருந்த பூச்சுகள் அனைத்து அகற்றப்பட்ட பிறகு இந்த தங்கச் சிலையானது மொத்தம் ஒன்பது இணைக்கப்பட்ட பாகங்களைக் கொண்டதாக இருந்தது. சிலையை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லும்போது பிரித்து எடுத்துச் செல்ல வசதியாக இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.[5]
பத்தர் பிறந்து இருபத்தைந்தாவது நூற்றாண்டுக்கு (2500 ஆண்டுகள்) நெருக்கமான காலத்தில் இந்த தங்க புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இது தாய் செய்தி ஊடகங்களில் பரபரப்பாக வெளியிடப்பட்டது. பல பௌத்தர்களால் இந்த நிகழ்வு அற்புதமானதாக கருதப்பட்டது.[3]
2010 பெப்ரவரி 14 அன்று வாட் டிரைமிட்டில் இந்தப் புத்தர் சிலைக்கென அழகான பெரிய கோயில் ஒன்று கட்டப்பட்டது. அதில் தங்க புத்தர் கண்டுபிடிப்பு குறித்த கண்காட்சி போன்றவற்றைக் கொண்டுள்ளது.[7]
பண்புகள்
தொகுஇந்தச் சிலையானது 3 மீட்டர் (9.8 அடி) உயரமும், 5.5 டன் எடையும் கொண்டது. இதை ஒன்பது துண்டுகளாக பிரிக்கலாம்.[7]
சிலையில் உள்ள தங்கமானது (18 காரட்) 250 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[8] புத்தரின் உடலில் 40% சுத்தத் தங்கம் கலந்திருக்கிறது. முகத்தில் 80%, முடியும் கொண்டையும் 45 கிலோ கிராம் எடைகொண்ட 99% சுத்தத் தங்கத்தால் செய்யப்பட்டிருக்கின்றன.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 McKenzie, Peter (2007-05-07). "The Golden Buddha and the Man Himself". Languageinstinct.blogspot.ca. Retrieved 2013-06-23.
- ↑ Buddhist Art Frontline Magazine (India), pg 71, May 13–26, 1989
- ↑ 3.0 3.1 3.2 3.3 History of Golden Buddha Thai Buddhist website
- ↑ "Phra Sukhothai Trimitr (Golden buddha)". Johnchocce.weebly.com. 1955-05-25. Retrieved 2013-06-20.
- ↑ 5.0 5.1 "The Golden Buddha Image". Teayeon.wordpress.com. 2006-12-15. Retrieved 2013-06-20.
- ↑ Miller (2005-06-02). "The Golden Buddha at Wat Traimit". The Buddhist Channel. Retrieved 2009-11-08.
- ↑ 7.0 7.1 7.2 "Temple of the Golden Buddha (Wat Traimit), Bangkok Best Tour". Thaiwaysmagazine.com. 2010-02-14. Retrieved 2013-06-23.
- ↑ "Golden Buddha Statue". Hillmanwonders.com. Retrieved 2013-06-20.
வெளி இணைப்புகள்
தொகு- Short video in 2007 பரணிடப்பட்டது 2013-08-27 at the வந்தவழி இயந்திரம்
- fotopedia.com பரணிடப்பட்டது 2010-08-16 at the வந்தவழி இயந்திரம் Another photo of the Golden Buddha
- Some more photos (before the move to the new building), and a history synopsis: "Wat Traimit, Bangkok, Thailand". Asian Historical Architecture (www.orientalarchitecture.com). Retrieved 2009-11-08.