தமிழ்நாடு மாநில வரலாற்று ஆய்வு ஆவணக் காப்பகம்

தமிழ்நாடு மாநில வரலாற்று ஆய்வு ஆவணக்காப்பகம் அல்லது சென்னை ஆவணக் காப்பகம் (Madras Record Office) என்பது தமிழ்நாட்டின், சென்னையில் எழும்பூர் தொடருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள ஒரு ஆவணக்காப்பகமாகும்.

தமிழ்நாடு மாநில வரலாற்று ஆய்வு ஆவணக் காப்பகம்
Madras Record Office
தமிழ்நாடு மாநில வரலாற்று ஆய்வு ஆவணக் காப்பகம் is located in சென்னை
தமிழ்நாடு மாநில வரலாற்று ஆய்வு ஆவணக் காப்பகம்
Location within Chennai
மாற்றுப் பெயர்கள்Tamil Nadu Archives
பொதுவான தகவல்கள்
வகைஅரசு கட்டடங்கள்
கட்டிடக்கலை பாணிஇந்தோ சரசனிக்[2]
முகவரிஎண். 51, காந்தி இர்வின் சாலை, எழும்பூர், சென்னை, தமிழ்நாடு 600 008[1]
நகரம்சென்னை
நாடுஇந்தியா
ஆள்கூற்று13°04′35″N 80°15′37″E / 13.0764°N 80.2604°E / 13.0764; 80.2604
தற்போதைய குடியிருப்பாளர்Department of Archives & Historical Research
நிறைவுற்றது1909
செலவு2.25 இலட்சம்[3]
உரிமையாளர்தமிழ்நாடு அரசு
வடிவமைப்பும் கட்டுமானமும்
முதன்மை ஒப்பந்தகாரர்பி. லோகநாத முதலியார்
வலைதளம்
www.tnarchives.tn.gov.in

இங்கு 1640 முதல் தற்காலத்தில் வெளியான அரசாணைகள் வரை என அரிய ஆவணங்களும், 2.3 இலட்சம் நூல்களும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. சமூகவியல், பொருளாதாரம், பண்பாடு, தென்னிந்திய வரலாறு போன்ற தலைப்புகளின் கீழ் ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வு மாணவர்களுக்கு பயன்படுவதாக இவை உள்ளன. இந்த ஆவணக் காப்பகம் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்படுகிறது.[4]

வரலாறு

தொகு

கிழக்கிந்தியக் கம்பெனியின் சென்னைப் பிரிவானது, மாகாண ஆவணங்களை ஒரே இடத்தில் சேர்த்து வைப்பதன் இன்றியமையாமையினை உணர்ந்திருந்தது. அதன்படி சென்னை புனித ஜார்ஜ் கோட்டை ஆளுநர் வில்லியம் பெண்டிங்கு பிரபு, அரசாங்க நிருவாக ஆவணங்கள் வளர்ந்துகொண்டே வருவதால் இவற்றைப் பாதுகாப்பதற்கு ஒரு தனி அலுவலரை நியமிக்க வேண்டுமென்று ஒரு குறிப்பை எழுதிவைத்தார். அவருடைய பரிந்துரையின்படி, கோட்டைச் சதுக்கத்தின் வடக்கு மூலையில் பொ.ஊ. 1805இல் ஒரு கட்டடம் ஆவணங்களை வைப்பதற்காக ஒதுக்கப்பட்டது.

இந்திய அரசின் ஆவணப் பாதுகாப்பு அலுவலர் 1902ஆம் ஆண்டு உருவாக்கிய குறிப்புக் கருத்துரைகள், சென்னை அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டன. இதனை அடிபடையாகக் கொண்டு, சென்னை எழும்பூரில் 1909இல் இரண்டு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் செலவில் ஆவணக்காப்பகத்துக்கு இந்தோ சரசனிக் பாணியில் ஒரு கட்டடம் கட்டப்பட்டது. அந்த ஆவணக்காப்பகத்தின் அதிகாரியாக 1911ஆம் ஆண்டு தாடுவெல் (Dodwell) என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பினை அச்சிடுவதற்கு ஏற்பாடுகள் செய்தார். மாவட்ட விவரத் தொகுப்புச்சுவடிகள் (Gazette) உருவாக்குவதற்குகாகத் தனி அலுவலர் ஒருவர் 1926இல் பணி அமர்த்தப்பட்டார். இவ்வாவணக் காப்பகம் 1940ஆம் ஆண்டில் பிரித்தானிய ஆவணச் சங்கத்தின் நிறுவன உறுப்பினராயிற்று.

