தனபால் (ஓவியர்)
எஸ். தனபால் (S. Dhanapal, 1919-2000[1]) ஒரு சிறந்த ஓவியராகவும் சிற்பியாகவும் ஆசிரியராகவும் அறியப்பட்டவர்.[2] . தென்னிந்தியாவின் நவீன ஓவிய சிற்ப இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார். சென்னை ஓவியக் கல்லூரிக்கும், அனைத்து இந்திய நவீன ஓவிய சிற்ப இயக்கத்திற்கும் பெரிய அளவில் பங்காற்றியவர். அவருடைய 60 ஆண்டு ஓவிய வாழ்க்கையில் அவரிடம் பயிற்சி பெற்று பிற்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய ஓவியர்கள் ஏராளம்.
தனபால் | |
---|---|
பிறப்பு | 1919 மயிலாப்பூர், சென்னை |
இறப்பு | 2000 |
பிறப்பும் படிப்பும்
தொகு1919 ஆம் ஆண்டில் சென்னை மயிலாப்பூரில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். இளம் அகவையிலேயே தந்தையை இழந்த தனபால் தாயால் வளர்க்கப்பட்டார். சிறுவனாக இருக்கும்போதே ஓவியத்தில் அவருக்கு நாட்டம் இருந்தது. தேவி பிரசாதுராய் சௌதுரி என்பவர் முதல்வராக இருந்து நடத்திய 'ஸ்கூல் ஆப் ஆர்ட் அண்டு கிராப்ட்சு' மாணவனாகச் சேர்ந்து பயிற்சி பெற்றார். 4 ஆண்டு காலப் பயிற்சி முடிந்த உடனேயே அதே கல்லூரியில் பணியில் சேர்ந்தார்.
பணிகள், விருதுகள்
தொகுசென்னை கலை மற்றும் கைவினைக் கல்லூரியில் 1940 முதல் 1977 வரை வேலை செய்து அதே கல்லூரியின் முதல்வராக ஒய்வு பெற்றார்[1]. தனபால் தொடக்கக் காலத்தில் வண்ண ஓவியங்களிலும் கோட்டுச் சித்திரங்களிலும் மேற்கத்திய நவீன சாயலுடன் தென்னிந்திய புராதன கிராமிய ஓவிய சிற்பங்களின் அழகியலைப் படைத்தார். அவருக்கென்று தனியாக ஒரு பாணி இருந்தது. அதன் மூலம் அவருடைய ஓவியங்கள் பிரபலம் அடைந்தன. பிற்காலத்தில் அவரது சிறந்த சிற்பங்கள் மூலமும் தேசிய அளவில் அவருடைய புகழ் பரவியது. 1962 இல் சிறந்த சிற்பத்திற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது[2]. 1980 இல் தில்லி லலித் கலா அகாதெமி தனபாலுக்கு 'பெல்லோ ஆப் தி அகாதெமி' என்னும் விருதை வழங்கியது[1][2].
அவரது புகழ்பெற்ற சிற்பங்கள் ஓவியங்கள் பலவும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள அருங்காட்சியகங்களில் இடம்பெற்றுள்ளன. அதேபோல் அவரால் உருவாக்கப்பட்ட பல தேசியத் தலைவர்கள், கலைஞர்கள், இலக்கிய மேதைகள் ஆகியோரின் உருவச் சிற்பங்கள் புகழ் பெற்றவை ஆகும். 1950-60 களில் செருமனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஓவியக் கண்காட்சிகளை நடத்தினார்.[1]தனபாலின் ஓவியங்களும் சிற்பங்களும் சென்னைத் தேசிய கலைக்கூடம், புது தில்லி நவீனக் கலை தேசிய காலரி, புதுதில்லி பாராளுமன்றம் ஆகிய இடங்களில் இடம்பெற்றுள்ளன.[1]
2007 ஆம் ஆண்டில் அவருடைய சிறந்த 52 ஓவியங்கள் இலண்டனில் உள்ள நோபிள் சேஜ் ஆர்ட் காலரியால் கவுரவிக்கப்பட்டது.
பிற துறை ஈடுபாடு
தொகுநாட்டியக் கலையிலும் தனபாலுக்கு ஆர்வம் ஏற்பட்டது. போலோனாத் என்னும் நாட்டியக் கலைஞரிடம் 'கதக்' வகை நாட்டியம் பயின்றார். சில ஆண்டுகள் நாட்டிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனக் கலைஞர் ஆனார். அண்ணா, கல்கி கிருட்டிணமூர்த்தி போன்றோர் தனபாலின் நாட்டியத் திறமையைக் கண்டு பாராட்டினர்[2]. அதேபோல் தோட்டக்கலையிலும் அவர் ஆர்வம் காட்டினார். பல அரிய வகை செடி கொடிகளைத் தம் வீட்டுத் தோட்டத்தில் வளர்த்தார். சிறப்பாக, 'போன்சாய்' வகை மரங்களை வளர்த்தார்[2].
இறப்பு
தொகுஓவியர் தனபால் 2000 ஆம் ஆண்டு காலமானார்[1]. அவர் இறப்பதற்குச் சில நாட்கள் முன்வரை அவரிடம் ஒரு இளைஞன் கலைப்பயிற்சி பெற்றார் என்பது அவர் ஒரு சிறந்த ஆசிரியராக விளங்கியதற்குச் சான்றாக அமையும்[2].
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகுசான்றுகள்
தொகு- நினைக்கப்பட வேண்டியவர்கள் (பன்னாட்டு தமிழ் மொழி அறக்கட்டளை-2002)
- எஸ். தனபால்
- Artists pay tribute to master sculptor