தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி தஞ்சாவூர் பொம்மைகள் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
தஞ்சாவூர் பொம்மைகளில் தலை அசைகிறவாறு உள்ள பொம்மைகள் தலையாட்டி பொம்மைகள் எனப்படுகின்றன. தலையாட்டு பொம்மைகள், தாத்தா பாட்டி பொம்மை, செட்டியார் செட்டியச்சி பொம்மை என பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன.[1][2] இந்த பொம்மை தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்டது. எனினும் இந்த பொம்மை தமிழ்நாடு அரசின் புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் குண்டுசட்டி பொம்மையில் இருந்து வேறுபட்டது.
வேறு பெயர்கள் | செட்டியார்- செட்டியச்சி பொம்மை |
---|---|
வகை | களிமண் பொம்மைகள் |
நாடு | தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு |
காலம் | 16ம் நூற்றாண்டு–தற்போது |
இந்த தலையாட்டி பொம்மைகளும் நடன பொம்மைகளும் வேறு வேறாகும்.[3] நடன பொம்மைகளில் தலை, உடல், இடுப்பு பகுதி அனைத்தும் தனித்தனியே ஆடும் விதமாக உள்ளது. ஆனால் தலையாட்டி பொம்மையில் தலை மட்டுமே அசையும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த தலையாட்டி பொம்மைகளில் உடல்பகுதி பெரியதாகவும், கனமானதாகவும் செய்யப்படுகிறது. தலைப்பகுதி இலகுவாக எடைகுறைவாக செய்யப்படுகிறது. இதனால் காற்றில் தலைப்பகுதி மட்டும் அசைந்தாடும் வகையில் உள்ளது.
வகைகள்
தொகுதலையாட்டி பொம்மைகளில் தலையாட்டும் பரதநாட்டிய நடனப் பெண் பொம்மை, தலையாட்டும் குரங்கு பொம்மை, தலையாட்டும் சிறுவன் பொம்மை என சில வகைகள் உள்ளன. அனைத்தையும் விட தலையை ஆட்டும் வயதான தம்பதிகள் பொம்மை புகழ்பெற்றதாகும். இந்த இணை பொம்மைகளை செட்டியார்- செட்டிச்சி பொம்மை என அழைப்பர். இவை தாத்தா பாட்டி பொம்மை என்றும் கூறப்படுகிறது.
- தலையாட்டி சிறுவன் பொம்மை
- தலையாட்டி ஆண்டாள் பொம்மை
- தலையாட்டி குரங்கு பொம்மை
- தலையாட்டி ராஜா ராணி பொம்மை
- தலையாட்டி நவீன தம்பதிகள் பொம்மை
- தலையாட்டி பரதநாட்டிய நடனப் பெண் பொம்மை
தாத்தா பாட்டி பொம்மை
தொகுதாத்தா பாட்டி தம்பதியர் பொம்மை தஞ்சாவூர் பொம்மைகளில் புகழ் பெற்றதாகும். இவை செட்டியார்- செட்டிச்சி பொம்மை, செட்டியார் ஆச்சி பொம்மை என பலவாறு அழைக்கப்படுகிறது.
தாத்தா தொப்பை வயிற்றுடன் வலது காலை செங்குத்தாக மடக்கி அதன்மீது வலது கையை வைத் துள்ளார். திரிபுண்டகரம் எனும் மூன்று கோடுகளால் திருநீறு அணிந்து, சந்தன குங்கும பொட்டிட்டுள்ளார். கழுத்தில் ருத்ராட்சம், பல வண்ண மணி கொண்ட மாலையும் அணிந்துள்ளார். இரு வண்ண சால்வையை மேலாடையாகவும், வேட்டியை கீழாடையாகவும் அணிந்துள்ளார்.
பாட்டி முகத்தில் பொட்டிட்டு, காதுகளில் தோடுகளுடன், சேலையை ஆடையாக அணிந்துள்ளார். வலது கையால் பாக்கு வெத்தலை உரலினை இடிக்கிறார்.
வேலை செய்யும் விதம்
தொகுஉலக அளவில் தலையாட்டி பொம்மைகள் சுருள்கம்பி (ஸ்பிரிங்) கொண்டு செய்யப்படுபவையாக உள்ளன. ஆனால் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளில் உள்ள வடிவமைப்பு தனித்துவமானதாகும். இதில் கம்பியை வளைத்து குழி போன்ற அமைப்பு அடிபாகத்திலும், கிடைமட்டமாக உள்ள தலை பாகத்திலும் அமைக்கப்படுகிறது.
இந்த தலையாட்டி பொம்மைகள் தலை மற்றும் உடல் என இரண்டு பகுதிகளாக தயாரிக்கப்படுகின்றன. தலைப்பகுதி எடை குறைவாக செய்யப்படுகிறது. இதற்காக தலையின் சுற்றுப்பகுதி மட்டும் செய்யப்பட்டு, உள்பகுதி காலியாக வைக்கப்படுகிறது. தலையின் உள்பகுதியில் ஒரு கம்பி கிடைமட்டமாக பொருத்தப்படுகிறது. களிமண்ணால் அச்செடுக்கப்பட்ட உடல்பகுதி கனமாக தயாரிக்கப்படுகிறது. உடல்பாகத்தின் கழுத்துப் பகுதியில் இதய வடிவிலான கம்பி வைக்கப்படுகிறது. இதன் மேல் தலையின் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் கம்பி பொருந்துமாறு செய்தால் தலையாட்டி பொம்மையில் தலை மட்டும் லேசாக அசையும்.
இந்த செயல்முறையே நடன பொம்மைகள் தயாரிக்கவும் கையாளப்படுகிறது. எனினும் புகழ்பெற்ற பரதநாட்டிய நடன மங்கை பொம்மைகள் நான்கு பாகங்களைக் கொண்டுள்ளது. எனவே இது போன்ற கம்பி அமைப்பினை நான்கு முறை செய்ய வேண்டியுள்ளது.
படக்காட்சியகம்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "கொலு பொம்மைகள் விற்பனை படுஜோர்". Daily Thanthi. 22 செப்., 2022.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "நவராத்திரியில் கொலு வைக்க தயாராகி விட்டிர்களா!". Dinamalar.
- ↑ "தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை தயாரிக்கும் பெண்கள் : அயல்நாட்டினரை கவரும் 'டான்சிங் டால்'". இந்து தமிழ் திசை.