ஆவணக்காப்பகத்திற்கு, பொ.ஊ. 1867ஆம் ஆண்டின் அச்சகம், நூல்கள், பதிவுச் சட்டத்தின் கீழ் வரப்பெற்ற பழைய நூல்கள், 1952இல் மாற்றப்பட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட மாவட்ட விவரத்தொகுப்புச் சுவடிகள் திருத்தி அச்சிடப்படவேண்டுமென்று 1954இல் அரசு கட்டளை பிறப்பித்தது. ஆவணக் காப்பகத்தின் அலுவலர் பதவியானது இயக்குநர் என்று 1968ஆம் ஆண்டு பெயர் மாற்றப்பட்டது. இந்தக் காப்பகத்துக்கு மெட்ராஸ் ரெக்கார்டு ஆபீஸ் என்றுதான் முதலில் பெயர் சூட்டப்பட்டிருந்தது. இது 1973இல் ‘தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி’ என்று என்று பெயர் மாற்றப்பட்டது. 1930ஆம் ஆண்டிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் ஆவணங்களைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.[5] அதன் காரணமாகவே, சென்னைப் பல்கலைக்கழகத்தால் இக்காப்பகம் வரலாற்று ஆராய்ச்சி மையமாகவும் அங்கீகரிக்கப்பட்டது. இந்த ஆவணக்காப்பகத்துக்கு தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களிலிருந்தும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இருந்தும் ஆய்வு மாணவர்கள் வருகிறார்கள்.

ஆவணங்கள்

தொகு

தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் சிறந்த ஆவணங்கள் பல உள்ளன. தங்கத் தகட்டில் எழுதப்பட்ட சாசனம் ஒன்று பிரான்சிசுடே என்பவருக்குச் சென்னப்ப நாயக்கரால் 1639 சூலை 22 அன்று அளிக்கப்பட்டது. இதுவே சென்னை வரலாற்றின் முதல் ஆங்கில ஆவணமாகும். பிரான்சிசுடே என்பவராலேயே இதன் வரைவு உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் 1670ஆம் ஆண்டிற்கு முற்பட்ட இடச்சு, தேனிசு ஆவணங்களும் இக்காப்பகத்தில் உள்ளன. சென்னைப்பட்டின அரசரின் சாசனத்தின் மூலம், சென்னைக் கடற்கரையில் (Coromandal Coast) கோட்டையும் அரண்மனையும் கட்டிய பிறகு, ஆவணக் காப்பு என்ற சொல்லின் பொருள் விளங்கும் வண்ணம் ஆங்கில ஆவணங்கள் முறையாகத் தொகுக்கப்பட்டன.

இங்குள்ள ஆவணங்கள், வரலாறு நிருவாகத் தொடர்பான பல உண்மைகளை அறிய, சிறந்த கருப்பொருளான அடிப்படைச் சான்றுகளைக் கொண்டு திகழ்கின்றன. அவை இடச்சு ஆவணங்கள் (Dutch Records) மலையாளக் கடற்கரைப் பகுதியான கொச்சியில் இடச்சுக்காரர்களின் குடியேற்றம், கேரளத்தில் அப்போது ஆட்சிபுரிந்த உள்நாட்டு மன்னர்களுடன் இடச்சுக்காரர்கள் செய்துகொண்ட ஒப்பந்தங்கள், படேவியா - இலங்கை ஆட்சியாளர்களுடன் கடிதப் போக்குவரத்து முதலிய தகவல்களைத் தெரிவிக்கின்றன. பழைய மோடி மொழியில் எழுதப்பட்ட தஞ்சாவூர் அரசு ஆவணங்கள், தஞ்சை அரண்மனை, கோயில்களைப் பற்றிய நிதிநிலை அறிக்கைகள் தஞ்சை அரசரின் சொத்து, கடன் பற்றிய விவரங்கள், தஞ்சையில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடந்த நிருவாகம் தொடர்பான கடிதப் போக்குவரத்துகள் முதலிய தகவல்களைக் கொண்டவை. பாரசீக ஆவணங்கள் (Persian Records) பொ.ஊ. 18 - ஆம் நூற்றாண்டில் ஆற்காடு நவாப் ஆட்சிக்காலத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க பல நிகழ்ச்சிகளைக் கூறுகின்றன . இவற்றில் 26.04.1773 - ஆம் தேதி முதல் 29.02.1775 - ஆம் தேதி வரையில் வாலாசா நவாபு முகமது அலிகான் எழுதிய நாட்குறிப்புகளும் உள்ளன. பாண்டிச்சேரியில் பிரான்சு அதிபர் தூப்ளேயின் திவானாகப் பணியாற்றிப் புகழ்பெற்ற ஆனந்தரங்கம் பிள்ளை தமிழில் எழுதியுள்ள நாட்குறிப்புகள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை. இந்திய மக்களிடம், குறிப்பாகத் தமிழ் மக்களிடம் பிரஞ்சுக்காரர்களின் தொடர்பு, பழக்க வழக்கங்கள், தூப்ளேயின் அந்தரங்க வாழ்க்கை, அன்றாட நிருவாகம் முதலியவற்றை அறிய இந்த நாட்குறிப்புகள், சிறந்த அடிப்படைச் சான்றுகளாக விளங்குகின்றது. இந்த நாட்குறிப்புகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பெற்று, பன்னிரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் தமிழ்நாடு ஆவணக் காப்பக நூலகத்தில் ஏறக்குறைய 5,00,000 - க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. இவை 1873 - ஆம் ஆண்டு முதல் அச்சிடப்பட்டவை, தமிழக அரசு தலைமைச்செயலகத்திலிருந்தும் மாவட்ட ஆட்சியர்களிடமிருந்தும், அரசின் பல துறைத்தலைவர்களிடமிருந்தும் மாற்றப்பட்ட நூல்களும் அடங்கும். இந்த நூல்கள், தமிழகத்தின் வரலாறு, பண்பாடு, வாணிகம் ஆகியவற்றைக் கூறுகின்றன. 1859 - ஆம் ஆண்டு ஏ.சி. காட்டன் அறிக்கையில் வற்றாத நதிகளை இணைத்து நீர்வழிப் போக்குவரத்தை வளர்ப்பது பற்றிய சாத்தியக்கூறுகள் விளக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணங்கள், இவ்விருபதாம் நூற்றாண்டில் கங்கை - காவிரி நதிகள் இணைப்புத் திட்டம், கிருட்டிணா நதி நீரைத் தமிழகத்திற்கு கொண்டுவரும் திட்டம் ஆகியவை பற்றி இந்தியத் தேசியவாதிகளால் மிகுந்த அக்கரையுடன் கருதப்படுகின்றன. வரலாற்று ஆய்வுக்கு ஊக்கம் அளிப்பதற்காக ஆய்வுக் கூடம் நாள்தோறும் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் தமிழ்நாடு மாநில வரலாற்று ஆய்வு ஆவணக்காப்பகம் செயற்பட்டு வருகிறது.

இந்த ஆவணக் காப்பகத்தால் ஆவண அமுதம் என்ற காலாண்டிதழ் வெளியிடப்பட்டது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Archives and Historical Research Department Contacts". Archives and Historical Research. பார்க்கப்பட்ட நாள் 2017-11-30. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. Padmanabhan, Geeta (16 September 2014). "An impressive record" – via www.thehindu.com.
  3. Muthiah, S. (2015-05-17). "Madras Miscellany: Keeping the records straight" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/features/metroplus/madras-miscellany-keeping-the-records-straight/article7216529.ece. 
  4. "சென்னையின் அறிவுச் சுரங்கங்கள்!". 2023-08-22. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  5. செல்வ புவியரசன் (28 ஆகத்து 2018). "தேடுவார் இல்லாத தென்னிந்திய வரலாறு..." கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 30 ஆகத்து 2018.
  6. (in ta) ‘ஆவண அமுதம்’ இதழ்கள்: வரலாற்றைச் சொல்லும் பிரதிகள். 2024-03-17. https://www.hindutamil.in/news/opinion/columns/1216640-history.html.